நான் அதிகளவு நேசிப்பது
விதவைப் பூக்களைத்தான்!
அதனாலென்னவோ
மொட்டுக்கள் என் முற்றத்தில்
இன்னும் பூப்பெய்தவில்லை…
கன்னிப் பூக்கள்
கலர் கலராக தன்னை
அலங்கரித்த போதிலும்
அவ்வப்போது
தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை
நானறிவேன்!
பட்டாம் பூச்சியென்
வாசல் வந்தாலும்
தேன்சிட்டு எனைத்
தேடி நுகர்ந்தாலும்
என் விதவைப் பூக்கள்
ஒருகாலும் முகத்திரை அவிழ்த்ததில்லை…
அவை எனக்கே சொந்தமென்பதை
அவைகள் மறந்தது கூட
இல்லை
இருப்பினும் என்காதல்
எல்லாவற்றிற்கும் பொதுவானதுதான்..
ஆனால் கலர்ப் பூக்கள்
அதைக் கண்டு கொள்வதில்லை!
ஆதலால்
என்காதலை தனிப்பட்ட முறையில்
விதவைப் பூக்களிடம் கூறி
விடையும் பெற்றுவிட்டேன்
அன்றிலிருந்து அவை
ஆடைகளில் வர்ணங்கள்
தேடியதில்லை
அதலால்
பூவுடல் போர்த்திருக்கும்
நார் முனை அவிழ்ந்தாலோ
பூமானம் காக்க
தென்றல் புடவை இழந்தாலோ
அம்மனமாய் இருப்பதுதான்
அந்த பூக்களுக்கழகு!
என்
வெள்ளைப் பூக்களுக்கழகு!