எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம்.இது சிட்ரஸ் லிமன் என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இது தேசிக்காய் தோடம்பழம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய பூக்கும் தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. இதன் பழம் பொதுவாக அதன் சாற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது. எலுமிச்சைச் சாற்றை தண்ணீருடன் கலந்து, விருப்பத்துக்கேற்ப சீனி (சர்க்கரை) அல்லது உப்புடன் சேர்த்துப் பருகுவது உண்டு. இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை தருகிறது. இதன் pH அளவு 2 முதல் 3 வரை இருக்கும். இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல் சோதனைகளில் மலிவான அமிலமாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பல வகையான பானங்களும், இனிப்பு வகைகளும் ஆக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.இது இந்தியா, வடக்கு பர்மா, சீனா ஆகிய பகுதிகளிலேயே தோன்றியிருக்கலாம் என நம்பப்பட்டாலும், இதன் தோற்றம் பற்றிய சரியான தகவல்கள் தெரியவில்லை.
தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும், இது ஒரு தொற்றுநீக்கியாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் பல வகை நச்சுப் பொருட்களுக்கான நஞ்சு முறிப்பு மருந்தாகவும் பயன்பட்டது.
இது முதலில் பாரசீகத்துக்கும் அங்கிருந்து ஈராக் பின்னர் கிபி 700 அளவில் எகிப்துக்கும் அறிமுகமானது.தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி நகரில் தனியான எலுமிச்சைக்கான தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம் எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம் வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில் சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும் என்பதே இதன் சிறப்பாகும்.
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
பயன்கள்:
- எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.
- எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.