இணையச் சுட்டிகள்
இணையச் சுட்டிகள் இணையத்தின் முதுகெலும்பாகச் செயல் படுகின்றன என்று சொல்ல வேண்டும். ஒவ்வோர் இணையப் பக்கத்தையும் இணைத்து ஒரு பெரிய வலையத்தையே இணையச் சுட்டிகள் உருவாக்கியுள்ளன.
இணையச் சுட்டிகள் படங்கள், ஊடகங்கள், இரு இணையப் பக்கத்தின் இன்னொரு பகுதி மற்ற இணையத் தளங்களின் சுட்டிகள் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து வைக்கும் பாலமாக செயல்படுகின்றன.சுட்டிகள் ஓர் இணையதளத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால் அவற்றை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்க வேண்டும்.
பொதுவாக எல்லா இணைய உலாவிகளும் இணையச் சுட்டிகளை அடிக் கோடிட்டு நீல நிறத்திலும் ஒருவர் ஏற்கனவே பார்த்த சுட்டிகளை அடிக் கோடிட்டு ஊதா நிறத்திலும், அவர் பார்த்துக் கொண்டு இருக்கும் இணையச் சுட்டிகளை அடிக் கோடிட்டுச் சிவப்பு நிறத்திலும் காட்டும். ஆனால் சுட்டிகளை CSS-ஐக் கொண்டு அலங்காரமும் செய்யலாம்.
இழையின் முக்கியப் பண்பான href இணையச் சுட்டிகள் எங்கே செல்கிறது என்பதை நிர்வகிக்கும் பணியைச் செய்கின்றன.
ஆசிரியர்கள்< என்று எழுதினால், ஆசிரியர்கள் என்ற சொல் அந்தத் தளத்திற்குரிய authors.html என்ற இணையப் பக்கத்தைச் சென்று அடையும். ‘authors.html’என்ற பக்கம் இணையச் சுட்டி உள்ள உறையிலேயே (folders) இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் என்று எழுதினால், ஆசிரியர்கள் என்ற சொல் அந்தத் தளத்திற்குரிய ‘authors.html’ என்ற இணையப் பக்கத்தைச் சென்று அடையும் ‘../authors.html’ என்ற பக்கம் அதே இணையதள கோப்பகத்தில் அடுத்த கட்ட உறையில் உள்ளது என்பதை இரு புள்ளிகளும் சாய்வுக் கோடும் குறிக்கிறது.
கணியம் என்று எழுதினால், அது ஓர் இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லும்.
href lang என்னும் வரை முறை, அந்த இணையப்பக்கத்தின் மொழியைக் குறிக்கிறது. அதாவது
கணியம் என்று எழுதினால், அது அந்த இணையதளத்தின் மொழி தமிழ் என்பதைக் குறிக்கிறது.
media என்பது ஓர் இணையப் பக்கம் எந்த மாதிரியான வன்பொருள் கருவியுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. அந்த வன்பொருள் ஓர் அச்சுப் பொருள் இயந்திரமாகவோ, சாமர்த்திய அலைபாசியாகவோ அல்லது பார்வையற்றோர் பயன்படுத்தும் திரை வாசிப்பானாகவும் இருக்கலாம்.
இதற்குத் தேவையான w3schools விளக்க அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
என்று எழுத வேண்டும். “value” என்ற இடத்தில் நாம் கொடுக்க வேண்டிய கருவிகளின் பெயரைக் கொடுக்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகளையோ அல்லது ஏதாவது ஒரு கருவியையோ அல்லது எல்லாக் கருவிகளையுமோ பயன்படுத்தலாம். அதற்கு ஏற்றபடி and , not , ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
rel என்ற வரை முறை இணையப் பக்கத்திற்கும் சுட்டிக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது.. ஆனால் அவற்றைத் தேடு பொறிகள் மட்டுமே பயன்படுத்துகின்றன. இணைய உலாவிகள் பயன்படுத்துவதில்லை.
target என்ற வரைமுறை மிக முக்கியமானது ஆகும். அது இணையச்சுட்டிகள் எவ்வாறு, எங்கே திறக்கப்படவேண்டும் என்று கூறுகிறது.
கணியம் ஆசிரியர் என்று எழுதினால், இது கணியம் இதழின் பதிப்பாசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்ப முடியும். இவையெல்லாம் முதலிலேயே இருந்தாலும் ஹெச்.டி.எம்.எல் ஐந்தில் இணையச் சுட்டிக்கான முக்கியமான மாற்றம் வரவேற்கதக்கது.
mailto என்ற வரைமுறை கோட்பாடு மின்னஞ்சல் எழுத உதவுவது போல tel: என்ற வரைமுறை தொலைபேசி எண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாமர்த்தியத் தொலைபேசிகளிலிருந்து எளிதாகத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்ணை எழுதும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை சில:

இணையப்பக்கங்களில் தொலை பேசி எண்ணைக் குறிக்கும் போது சர்வதேச அழைப்பிற்கான முன்னீட்டு எண்ணையும் குறித்தல் அவசியம்.

சர்வதேசத் தொலைபேசி எண் குறியீட்டுக்கு முன்னால் +(கூட்டல் குறி) கண்டிப்பாக இடவேண்டும்.
tel:என்ற வரைமுறை அருகில் எழுதப்படும் எண்கள் இணைய உலாவிக்கு மட்டுமே புரியும்; பயனாளிகளுக்கு அது தெரியாது. மூடிய அடைப்புக் குறியை அடுத்துள்ள எழுத்துக்களையே பயனாளிகள் பார்க்க முடியும். எடுத்துக் காட்டாக:
717-456-6745 என்று எழுதினால் 717-456-6745 என்ற எண்களைத் தான் பயனாளிகள் பார்க்க முடியும்.
தொலைபேசி எண்ணின் கிளைத் தொலைபேசியை (extension ) அழைக்க வேண்டும் என்றால் ஒரு கணினியோ அல்லது சாமர்த்திய அலைபேசியோ தொலைபேசியின் மணி அடிப்பதற்காகக் காத்திருக்கச் சொல்ல வேண்டிய குறி ‘p’.
717-456-6745 ext.12 என்று எழுதினால் ஒரு வினாடி அளவு தாமதம் செய்து கிளை தொலைபேசியை அழைக்க முடியும். w என்பது தொலைபேசியின் இயங்கொலிக்குக் காத்திருக்க வேண்டும் என்பதற்கான குறியீடு ஆகும்.
தொலை நகல் அனுப்புவதற்கும், இப்போது இணையப் பக்கத்தால் முடியும் அதற்கு tel: என்ற வரைமுறைக்குப் பதிலாக fax: என்ற வரைமுறையைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த இணையத் தொலை பேசி எண்களை மேஜைக் கணினியில் பயன்படுத்தும் போது கூகுள் தொலைபேசி போன்ற மின்னஞ்சல் மென்பொருட்கள் தானாக இயங்கக்கூடும். ஆனால் ஸ்கைப் மென்பொருள் சிறிது பிரச்சனை கொடுக்கலாம், ஏன் என்றால் அது callto என்ற வரைமுறையைப் பயன்படுத்துகிறது.
ஒரு சிலர் மேஜை கணினியைப் பயன்படுத்தலாம். பலர் சாமர்த்திய அலைபேசிகளைப் பயன்படுத்தலாம் அதனால் ஒருவர் எதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து அதற்குரிய வரை முறையைப் பயன்படுத்த உலாவிகளுக்கு உத்தரவிட வேண்டும். அதற்கு php-mobile-detect போன்ற ஆவண மூலங்களைப் பயன்படுத்தலாம்..