ஏன் நடுக்கம் புவிமகளே!

0
941

ஏன் நடுக்கம் புவிமகளே? இங்குனக்குக் குளிர்ச்சுரமா?
இல்லை மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா?
தான் நினைக்கும் போதெல்லாம் தாண்டவந்தான் போடுமுந்தன்
தாக்கத்தால் நிர்மாணம் தரைமட்டம் ஆகிறதே!
தேன்வழியும் இடமெல்லாம் செவ்விரத்தம் பாய்கிறதே!
சிக்கிவிட்ட உடலம் சின்னாபின்னம் ஆகிறதே!
வான் வழியில் ஏதும்கோள் மோதிவிடும் என்றேநீ
மனம் பதறி நடுங்கினையோ? வாய்திறந்து சொல்பெண்ணே!

எல்சல்வ டோரில்நீ எக்காளமிட்டதனால்
இருபதினாயிரம் மக்கள் இரையாகிப்போனாரே!
நல்லநகர் குஜராத்தில் உன்ஆட்டத்தால் பாவம்
நலிவடைந்த மக்கள்பலர் நமனுலகம் சென்றனரே!

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமலே ஜப்பான்
ஈடுகொடுக்கும் நிலையின் எல்லையினைத்தகர்த்திட்டாய்!
இந்தோனேஷpயாவில் உன் எரிச்சலைக்காட்டியதால்
இலங்கையிலே சுனாமியால் இறந்தனர்பல் லாயிரம்பேர்!

அடிக்கடி நீ குலுங்கி ஆடுவதேன் சொல்வாயா?
ஆடையெனும் நீர்நிலையை அசுத்தத்தால் நிரப்பிவிட்டு
குடித்தற்கே தண்ணீர் கொடுக்காமல் செய்பவரைக்
குட்டி அடக்கித் தலைகுனிய வைத்தனையோ?

உன்போர்வையான ஓசோனை ஓட்டையிட
உற்பத்தியாகும் வாயுவினை உருவாக்கி
அன்பான உந்தன் அழகைக் கெடுக்கின்ற
அறிவுகெட்டவர்களைநீ அடக்கிவைக்கவோ அதிர்ந்தாய்?

காடழித்து வளத்தைக் களவாடி வாழ எண்ணும்
காதகர்க்குப் படிப்பினையைக் கடுமையாய்த் தெரிவிக்க
ஆடி அறிவுறுத்தி அவர்திருந்த அவகாசம்
அளிக்க நினைத்தாயோ? ஆரணங்கே சொல்லம்மா!

எண்ணெய் எடுத்தற்காய் எழில்மிக்க உன்மேனி
எங்கும் கைவைத்து அனுபவிக்க எண்ணியதால்
பெண்ணே விழிப்புற்றுப் பேதலித்து அதிர்ந்தனையோ?
பேசாமல் பேசி மாந்தர் பேதைமையைக் கடிந்தாயோ?

பாறை அசைவே பண்ணுகின்ற உராய்சக்தி
பாய்ந்து வெளிப்படலால் பார்நடுக்கம் வருமென்று
ஆரோ ஓர் விஞ்ஞானி ஆராய்ந்து அறிவித்தான்!
ஆனாலும் உந்தன் அதிர்வை நிறுத்திவிடும்
ஹீரோயார்? கம்ப்யூட்டர் கிடைத்ததென மார்தட்டி

கிட்டடியில் உலகத்தைக் கொண்டுவந்த கதைபேசித்
தாராளமாய்ப்புளுகும் தம்பட்டக் காரருக்குத்
தக்கபதில் கொடுக்கத்தான் எதிர்பாராத் தருணத்தில்
ஆராரோ பாடினையோ? அந்தோ உன் தாலாட்டும்
அறிவூட்டவில்லையெனின் ஆர்தான் படிப்பிப்பார்?

அணுக்குண்டை ஆக்கி அச்சுறுத்தி அகிலத்தை
அவர்கள் நினைத்தபடி ஆட்டுவிக்க எண்ணுபவர்
துணுக்குறவே உன்வலியைத் துலாம்பரமாய்க்காட்டிவிடு!
துன்மார்க்கர்கட்கெல்லாம் மதிதுலங்க வைத்துவிடு!

சண்டையிட்டுக்கொண்டே சமாதானம் பேசுகிற
சண்டாளச்சாதியினர் சரித்திரத்தை அழித்துவிடு!
அண்டை அயலாரை ஆயுதத்தால் பயமுறுத்தும்
அசகாய சூரர்களை அப்படியே விழுங்கிவிடு!

உச்சத்தில் நாம்தானே என்றதொரு உன்மத்தம்
உச்சியிலே நிறைத்துவிட்டு ஊரெல்லாம் யுத்தத்தின்
அச்சத்தில் மூழ்கவிட்டு ஆகாயத்திலும் ஆட்சி
அமைக்கத் தயார்படுத்தும் அடாவடித் தனம்தன்னால்
மிச்சமில்லாமல் சூழல்மீதும்கை வைத்துவிட்டு
மிகையாய்ப்பொருள் குவிக்கும் வேலைகளுக்காய்ப்பிறரைப்
பிச்சையெடுக்கவைத்த பேயர்கள் அனைவரையும்
பெண்ணே புவிமகளே! உன் பெரும்அதிர்வால் கலக்கிவிடு!

இருந்தாலும் அப்பாவி எம்மீது நீயிரங்கி
எப்போது அரங்கத்தில் ஏறிவந்து ஆடுவாயென்று
பருந்து ஆந்தை நாய் காகம் போன்ற பல சிற்றுயிர்கள்
பழகுகிற நடத்தைகளில் பல்வேறு மாற்றங்கள்
ஏற்படுத்தி எம்மை எச்சரிக்கை செய்துவிடு!
எங்களால் இயன்றால் எங்கேனும் வெளிகளிலே
ஓடிப்போய் நின்று உயிரையாதல் காத்திடுவோம்!
வீடு இருந்தென்ன? விதம் விதமாய் வசதிகளும்
ஆயிரந்தான் இருந்தும் உன் ஆட்டத்தின் முன்னாலே
அத்தனையும் அர்த்தமற்றதாகிவிடும் அதனை அறிவோம்நாம்!
ஆகையினால் உன்னை ஆத்திரத்திற்குள்ளாக்கா
அன்பர்களைக்காப்பாற்ற அறிவுறுத்தல் கொடுத்துவிடு!

முந்தைய கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 05
அடுத்த கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 06
சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)
இலக்கிய, எழுத்துப்பணிகளில் சுமார் 52 வருடங்களாக ஈடுபாடு கொண்ட யான் சமயம்,அரசியல்,சமூகம், இலக்கியம்,கல்வி மற்றும் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம் பற்றிய துறைகளில் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளேன். எனது கவிதைகள், இலங்கையின் புகழ்புத்த கவிஞர்களான நீலாவணன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் தலைமையில் கவி அரங்கேற்றம் பெற்றுள்ளன.இலங்கை வானொலியிலும் எனது கவிதைகள் ஒலித்தன. வீரகேசரி, சுதந்திரன், கலைவாணன்,தினகரன் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. மாற்றம், கிழக்கொளி, இந்து தருமம்,இளங்கதிர் சாயிமார்க்கம், யாழோசை, சமாதானம்,நாணோசை, மருதம்,அருந்ததி,தாயக ஒலி போன்ற சஞ்சிகைகள் எனது ஆக்கங்களைப்பிரசுரித்துள்ளன.ஆங்கிலத்திலும் பல கவிதைகளைப்படைத்துள்ளேன். பட்டய இயந்திரப்பொறியியலாளராகிய யான் தொழில்நுட்பம்,விஞ்ஞானம் சார்ந்த கவிதைகளையும், ஆரய்ச்சிக்கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். கவிதைநூல்களையும், தொழில்நுட்ப நூல்களையும் எழுதி ஆவணமாக்கி வைத்துள்ளேன்.அத்துடன் பல கவிதைகளை எனது குரலில் பதிவுசெய்து வைத்துள்ளேன். திருக்குறள்கள் அத்தனையையும் விருத்தப்பாவில் மாற்றி எழுதியுள்ளேன்.வெண்பா,விருத்தப்பா, ஆசிரியப்பா,கட்டளைக்கலித்துறை, குறும்பா வடிவில் கவிதைகளைப்படைக்கிறேன். பாடசாலைக்காலங்களில் தமிழ் ஆங்கில நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும், நாட்டுக்கூத்திலும் பக்கப்பாடகராகப்பங்குபற்றியுள்ளேன். ஆலயங்களில் பஜனைப்பாடகராகவும் இருந்துள்ளேன். முகநூலில் சமூக,சமய, அரசியல், ஒழுக்கவியல் சார்ந்த விடயங்களைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். சோதிட சாஸ்திரத்திலும் எனக்குப்பரிச்சயம் உண்டு. அக்கரைப்பற்று இராமகிருஷ;ண வித்தியாலயத்திலும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்ற யான் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் இயந்திரப்பொறியியல் பட்டதாரியாவேன்.இலங்கைப்பொறியியலாளர் சங்கத்தின் பட்டய இயந்திரப்பொறியியலாளராகவும் உள்ளேன். தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்த யான், பேராதனைப்பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம், இரத்மலானை தொழில்நுட்பப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, இலங்கை சீமெந்துக்கூட்டுத்தாபன காங்கேசன் சீமெந்துத்தொழிற்சாலை என்பவற்றில் இயந்திரப்பொறியியலாளராகவும், யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி, மட்டக்குளி உயர் தொழில்நுட்பக்கல்லூரி என்பற்றில் வருகை தரு விரிவுரையாளராகவும், பெலவத்தை நிர்மாண இயந்திரோபகரண பயிற்சிநிலையத்தில் செயற்திட்டப் பொறியியலாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் பொறியியல் தொழில்நுட்பப்பகுதியில் செயற்றிட்ட அதிகாரியாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். கல்முனை பாண்டிருப்பைப்பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர் சைவப்புலவர் இளைப்பாறிய உதவி அதிபர் சே.சாமித்தம்பி-நாகம்மா தம்பதிகளின் சிரேஷ;ட புத்திரனான யான் சாவகச்சேரியைப்பிறப்பிடமாகக்கொண்ட பாக்கியலட்சுமி அவர்களைத்துணைவியாக வரித்துள்ளேன். யான் மூன்று ஆண் மக்களுக்குத் தந்தையாவேன். (2018-07-15) எமது 35ஆம் ஆண்டு திருமண நிறைவுநாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனது 'இல்லறவாழ்வு இனிக்குமா? கசக்குமா? ' எனும் நூல் அருந்ததீ நிறுவனத்தினால் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் அன்றைய தினம் வெளியிடப்பட்டது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments