ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.
- ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன. ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு.
மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது. மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டும் நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 லிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது.
இராணுவ பயன்பாடு
சுமார் கி.மு 1200ல் முதல் ஒட்டக சேணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அன்று முதல் இரட்டை திமில் ஒட்டகங்கள் மீது பயணிக்க முடிந்தது. போர்களில் ஒட்டகப்படை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளாலும் எல்லைப் பாதுகாப்புப் படை இந்திய எல்லை பாதுகாப்பு படையிலும் (ஜூலை 2012 வரை) பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் இராணுவத்தில் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதைகளுக்கு பதிலாக பளு தூக்கவும் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன
ஒட்டக பால்
ஒட்டக பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும். ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. ]மேலும் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது.
ஒட்டகங்களின் இனப்பெருக்கம்
ஆண் ஒட்டகங்கள் தம்முடைய ஐந்து முதல் ஆறு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. பெண் ஒட்டகங்கள் மூன்று முதல் நான்கு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. இனப்பெருக்கப் பருவத்தின்போது ஒரு குழுவில் உள்ள ஆண்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஒட்டகம் மற்ற ஆண் ஒட்டகங்களைக் கடித்தோ அவற்றின் மேல் அமர்ந்து காட்டியோ தன் வலிமையைப் பறைசாற்றும். இப்படி பெண் ஒட்டகத்தைக் கவர்ந்து பின் உறவு கொள்ளும். தன் வாழ்நாளில் ஒரு ஆண் ஒட்டகம் பல பெண் ஒட்டகங்களுடன் உறவு கொள்ளும்.
ஒட்டகங்களின் தனித்தன்மை
ஒட்டகத்தின் மயிரும், தோலும் வெப்பத்தடுப்பானாக பயன்படுகிறது அதன் சிறப்பம்சமாகும். கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34 °செல்சியசிலிருந்து 41.7 °செ வரை (93°F-107°F.) தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியசு வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கமுடிகிறது. கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியசு என்று வெப்பநிலை உள்ள போது, வெப்பம் கடத்தாத தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியசு வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது.