ஒரு தலையாய் ஒரு காதல்

0
1264
lovers-pair-love-jealousy

மழையில் மறைந்து அழுத அனுபவம் உண்டா? கண்ணீரைத் தண்ணீரில் மறைத்ததுண்டா? அடி வயிற்றில் கொழுக்கியிட்டு இழுப்பதாய், இதயத்தைப் பிழிவதாய் உணர்ந்ததுண்டா? ஆனால் அது தந்த நினைவுகள் அழகாய் தோன்றியதுண்டா? நினைவு முடிகையில் கண் நனைந்ததுண்டா? தோற்றும் ஜெயித்ததுண்டா? இவையெல்லாம் சாத்தியமா? சாத்தியம் காதலில் மட்டும். தோற்றுப் போன காதல் அழகானது. அதிலும் ஒரு தலைக் காதல் மிகவும் அழகானது. ஒரு தலைக் காதல் என் பார்வை. ஓர் ஆணின் பார்வை.

அது என்ன ஒரு தலைக்காதல்? சொல்லாத காதலில் என்ன சிறப்பு? என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் அது சிறப்பானது தான். கொடுக்கும் எதிர்பார்க்காது. காதலிப்பதற்கும் ஆசைப்படுவதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். அந்தக் காதல். அது அவள் தன்னை விரும்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்தாது. ஆனால் அவள் மேல் காதலைக் கொட்டித்தீர்க்கும். தானுருகி அவள் முகத்தில் சிரிப்பைத் தேடும். தான் தோற்றாலும் அவள் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணும். அவள் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யும். தன்னை அவள் வெறுத்தாலும் விலகி நின்று ரசிக்கும். ஓரப்பார்வை பார்த்தாலே ஓராயிரம் முறை சொல்லி மகிழும். ஒரு வார்த்தை பேசி விட்டால் சொர்க்க விளிம்பைத் தடவி வரும். லட்சம் சந்தோசம் கண்களில் காட்டும். அவளைப் பார்க்காத நேரமெல்லாம் துடிதுடித்துப் போகும். நண்பர்களை நோண்டியே கொல்லும். அவள் லேசாகத் தென்பட்டால் தன்னையே மறக்கும். இன்பத்தில் மூழ்கும். அவள் கண்ணசைவை கனவுகளிலும் தொழுது மகிழும். அவள் காயப்படுத்தும் தருணங்களில் மறைந்து நின்று அழுது தீர்க்கும். சிரிப்பை மட்டும் அவளுக்குக் காட்டும். அவளைப் பற்றி வேறு யாரும் பேசினால் முகம் உடைக்கும். அவள் அசிங்கமாய் திட்டினாலும் அமைதியாய் நின்று ரசிக்கும். ஏதோ அற்புதம் போல் அதைப் பார்க்கும்.

அவள் பின்னாலே நடப்பதை சுவர்க்கப் பாதையாகக் கருதும். அவள் கண்டுகொள்ளா விட்டாலும் அவளைக் கண்ணுக்குள்ளேயே வைத்திருக்கும். அவளின் தலை வழி விழுந்த ஒற்றை முடியை கசக்கிப் போட்ட சாக்லேட் கவரை பொக்கிசமெனப் பொறுக்கி வைக்கும். நாளும் அதைத் தூக்கிக் கனவுகள் காணும். அவள் சிரிப்பைக் கண் கொட்டாது ரசிக்கும். தன்னிலை மறந்து கன்னத்தில் கையூன்றி அவள் முகத்தில் படம் பார்க்கும். என்றாவது ஒரு நாள் கொடுத்து விட கடிதங்கள் கவிதைகள் எழுதும். கார்ட்கள் வாங்கி வைக்கும். அதைக் கொடுக்கத் தினம் தினம் பிரயத்தனம் செய்யும். தோற்றும் போகும். அதைக் காதல் சின்னமெனப் பார்த்து ரசிக்கும். தாஜ்மகாலைத் தோற்கடிக்கும். எதிர்பாரா தருணம் ஒன்றில் கண் முன்னே அவளை இழக்கும். எவனோ ஒருத்தன் காதலை அவள் ஏற்ற தருணம். கண் கலங்கிக் கதறி அழும். அதை யாரும் காணாமல் மறைத்துக் கொள்ளும். மற்றவர் முன் சிரித்து நடிக்கும். வழவழ பேச்சில் தன் துன்பம் புதைக்கும். யாருக்கும் முகம் கொடுக்க முடியாமல் நழுவி ஓடும். உச்ச கட்டக் கோமாளி போல் பாவனை செய்யும். கண்ணீரை மறைத்து மறைத்துப் புதைக்கும். தனிமையில் விம்மி வெடித்துக் கதறும். மீண்டும் அனைத்தும் துறக்கும் அவள் சிரிப்பை ரசிக்கும். அவள் சந்தோசத்தில் தானும் சிரிக்கும். அவள் சங்கடம் தவிர்க்க அவள் கண்ணில் படாமல் மறையும். தன்னைத் தானே தொந்தரவென உணரும். தவித்துப் போகும். தனித்துப் போனதாய் உணரும். அவளை விட்டுக் கொடுக்காமல் மெச்சும். தான் தோற்று அவளை ஜெயிக்க வைக்கும். தன் காதலை அவள் பாதத்தில் சமர்ப்பித்து சாமான்யனாய் ஒதுங்கி நின்று வழிவிடும். தான் தோற்றதாய் ஒப்புக் கொள்ளாது. அவள் மகிழ்ச்சியாய் இருப்பதால் தான் வென்றதாய் குதிக்கும். ஒரு போதும் தன்னை அழித்து அவளைக் குற்ற உணர்வில் தள்ளாது. தன்னை இழந்ததாய் அவளைக் கவலைப் பட விடாது. அவளைக் காயப்படுத்தி துன்பத்தில் தள்ளாது. அவளைக் காதலிக்கும் ஆனால் ஆசைப்படாது. தோற்றும் ஜெயித்து நிற்கும் அது ஓர் அழகான உணர்வு. ஒரு தலைக் காதல். கொடையாளிக் காதல்.

அவள் சந்தோசத்துக்காகத் தன் உயிரையும் இழப்பேன் என்று சொல்லும். அவளையே உயிரெனக் கொண்டு அதை செய்தும் காட்டும். அவள் சந்தோசத்துக்காக அவளையே இழந்து தவிக்கும். காதலில் உன்னதமானது அந்தக் காதல். ஒரு தலைக் காதல்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments