கடலினுள்ளே!!

0
1033

சிறுவயதில் எனக்குக் கடலைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத அச்சம். கடலினுள் இறங்க மாட்டேன். கரையில் கால் நனைக்க இஷ்டம் உண்டு. அது ஒரு மகிழ்வைத் தரும். ஆனால் கடலினுள் இறங்கி முழந்தாழ் வரை மூழ்கும் தருணங்களில் ஏகப்பட்ட எண்ணங்கள் கற்பனைகள். கடலுக்கு அடியில் என்ன இருக்கும்? வினோதமான கேள்வி மனதில் தோன்றும். வித்யாசமான பதில்களும். வேறு உலகம். வேறு மிருகங்கள். சில சமயம் டிராகன்கள். ஐந்து தலை நாகங்கள். முன்னர் எப்பவோ பார்த்த ஆங்கிலப்படங்களின் விளைவாக இருக்கலாம். என்ன தான் இருக்கும். இதே கடல். அதோ அந்தப்படகு. இல்லை அதைப்போல் வேறு படகு. இந்தக்கடலில் எத்தனை சரிந்திருக்கும். எத்தனை பேரைக் காவு வாங்கியிருக்கும். இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் போது, நள்ளிரவில் தன்னந்தனியே சுடுகாட்டில் புகுவதை போல் ஓர் உணர்வு மனதில் தோன்றி மறையும். சிறு நடுக்கம். தண்ணீருக்குள்ளே கண் தெரியுமா. இல்லை நிச்சயம் தெரியாது. இருள் கும்மிருள். அந்தக்கும்மிருளில் என்னைத் திடீரென இறுக்கப்பிடித்து கடலின் ஆழம் வரை யாராவது அமுக்கினால். ஐயோ என்ன செய்வது. யாராவது இல்லை எதாவது. பேய் பிசாசு சமாச்சாரங்களா என்று கேட்டால் நிச்சயமாக என்னிடம் பதில் இல்லை. திடீர் காட்சிகள் தோன்றி மறையும். அடி வயிற்றில் இருந்து நடுக்கம் எழும். ஓரளவு தைரியத்தை வரவழைத்து உள்ளே கால் பதிப்பேன். திடீரென என் கட்டுப்பாட்டை இழந்தது போல் உணர்வேன். அதே உணர்வு. அதே பீதி. வெளியில் வந்து விடுவேன். கடலை வெளியில் இருந்து இரசிப்பதோடு சரி. ஒரு முறை நண்பனுடன் மணற்காடு நாகர்கோவில் வரை சென்றிருந்தேன். பெருங்கடல். மதிய வேளை. அமைதி போல் தெரிந்தது தூரத்தில் இருந்து பார்க்க. அநாதையாய் இருந்தது. கடல் அலையில் கால் நனைக்கச் சென்றேன். போகும் வழியில் பேச்சு. ஆண்கடல் பெண்கடல் சமாச்சாரம் எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்குத்தெரிந்தது ஆழ்கடல் மட்டுமே. அவன் தான் சொன்னான். பலதும். அருகில் செல்வதற்குள் பயமுறுத்தி விட்டான். நேரம் ஆக ஆக அலை அருகில் நெருங்குவது போல் இருந்தது. இலேசாக பயம். ஆனால் உள்ளே நுழைந்தேன் காலை நனைத்தேன். அவன் நனைக்கவில்லை. என்னை விட பயந்தவன் போலும். வா போவோம் என்று அவசரம் செய்தான். கிளம்பினேன். திரும்பிப்பார்த்தேன். உண்மையில் கடல் அணுகுவது போல் தோன்றியது. மனப்பிராந்தி. வேகமாக நடந்து சென்று விட்டோம். பின்பொரு நாள் காங்கேயன்துறை (ஒரு கடற்கரை) சென்றேன். இறங்குவது என்று முடிவு. இறங்கினேன். அதே உணர்வுகள். அலட்சியம் செய்தேன். நடந்தேன் அலையை எதிர்த்து உள்ளே. இறங்கிவிட்டேன். எனக்கே ஆச்சர்யம். நான் எதிர்பார்த்தது போல் எதுவும் இல்லை. கடலில் என்னை அமுக்க யாரும் இல்லை எதுவும் இல்லை. இருளில் என்னை பயமுறுத்தவோ கடல் ஆழம் வரை மூச்சை முட்ட அமுக்கவோ அங்கு எதுவும் இல்லை. மீன் நண்டு இதெல்லாம் ச்சே ச்சே அபத்தம். எத்தனை சிறிதாக இருந்தன. ஒரு வேளை நான் இறங்கும் போது அவற்றிற்கு அந்த உணர்வு வரலாம். எங்கே இவன் இந்த கடலில் என்னை மிதித்து அமுக்கி விடுவானோ என்று. எனக்கு ஏன் வந்தது. அப்படி என்றால் நான் எப்போதாவது அவற்றின் வாழ்க்கையை வாழ்ந்தேனா? அவையாக வாழ்ந்தேனா? ச்சே என்ன அபத்தமான கற்பனை!.

~அரிஞ்சயன்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments