ஸ்கிப்பிங் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஸ்கிப்பிங் என்பது விளையாட்டுதானே அதை ஏன் உடற்பயிற்சியில் சேர்த்திருக்கிருக்கிறீர்கள் என்று சிலர் எண்ணுவீர். ஆம் ஸ்கிப்பிங் என்பது ஒரு விளையாட்டு தான் பெரும்பாலும் நம் ஊர்களில் பெண் குழந்தைகளால் விளையாடப்படும் விளையாட்டு. ஆனால் இந்த விளையாட்டு ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஸ்கிப்பிங் நாம் பயிற்சியாக மேற்கொள்ளும் போது அதிகப்படியான பலன்கள் கிடைக்கும்.
ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் முன்:
பயிற்சி மேற்கொள்ளும் போது முடிந்த வரை இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்கவும். அதே போல் ஷூ வை பயன்படுத்துவது நல்லது. ஸ்கிப்பிங் ரோப் (அ)ஸ்கிப்பிங் கயிறு சரியான அளவு கொண்டதாக இருக்க வேன்டும். அதிக நீளமாகவோ (அ) குட்டையாகவோ இருத்தல் கூடாது.
உணவைப் பொறுத்த வரையில் மிதமான அல்லது காலி வயிறுடன் பயிற்சி மேற்கொள்ளலாம்.
ஸ்கிப்பிங் பயிற்சிக்கு பொருத்தமான இடம்: ஸ்கிப்பிங் செய்யும் இடம் சுத்தமாகவும், சமமாகவும், வழுக்கும் தன்மை இல்லாத
இடமாகவும் இருக்க வேன்டும். டைல்ஸ் போன்றவற்றில் பயிற்சி செய்யக்கூடாது. வழுக்கும் தன்மையுடைய இடத்தில் செய்வதன் மூலம் பயிற்சி ஆபத்தில் முடியலாம். அதே போல சிறு சிறு கற்கள் இல்லாத இடமாக இருத்தல் நல்லது.
ஸ்கிப்பிங் மேற்கொள்ளும் முறை: முதலில் உங்களது முதுகு மற்றும் தலையை நேராக வைத்துக்கொள்ளவும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது பின் புறக் காலின் அடியிலே வைத்துக் கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழல விட, அந்த சுழலின் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்ட வேண்டும். முதலில் மெதுவாக ஆரம்பித்து பின்பு மெல்ல வேகத்தைக் கூட்ட வேண்டும். ஸ்கிப்பிங்கில் பல்வேறு வகைகள் உள்ளது. முன் புறமாகத் தாவுதல் பின் புறமாகத் தாவுதல், ஒடிக் கொண்டே தாவுதல்,
குறுக்கு வாக்கில் தாவுதல் போன்று பல வகைகள் உள்ளது. இவை அனைத்திற்கும் அடிப்படையானது மேல் கூறிய ஸ்கிப்பிங் முறையே. அதனைத் தொடர்ந்தே ஸ்கிப்பிங்(தாவுதல்) வகைகள் அமைந்துள்ளது.
கலோரி கணக்கீடு: சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் எரிக்கபடும் கலோரிகள்
- ஸ்கிப்பிங் வேகமாக செய்வதன் மூலம் ஆ= 1,034 kcal, பெ= 887 kcal எரிக்கப்படும்.
- ஸ்கிப்பிங் மித வேகமாக செய்வதன் மூலம் ஆ= 862 kcal, பெ= 739 kcal எரிக்கப்படும்.
- ஸ்கிப்பிங் மெதுவாக செய்வதன் மூலம் ஆ= 689 kcal, பெ= 591 kcal எரிக்கப்படும்.
நன்மைகள்:
- இன்று தொப்பைப் பிரச்சனையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகள் கரைந்து, தொப்பைப் பிரச்சனையும் படிப்படியாகக் குறையும்.
- முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைக் குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
- உடலின் உள் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
- மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.
- உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
- கை, கால், தொடைப் பகுதித் தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது.
- தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.
- நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
- மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும்.