மூலிகையின் பெயர்: கல்யாண முருங்கை
மருத்துவப் பயன்கள்: இது துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூ கருப்பை குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.
பயன்படுத்தும் முறைகள்:
- மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட வலி தீரும்.
- இதன் இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
- இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.
- இதன் இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள் குடித்து வர பெண் மலடு நீங்கி கருத்தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும்.
- இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.
- 60 மி.லி.இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை அருந்த பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.
- சாறு 1 தேக்கரண்டி மோரில் கலந்து குடிக்க நீர்த்தாரை அழற்சி, நீர் எரிச்சல் தீரும்.
கீரிப்பூச்சி வெளியேறும்
இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.
குடற் பூச்சிகள் வெளியேறும்
இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.
இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.
வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மி.லி. பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.