குடை

0
1969

“இந்த கொடய செரியாக்ககூடாதா”? என சுனிதா சொல்லி கொஞ்ச நாளாச்சி. அத டி வி ஸ்டாண்டுல வாங்கி வச்சேன். அத பாக்கத்துல எல்லாம் சுனிதா சொன்னது ஓறும வரும் . நேற்று மாலை *அஸர் தொழுகைக்காக செல்லும் முன் கையில் கொடைய எடுத்த்துகொண்டேன். மணிமேடையில் தான் குடை தைப்பவர் இருக்கிறார் ,அதனால் அஸர் தொழுகைக்கு கலாச்சாரா பள்ளிக்கு போயிவிட்டு குடையை தைக்க கொடுக்கலாம் என மாலை மூன்றே முக்காலுக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன் .

தொழுகை முடிந்ததும் பொடி நடையாய் மணிமேடை தபால் அலுவலகம் எதிரில் உள்ள குடை தைப்பவரை தேடி சென்றேன். பழைய குடைகள் சில கடையின் முன் தொங்கி கொண்டிருந்தன. தைக்கும் ஊசி, ரிவீட் அடிக்கும் கருவி என சில பொருட்கள் அந்த கடையின் முன்னால் இருந்தது ஆளை காணவில்லை.பக்கத்திலிருந்த ஒரு கடையில் உறவினர் ஒருவர் இருக்கிறார் அவரை பார்த்து “கொடய தக்க வந்தேன் ஆளை காணல” என்றேன்.  “அவனுட்ட கொள்ளை இங்க பக்கத்துல வேற கட இருக்கு அங்க போ”என்றார். அவர் எனது குடையை பார்த்துவிட்டு “மக்கா இது போப்பி கொட இல்லா” என்று சொன்னார். “ஆமா உங்க கடையில வாங்குனதுதான்” என்றேன்.

பண்டைய காலத்தில் குடை பணக்காரர்களின் அடையாளம் . குடையின் பயன்கள் பல, சுமாரான மழைக்கு நனையாமல் இருக்க,வெயிலின் தாக்கத்திலிருந்து தப்ப. சிறு வியாபாரிகள் குடையை தலைகீழாக பிடித்து பொருட்களை விற்பனை செய்ய, மழை பெய்து முடிந்தபிறகு நம்மூர் சாலைகளில் நடக்கும்போது தேங்கி இருக்கும் அழுக்கு தண்ணீர் நமது உடைகளில் படாமல் இருக்க, வயதானவர்களுக்கு வாக்கிங் ஸ்டிக் ஆக…. சிலருக்கு எமனாக .

அருகிலிருந்த அந்த கடையிலும் ஆள் இல்லை. பஸ்ஸ்டாண்ட் கிட்ட ஒரு ஆளிருக்கிறது என்றார்கள். அங்கிருந்து பொடி நடையாக பாட்டா காலனிகடை அருகில் ரோட்டை தாண்டி மறுப்பக்கம் சென்றேன் .வேப்பமூடு அருகில் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவாளி ஒருவர் போக்குவரத்தை மாற்றிஇருந்ததால் இப்போது அங்கு போக்குவரத்து போலீசும் இல்லை, வாகனங்களும் தடையின்றி சென்றுகொண்டிருக்கிறது .

பழமையான சுந்தர் ரேடியோஸ்,முத்து லெதர் வொர்க்ஸ்,சிங்கார் ஆடையகம் தாண்டி சென்றபோது நாகர்கோயிலின் பழைய அடையாளங்கள் மாறியிருந்தன .அங்கே இருந்த ஒரு புத்தக கடையும்,ஜவுளிக்கடைகள் சிலதும் காணவில்லை .

ஆவின் பாலகம் அருகிலிருந்த செருப்பு தைப்பவரிடம் “கொட தைப்பியளா” என  கேட்டேன். “பஸ் ஸ்டாண்டுகுள்ள படிஇறங்கி போங்கோ ஒரு ஆளு இருக்காரு” என்றார்.படியிறங்கி போனேன். படிக்கட்டில் கண்தெரியாத ஒருவர் ஒலிபெருக்கியை கையில் வைத்து போவோமா ஊர் கோலம் என்ற சின்னத்தம்பி திரைப்பட பாடலை பாடிகொண்டிருந்தார்.படியில் இறங்கி  பேருந்து நிலையத்தினுள் செல்லும்  பெண்கள் அவரது பித்தளை உண்டியலில் சில்லறைகளை போட்டுசென்றனர். பேருந்துநிலைய சுரங்க பாதையின் வாயிலை ஒட்டி சுவரோரமாக அமர்ந்திருந்தார் குடை தைப்பவர்.மீசை இல்லாமல் நல்ல கரிய நிறத்தில் ஆப்பிள் வடிவ  தொப்பையுடன் இருந்தார். “கொட தக்கணும்” என்றேன்.என்னிடமிருந்து வேகமாக வாங்கிகொண்டார் குடையை.

அவர் அமர்ந்திருந்த சுவரில் மும்மத பக்தி படங்களை வைத்து புதிதாக கொஞ்சம் பிச்சி பூவும் அதில் மாட்டியிருந்தார்.சுரங்க பாதை வாயிலில் பூட்டு ஒன்று தொங்கி கொண்டிருந்ததை பார்த்து “ராத்திரி பூட்டி விடுவார்களா?”என கேட்டேன் . “ஆமாண்ணே ஒம்பது மணிக்கு பூட்டிட்டு காலைல ஆறு மணிக்குத்தான் திறக்கும். இல்லேன்னா இங்க ராத்திரி எல்லா கும்மாளமும் நடக்கும்” என்றார்  அருகிலிருந்த சீப்பு வியாபாரி .குடைக்காரரிடம் “மள வந்தா இங்குன இருக்க முடியாதே”என கேட்டேன். அண்ணார்ந்து மேலே பார்த்துவிட்டு  “ஆமா  இந்த கட்டடத்துல உள்ள எல்லா தண்ணியும் இங்க தான் வரும்” என்றார்.

பள்ளி கல்லூரி முடிந்து மாணாக்கர்கள் வந்துகொண்டே இருந்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. இங்கே  மாணவர்கள் சாலையை கடக்கும்போது நிறைய விபத்துகள் நடக்கிறது ஆகவே பள்ளி நேரங்களில் இங்கு ஒரு காவலரை நிறுத்தி மாணவர்கள் சிரமமின்றி சாலையை கடக்க உதவவேண்டுமென்றேன். சுரங்க பாதை அமைப்பதுதான் நிரந்தர தீர்வு உரியவர்களிடம் பேசி அதற்காக முயற்சிசெய்யுங்கள் என்றார் .அது இப்போது சாத்தியமாகி உள்ளது .

குடைக்காரர் குடையை தைக்கதொடங்கியதும் பதிமூன்று வயதுள்ள பள்ளி மாணவி ஒருத்தி காலிலிருந்த செருப்பை கழட்டி “இத தக்கனும்” என்றாள். “நாற்பது ரூபாய் ஆகும்” என்றார். “முப்பது தான் இருக்கு பத்து  நாளை தருகிறேன்”என்றாள் அந்த சிறுமி .சரி என ஒத்துக்கொண்டு அந்த செருப்பை தைக்க ஆரம்பித்தார் .என்னிடம் “ஸார் கொஞ்சம் நின்னுகிடுங்க  அந்த புள்ள பஸ்சுல போனும்லா” என்றார் .நான் ஆச்சரியமாய் அந்த சிறுமியை பார்த்தேன் கையில் போதிய பணமில்லாத போதும் கடன் சொல்லி  தைத்துகேட்டது .தினமும் இதே சுரங்க பாதை வழியாக,இதே பேருந்து நிலையத்திற்குள் தினமும் வருபவள் .செருப்புதைப்பவரையும் தினசரி பார்த்திருப்பாள் அவள்.விளையும் பயிர் முளையிலேயே தெரிந்தது .

நண்பன் சுரேஷ் பிரதீப் இங்கிருந்தால் இதையே ஒரு சிறுகைதையாக எழுதியிருப்பான் என எண்ணிக்கொண்டேன்  .

குடை நினைவுகள் மனதில் ஓட துவங்கியது. ஒரு ஆண்டுக்கு முன் எனது உறவுக்கார பெண்ணொருத்தி தனது கணவருடன் ஹீரோ ஹோண்டாவின் பின்னிருக்கையில் அமர்ந்து செல்கையில்  தக்கலை அருகே வந்தபோது லேசாக மழை பெய்தது .அவள் தன் கைப்பையிலிருந்த குடையை வேகமாக எடுத்து கணவனுக்கும் சேர்த்து  பிடித்தபடி பயணத்தை தொடர்ந்துள்ளனர் .அப்போது அடித்த காற்று குடையுடன் பைக்கையும்  கீழே தள்ளியது பின்னாலிருந்தவளின் தலையிலும் பலத்த அடி.

முன்பும் இதுபோல் நடந்த சம்பவங்கள் பத்திரிகைகளில் நிறையவே வந்துள்ளது.மழை பெய்யும்போது எப்போதும் ஒருசிலர் குடை பிடித்தபடி பைக்கில் செல்லத்தான் செய்கிறார்கள்.சீனாவில் மழை காலத்திற்கு தகுந்தபடி ஒரு குடை இருசக்கர வாகனத்தில் நிரந்தரமாக பொருத்தியுள்ளனர் .பலத்த காற்றுக்கு அது தாக்கு பிடிக்குமா என தெரியவில்லை .  கடந்த சில நாட்களுக்கு முன்  நாகர்கோயில் சி எஸ் ஐ பள்ளி அருகே பைக்கில் குடையுடன் சென்ற ஒருவரை கண்டேன் .

உறவுக்கார பெண்ணின் அக்காவின் வீட்டிற்கு சில மாதங்களுக்குப்பின் சென்றிருந்தேன் அவளது  மூன்று குழைந்தைகள் அரபி வகுப்பு முடிந்து மதராசாவிலிருந்து வந்தனர். பெரியம்மா கொடுத்த சாயாவை குடித்துவிட்டு ,நீராடி பள்ளி செல்ல தயாராகி கொண்டிருந்தனர்.  குழந்தைகளின் தாய்க்கு அன்று குடை தான் அன்று எமனாக வந்ததை சொன்னார்கள் .

குடை தைப்பவர் சிறுமியின் செருப்பை தைத்ததும் முப்பது ரூபாயை கொடுத்துவிட்டு சென்றாள்.அவள் கையில் இன்னுமொரு பத்து ரூபாய் இருந்தது பஸ் டிக்கட்டுக்கு இருக்குமோ என   நினைத்துக்கொண்டேன்.குடைகாரரிடம் “வீடு எங்க”என கேட்டேன் “தின்னவேலி” என்றார். “டெய்லி போயிட்டு வந்தா கட்டுபடியாகதே”என வினவியபோது  அவர் “கல்யாணம் பண்ணினது இங்க ஒழுகினசேரில டிரைனுக்கு பாஸ் வச்சிருக்கேன் ட்றேன்ல தான் போறது”என்றார்.

குடைகாரர் எனது குடையை மூன்று இடத்தில் தைத்தார் ,வேறொரு பழைய குடையிலிருந்து ஒரு கம்பியை எடுத்து எனது குடையின் கம்பியை அகற்றிவிட்டு அதில் வைத்துபோது எனது குடை முழுமை பெற்றது.அறுபது ரூபாய் என்றார் .பணத்தை கொடுத்தேன். “ஸார் பேக்கு,செருப்பு எது இருந்தாலும் கொண்டு வாங்கோ” என்றார் .

மீண்டும் நடந்து மணிமேடையில் நிறுத்தியிருந்த எனது பைக்கில் குடையை வைத்துவிட்டு கிளம்பியபோது லேசாக மழை பெய்யதொடங்கியது.

*அஸர் – மாலை நேர தொழுகை

முந்தைய கட்டுரைகொரோனா
அடுத்த கட்டுரைஇந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்
நாஞ்சில் ஹமீது
பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி ,பாபூஜி மேல்நிலைப்பள்ளி ,மணவாளகுறிச்சி. பத்தாம் வகுப்பிற்குபின் ,மணலிக்கரை ஐ டி ஐ யில் இரண்டாண்டு பிட்டர் தொழில் கல்வி பயின்ற பின் திருச்சி பாரத மின் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து .1996 ஆம் ஆண்டு முதல்2003 வரை மும்பையில் பணி,பின்னர் ஈராண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உதவியாக உணவு வழங்கும் நிறுவனத்தில் பணி.2005 முதல் கப்பலில் பணி.இலக்கியம் வாசிக்க தொடங்கியது எப்போது என தெரியாது .2014 ல் ஜெயமோகன் அவர்கள் எழுதும் வெண்முரசு வாசிக்க தொடங்கியபின் இலக்கியத்திற்குள் வந்து விட்டதாக உணர்ந்தேன் .இரண்டாண்டுக்குபின் எழுதவும் துவங்கினேன் .அனைத்தும் அனுபவ பதிவுகள் .ஒரு சிறுகதை .எனது வலைபூ http://nanjilhameed.blogspot.com/ ஷாகுல் ஹமீது , 14 june 2020
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments