மா நிற மேனியுடன்
கருத்த அருவி கொண்ட
நீண்ட கூந்தலும்
முழுநிலவில் வெட்டி எடுத்த
அரை நிலவின் நெற்றியும்
அதற்கும் அழகூட்ட வைக்கப்பட்ட
குங்குமச் சிவப்பும்
நீண்டு புடைத்த
சாய் கோபுரம் கொண்ட
அவளின் மூக்கும்இ
அதற்கும் கிரீடம் வைத்த
அவளின் மூக்குத்தியும்
பெண்மையின் இரகசியத்தை
பேசிக் கொண்டே இருக்கிறது இன்றும் கூட
ரவிக்கை அணியாத பெண்ணாக இருந்தவள்
சேலையால் சுற்றி
உடலை மறைக்கும் உயர்ந்தவள்
தனது கற்பின் இரகசியத்தை காப்பாற்றுபவள்
அதனால் தான் இவள்
கற்புக்கரசியாகிறாள்.
கரம் எடுத்து
விரல் கோர்த்து
பச்சைமணி இலைகளை
பக்குவமாய் கிள்ளி எடுத்து
மல்லிகையும் நாணத்தால்
தலைகுனியும்
கூந்தலுக்குள் சொருகி
அப் பச்சை மலரினை
பத்திரமாய் வைக்கிறாள்.
அழகின் இனிப்பு
மிதமிஞ்சி சென்றதனால்
பச்சை மணி இலைகள்
பத்திரமாய் கூடையில் விழுகிறது
நிரம்பி வழியும்
நீர் குடம் போல்
தலையில் போட்ட
கூடை கொழுந்தின்
நிறையால் நிறைந்திருக்கும்
ராத்தலின் நிறைக்காக காத்திருக்கும்.
பத்தாம் திகதி வந்தாச்சு
இரத்தத்தை உறிஞ்சிய சம்பளம் கிடைச்சாச்சு
கடன் கொடுத்த காரன் எல்லாம்
காலை ஆட்டி நின்றாச்சி
யார் சொல்லியும் கேட்கவில்லை
பத்து ரூபாய் கூட
இப்பாவி கையில் தங்கவில்லை
என் மகனும் சொல்லி இருந்தான்
‘உனக்கு சோறு போட நான் இருக்க
நீ ஏன் கஷ்டப்பட வேண்டும்’என்று
என்ன செய்ய
நான் பெற்ற சாபம்
கடனை
என் பிள்ளையை கொண்டு
அடைக்கக்கூடாது என்பதற்காக
எனக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறேன்
என் சாபக் கடனை!