கொக்கோ – Cocoa Tree

0
2423
Cocoa pods and cocoa beans and cacao powder with leaves isolated on white background.

 

 

 

 

கொக்கோ, cocoa tree , சாக்கலேட் மரம்,  (Theobroma caca) என்பது   மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்காவை தாயகமாக கொண்ட பசுமைமாறா சிறிய மரமாகும்.  கிரேக்க மொழியில் தியோ என்றால் கடவுள், புரோமா என்றால் உணவு. இது கடவுளின் உணவென்றே பழங்குடியினரால் நம்பப்பட்டு வந்தது முன்பு.

ஒளியை விரும்பும் இந்த சிறிய  மரம், பனியையும் வறட்சியையும் தாங்காது. சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலங்களில் எளிதில் வளரும். குச்சிகள் மற்றும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. 20 – 40 அடி வரை வளரும். கோகோ செடிகள் நட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டிலிருந்து பூக்கத் துவங்கும். மரத்தின் முக்கிய கிளை மற்றும் பக்கக்கிளைகளில் கொத்தாக பூக்கள் உருவாகும். ஒவ்வொரு பூங்கொத்திலும் 10-20 பூக்கள் இருக்கும் மலர்கள் சிறியவை, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்னத்தில்  5 இதழ்கள் உடையவை. பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை செய்யப்படுகின்றன. 5 வருடங்களான, நன்றாக முதிர்ந்த மரத்தில் சுமார் 6000 மலர்கள் வரை மலர்ந்தாலும், அவற்றிலிருந்து 200 காய்களே காய்க்கும் பூக்கள் பூத்து 120-150 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகின்றன. முதிர்ச்சி அடைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாறும் நிலையில் அறுவடை செய்ய வேண்டும்.

வணிக ரீதியாக பயிரிடப்படும் கோகோவில் கிரையல்லோ (Criollo) மற்றும் ஃபாரஸ்டிரோ (Forestero), ஆகிய இரண்டு வகைகள் உள்ளது. இவற்றில் க்ரையல்லோ சிவப்பு நிற காய்களையும் ஃபாராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களையும் கொண்டது.

பறிக்கப்பட்ட கொக்கோ காய்கள் நசுக்கப்பட்டு, சுமார் ஆறு நாட்கள் வரை நொதிக்க விடப்படுகின்றன. பின்னர், கொட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. உலர்ந்த கொட்டைகள் வறுத்து, தரம் பிரித்து, அரைக்கப்படுகின்றன. இந்தக் கலவையிலிருந்து கொக்கோ வெண்ணை பிரித்தெடுக்கப்பட்ட பின் கிடைக்கும் தூளே கொக்கோ தூளாகும். இவை  வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை. பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் மற்றும் பானங்களிலும் சாக்கலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். 

கொக்கோ என்பது கொக்கோ கொட்டையின் திடநிலை பொருட்கள். கொக்கோ வெண்ணை என்பது கொக்கோ கொட்டையின் கொழுப்புப் பாகம். கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கபடுகிறது சாக்கலேட்.

 அமேசான் பகுதியில் ஏராளமாக  வளர்ந்துவந்த கொக்கோ மரங்கள் மாயன்  மற்றும் ஆஸ்டெக் பழங்குடியினரால் அதிகம் உபயோகப்படுத்தப்ட்டிருக்கிறது. சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதை வணிக ரீதியாக பயிரத்தொடங்கியிருந்தனர்.  கொக்கோ பழங்கள் பண்டமாற்றுக்கும் தங்கத்தை விட  மிக அதிக மதிப்புடைய பொருளாக  பயன்படுத்தபட்டிருக்கிறது.

இவ்விரு பழங்குடியினரும்  கொக்கொவை அதிகம் பயன்படுதியதற்கான அகழ்வாய்வு சான்றுகளும் கிடைத்துள்ளன . அமெரிக்காவை கண்டுபிடித்த கிரிஸ்டோஃபர் கொலம்பஸ், ஸ்பெயினின் ஆளுனர்களுக்கு காண்பிக்க சிறிது 1502, ல் கொக்கோ கொட்டைகளை எடுத்து வந்தார். ஆனால் ஹெர்னான்டோ டி சோடோ தான் இவற்றை பரவலாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.

 

 

 

 

 

உலகின் முதல் சாக்கலேட் பண்டகம் 1585 ஆம் ஆண்டு வெராகுருஸிலிருந்து செவில்லுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது ஒரு பானமாகவே பருகப்பட்டு வந்தது. ஐரோப்பியர்கள் அதில் சர்க்கரை சேர்த்து  பயன்படுத்தினர். 17ஆம் நூற்றாண்டின் போது சாக்கலேட் ஓர் உயர் பாரம்பரிய பொருளாக கருதப்பட்டது.

18ஆம் நூற்றான்டின் இறுதியில், முதல் திட வடிவ சாக்கலேட் துரின் நகரில் தயாரிக்கப்பட்டது. 1826 முதல் பியர் பால் கஃபரேல் என்பவரால் அதிக அளவில் விற்கப்பட்டது. 1828 ல் கான்ராட் ஜே வான் ஹூட்டென் என்ற டச்சுக்காரர் கொக்கோ கொட்டையிலிருந்து கொக்கோ தூள் மற்றும் கொக்கோ வெண்ணை தயாரிக்கும் முறையை காப்பீடு செய்தார். மேலும் அவர் டச்சு முறை என்றழைக்கப்படும் கொக்கோ தூள் தயாரிப்பு முறையையும் உருவாக்கினார். ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் தான் 1847 இல் முதல் கனசெவ்வக சாக்கலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார். சிறிது காலத்திற்குப் பின் இது காட்பரி சகோதரர்களல் தொடரப்பட்டது.

டேனியல் பீட்டர் என்ற சுவிஸ் மெழுகுவத்தி தயாரிப்பாளர் 1867 இல் பால் கலந்த முதல் பால் சாக்கலேட்டை உருவாக்கினார். ஹென்றி நெஸ்லே என்ற மழலை உணவுத்தயாரிப்பாளர் இவருக்கு பாலிலிருந்து நீரை நீக்கி, அடர்ந்த பால் (condensed milk) உருவாக்க உதவினார். இது பூஞ்சைத்தொல்லையிலிருந்து சாக்கலேட்டுகளைக் காக்க உதவியது. ருடால்ஃப் லின்ட் என்பவர் சாக்கலேட் கலவையை சீராக்க, அதனை சூடாக்கி அரைக்கும் ’கான்ச்சிங்’ எனப்படும் முறையைக் கண்டு பிடித்தார்

 கருப்பு சாக்கலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் போன்ற ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன. மேலும் சாக்கலேட் உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.   ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு நிறைந்த உணவுகளான சிகப்பு ஒயின், பசும் மற்றும் கரும் தேனீர், நீலபெர்ரி ஆகியவற்றை விட அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்-கள் சாக்கலேட்டில் உள்ளன   எனினும், சாக்கலேட், கொழுப்புச்சத்து அதிகமுமுள்ள உணவுமாதலால் அதிகம் சாக்கலேட் சாப்பிடுவதும் உகந்ததல்ல.

சாக்கலேட்டின் உருகுநிலை  நமது உடல் வெப்பநிலையை விட குறைவாக இருப்பதால், அது நம் வாயில் உருகுகிறது. சாக்கலேட் நம் மூளையில் செரோடோனினைச் சுரக்கச் செய்கிறது. செரோடோனின் மிதமான வெயிலைப்போல ஓர் இனிய உணர்வு தரும் பொருளாகும். 

கோகோவின் தேவை ஒவ்வொரு வருடமும் 15 முதல் 20 சதம் வரை அதிகரித்து வருகிறது.  உலகளவில் கோகோ விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஐவரி கோஸ்ட் (12 இலட்சம் டன்) முதலிடம் வருகிறது. மற்ற நாடுகளான காணா (7.2 இலட்சம் டன்), இந்தோனேஷியா (4.4 இலட்சம் டன்), காமரூன் (1.75 இலட்சம் டன்) மற்றும் நைஜரியா (1.60 இலட்சம் டன்) அதிகளவில் விதைகளை உற்பத்தி செய்து உலகளவில் முன்னணி வகித்து வருகின்றன. உலக கோகோ உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 0.3 சதவீத அளவிலேயே உள்ளது.  தமிழ்நாட்டில் தற்போது சுமார் 2500 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 200 டன் கோகோ உலர் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

குதிரைகள், நாய்கள்,  கிளிகள்,  சிற்றெலிகள்,  பூனைகள் ,  பறவைகள்  மற்றும் சிறு விலங்குகள், சாக்கலேட்டில் உள்ள தியொப்ரொமின் எனப்படும் வேதிப்பொருளை  வளர்சிதைமாற்றம் செய்ய இயலாததால் சாக்கலேட் இவ்விலங்குகளுக்கு நஞ்சாகி வலிப்பு, இதயச் செயலிழப்பு, உட்புற இரத்த இழப்பு ஆகியவற்றால் மரணம் ஏற்படுத்தும். டிசம்பர் 13 அமெரிக்காவின் தேசிய கொக்கோ தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments