கோட்டுச்சித்திரம்

1
1222

நின் பிரிவானது உன் கோபத்தை விடக்
கொடூரமாய்க் கொல்கிறது

தனிமைக் கடலில் மூழ்கி
மூச்சடங்கி முழுதாய்க் கரைந்து போகிறேன்
உன் நினைவுகளுடன்

நீ தொட்ட இடமெல்லாம்
பட்ட மரமாய் உன் வான்மழை வேண்டி வருந்துகிறது

சுவரொட்டிய பல்லியின் சப்தமும்
நம் முத்தங்களை முன்னிறுத்தி முட்டுகிறது

காலை கண் விழிப்பில்
விழி கூட நின் முகம் தேடி
வேதனையில் விழிக்க மறுக்கிறது

விழி திறந்தும் நீ இல்லா இவ்வுலகு
அடர்ந்த காட்டினைத் தழுவும் கும்மிருட்டாகி கழிகிறது

உன் மௌன மொழிகளோ
சுவரில் தெறிக்கும் எதிரொலியாய்
நடு நிசிக் கூட்டம் நடத்துததடி

எழில் பொழியும் உன் வதனம்
கோட்டுச் சித்திரமாகி மனச்சுவரில்
மலர்ந்து மணநாளை ஞாபகமூட்டி நச்சரிக்கிறது

உனைத் தேடி ஐம்பொறிகளும்
மொத்தமாய் விடுமுறை எடுத்து போராட்டம் பண்ணுகின்றன

மனை எங்கும் உன் மணம் மாறாமல் கலந்து மண்டையினுள் புகுந்து
மதி கலங்க வைக்கிறது

நீ இல்லா அடுப்பங்கரை இசை இன்றி
மௌனம் விரதம் பூணுகிறது

இரவின் இன்பங்கள் நிலவின் கரு நிழலாய்
ஆங்காங்கே அப்பிக் கிடக்கிறது

நமக்குள் மூண்ட யுத்தம் தூரமாய்த் தோன்றி
எளியவன் எனைப் பார்த்து எக்காளமிட்டு சிரிக்கிறது

நிலவில்லாத வான் மேகமாய்
உன் நினைவுகளை அசைபோட்டு அசையாமல்
அந்தரத்தில் தொங்குகிறது மனது

உயிர் பிரிந்த வெறும் கூடு என்னுயிர் தேடுகிறது
கண்ணீரும் வற்றி
காலும் தடுமாறி விழுகிறது

எங்கிருந்தோ ஒரு குரல்
என் வரிகளைத் திருடி சோக கீதம் இசைக்கிறது

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shafiya Cader
Shafiya Cader
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

‘எங்கிருந்தோ ஒரு குரல் என் வரிகளைத் திருடி சோக கீதம் இசைக்கிறது ‘ very touchable lines