சங்கு புஷ்பம் – Clitoria Ternatea

0
1504

 

 

 

 

 

சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், கருவிளை, மாமூலி, காக்கட்டான், காக்கரட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதா என பலபெயர்களில் அழைக்கப்படுகின்ற  இக்கொடி ஃபேபேசியே குடும்பத்தை சேர்ந்தது. இலங்கையில் இது நீல காக்கணை பூ. இதன் ஆங்கிலப்பெயர்களாவன;  Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea,  Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea, மகாபாரதம் இதனை அபராஜிதா என்கிறது, ‘’கார்க்கோடப் பூ” என்கிறாள் ஆண்டாள். அரவிந்த அன்னை இம்மலரை’’ கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார்

சங்குப்பூ காடுகள்.தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. இச்செடியின் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. இதில் வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் அரிதாக வளர்வதுண்டு. வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளுமே மருத்துவப் பயன் கொண்டவை.

சங்குப்பூ ஏறு கொடி வகையை (Climber) சார்ந்தது. இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் அடர்நீல நிறமான மலர்களையும் உடையது. சிறிய நீளமான காய்கள் தட்டையாக இருக்கும். இச்செடியின் பூ நன்றாக விரிந்து மலர்ந்திருக்கும்போது, ஒரு சங்கைப்போல தோன்றுவதால் சங்குப்பூ என்று பெயர் வந்தது.  வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட மலர்கள் இருக்கின்றன.

தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ்  50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும்   Clitoria ternatea  தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora Voigt செருவிளை எனவும் தமிழ்ப்பெயர்களை கொண்டிருக்கின்றன.

 

 

 

 

 

ஆசியாவை தாயகமாக கொண்ட இச்செடி தற்பொழுது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும் காணப்படுகிறது.  கொடி போல் வளரும் இயல்புடைய இவை பற்றிக்கொள்ள துணை  இல்லாத இடங்களில் தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவி வளரும். ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் இச்செடி செழித்து  வளரும். சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10  தட்டையான விதைகள் இருக்கும்.  ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள்   வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி  மண்ணை  வளமாக்குகிறது. 

ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் வகையான இக்கொடியில் 4×3 செமீ அளவில்  நன்கு மலர்ந்த மலர்கள் இருக்கும் . மலர் உள்ளிட்ட இச்செடியின் பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்கள்  ternatins , triterpenoids, flavonol glycosides, anthocyanins , steroids, Cyclic peptide-cliotides  ஆகியவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும்  anthocyanins வகையைச்சேர்ந்த  delphinidin.  என்னும் நிறமியால் உணடானது. மலர்கள் பட்டாம்பூச்சியின் இறகுகளைப்போல அழகுற அமைந்திருக்கும்.

இச்செடி முதன்முதலில் 1678ல் Rumpf என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியலாளரால் Flos clitoridis ternatensibus  என்று பெயரிடப்பட்டிருந்தது.  பிறகு 1800ல் மற்றோரு ஜெர்மானிய தாவரவியலாளரால்   இவை டெர்னேஷியா தீவுகளில் கண்டறியப்பட்டபோது மலர்களின் அமைப்பைக்கொண்டு அதே பெயரில்தான் அழைக்கப்பட்டன.

 இதன் பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்ப்தால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பை குறிக்கின்றது.  ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக ஒரு தாவரத்திற்கு பெயரிடுவது குறித்து தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்து Vexillaria, Nauchea  போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள் ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் நிலைத்தது. பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’விலிருந்து கொண்டு வந்த செடிகளாதலால்  தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் சிற்றினப்பெயராக  ternatea என்பதையே வைத்தார்.  

இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இச்செடியின் மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும்.

வேகமாக வளரும் இயல்புடைய,  விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்.

 இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது . அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத தென்னிந்தியாவை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant)  இருக்கின்றது.

 

 

 

 

 

 தென்கிழக்கு ஆசியாவில்  உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது.  மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் அநேக மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம். சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களும் விதைகளும் கூட உணவில் சேர்க்கப்படுகின்றது

சீன பரம்பரிய மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும்  பலநோய்களுக்கு தீர்வாகும் முக்கியமான  மருந்தாக இது உபயோகிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மலர்கள் நினைவாற்றலுக்கும் மனச்சோர்வு நீங்கவும் வலிப்புநோய் தீரவும் தூக்கம் வரவழைக்கவும் கொடுக்கப்படுகின்றது. பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும்  சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறது .

மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிபொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று. இச்செடியின் வேர்கள் conjunctivitis. எனப்படும் இமைப்படல அழற்சிக்கு நல்ல மருந்தாகும்

சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

மலர்களில்   Antioxidants நிறைந்துள்ளதால் சருமத்தை பாதுகாத்து உடல் கழிவுகளை வெளியேற்றும். கேசப்பராமரிப்பிற்கான குணங்களையும் கொண்டிருக்கும் சங்குபுஷ்ப பானம் இளநரையை தடுத்து, கேசத்தின் வேர்களை பலமாக்கி, கேசமுதிர்வதையும் குறைக்கின்றது. ஜீரணத்திற்கும் குடற்புழுக்களை நீக்கவும் உதவுகின்றது இம்மலர்ச்சாற்றின் பானம்

மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின்  மனதை அமைதிப்படுத்துகின்றது. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தைக் குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்

மலர்களின் சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும் சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும்

 இத்தனை அழகிய எளிதில் வளரக்கூடிய சங்குபுஷ்ப செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும்  வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யபடுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. தற்போது இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால்  ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் விற்பனையில் இருக்கின்றன.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments