சட்டென ஒரு முத்தம்

1
1429

“…….அவளை அப்படியே கட்டியணைத்து முத்தமிட்டு விட்டான். தூரத்தே இதைக்கண்ட அவள் கணவன்…..”

******
நிரஞ்சன் ஒரு வயசுப் பையன்!

அந்த வயதுக்கேயுரித்தான நண்பர் படை, சேட்டை, குறும்பு , கும்மாளம் எல்லாம் வாய்க்கப் பெற்றவன்!

சில நாட்களுக்கு முன் தான் அவர்களின் வீட்டுக்கு முன் கீதா குடிவந்திருந்தாள்!

கீதாவுக்கு 30 வயதிருக்கும்!
திருமணமாகி இரண்டு வருடம் என்பதை marriage சேர்ட்டிபிகேட்டை காட்டினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்!
உடம்பை அப்படி சிக்கென வைத்திருந்தாள்!
அவள் வந்த நாள் தொட்டு அந்த ஏரியா இல்லத்தரசிகள் தத்தம் கணவன்மாரிடம் எக்ஸ்ட்ரா கரிசனை எடுத்து பராமரிக்க தொடங்கியிருந்தனர்!

இப்படியான காலகட்டத்தில் தான் நிரஞ்சனின் பார்வை கீதாவின் மேல் விழுந்தது!

நிரஞ்சன் அப்படி ஒன்றும் பிறன்மனை விழையும் பஞ்சமாபாதகம் செய்யும் கயவனல்லனாயினும், கீதாவில் ஏதோவொன்று அவனுக்கு பிடித்துப் போனது!
முக்கியமாக அவளது மாம்பழக் கன்னம்!
அதில் எப்படியாவது ஒரு கடி கடித்துவிட வேண்டும் என்ற ஆசை கொஞ்சநாளில் நிரஞ்சனுக்கு விஸ்வரூபமெடுத்து விட்டது!

கீதா அங்கு புதிதாய் குடிவந்தவளாகையால் நிரஞ்சனின் வீட்டுக்கு அடிக்கடி ஏதும் உதவி கேட்க வந்து போவாள். அப்போதெல்லாம் நிரஞ்சனைப் பார்த்து சிரித்து விட்டு செல்ல தவறுவதில்லை!
அவனை சில நேரங்களில் காணக் கிடைக்காவிட்டாலும் அம்மாவிடம் எங்கே என்று விசாரித்து விட்டுத்தான் செல்லுவாள்!
இதெல்லாம் சேர்ந்து அவனை உசுப்பேற்றி வைத்திருந்தது.

அந்த சந்தர்ப்பம் அன்று நிரஞ்சனுக்கு வாய்த்தது!

அது ஒரு செவ்வாய்க்கிழமை!
நிரஞ்சனும் அம்மாவும் கோவிலுக்கு சென்றிருந்தனர்!
எதிர்பாராதவிதமாக கீதாவை அங்கு சந்தித்த நிரஞ்சனுக்கு இருப்பு கொள்ளவில்லை!
கீதாவும் அவர்கள் அருகில் வந்து விட்டாள்!
அந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு தெரிந்தவர் யாரோ வந்துவிட, நிரஞ்சனையும் கீதாவையும் தனியே விட்டு விட்டு சற்று அப்பாலே சென்று விட, நிரஞ்சன் கீதாவை பார்த்தான்!

கீதாவின் பார்வையில் நிரஞ்சனை அருகில் அழைக்கும் அழைப்பு இருந்தது!

நிரஞ்சன் மெல்ல கீதாவை நெருங்கினான்!
அவளும் அதை எதிர்பார்த்தவள் போல அங்கேயே நின்றிருந்தாள்!
நிரஞ்சன் இன்னும் சற்று அருகில் போனான்!
கீதா நிரஞ்சனை நோக்கி இருகைகளையும் நீட்டினாள்!

இதற்கு மேலும் நிரஞ்சனுக்கு இருப்பு கொள்ளவில்லை!
கோயிலென்றும் பாராமல்
ஒரேயடியாக அவள் மேல் பாய்ந்து, கட்டிப் பிடித்து, வெகுநாட்களாக பார்த்து வைத்திருந்த அந்த மாம்பழக் கன்னத்தை கடித்தே விட்டான்!

கீதா சட்டென ” ஆ” என அலறவும், அங்கு கீதாவின் கணவன் வரவும் சரியாக இருந்தது!
தூரத்தே இருந்து இதைப் பார்த்த நிரஞ்சனின் அம்மா அங்கு ஓடி வருமுன், கீதாவின் கணவன் நிரஞ்சனை அலாக்காக தூக்கி விட்டான்..

தூக்கியவன் அப்படியே…
…..
…..

…..
….
….

நிரஞ்சனின் கன்னத்தில் முத்தமிட்டான்!

*******

ஏனென்று இன்னும் விளங்காதவர்கள் மூன்றாம் வரியை மீண்டுமொரு முறை வாசிக்கவும்!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Grecys
Grecys
5 years ago

So funny… 😀