சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 10

0
1313
PicsArt_09-14-10.25.45

சிங்கை செகராசசேகரர்

அரசகேசரிமழவர் சுட்டிக்காட்டிய அந்த சிறு குடிசையின் தாழ்ந்த வாயிலினூடு மெல்ல குனிந்து உள்ளே நுழைந்த பார்த்தீபன், அங்கே இயலவே குடிசையில் இருந்த இன்னுமொரு நபரை கண்டதும் எல்லையற்ற வியப்பையே அடைந்திருந்தானானாலும், அவர் சாட்சாத் கனகசூரிய சிங்கையாரியச் சக்கரவர்த்தியின் இரண்டாவது புதல்வரும் இளவரசர் சிங்கை பரராசசேகரரின் தம்பியாருமான சிங்கை செகராசசேகரர் தான் என்பதை உணர்ந்ததும், அவனின் மனதில் அதுவரை நிலவிய பலவிதமான வினாக்களுக்கான விடைகளும் அக்கணத்தில் அவனுக்கு புலப்படவே செய்திருந்ததானாலும், அதுவரை அவரை அங்கே எதிர்பார்த்திராத பார்த்தீபன் திக் பிரேமையுற்றவன் போல வாசலிலேயே சிலையாக நின்றுவிட்டிருந்தான்.

அந்த குடிசையினுள் இருந்த மஞ்சத்தின் பேரில் அமர்ந்திருந்த செகராசசேகரர், வாசலில் நின்று கொண்டிருந்த பார்த்தீபனை மெல்ல நிமிர்ந்து நோக்கி “பார்த்தீபா! ஏன் அங்கேயே நிற்கின்றாய் உள்ளே வா” என்று கம்பீரமான குரலில் அழைக்கவும், மீண்டும் சுயநினைவுக்கு வந்து விட்ட பார்த்தீபன் மெல்ல குடிசைக்குள் வந்ததன்றி இளவரசர் முன் பயபக்தியுடன் நிற்கவும் செய்தானாகையால் “ஏனப்பா நிற்கிறாய் இப்படி உட்கார்” என்று தான் அமர்ந்திருந்த மஞ்சத்தையே சுட்டிக்காட்டினார் சிங்கை செகராசசேகரர். அவ்வாறு இளவரசர் தன்னை அவரருகிலேயே அமருமாறு கூறியது பார்த்தீபனுக்கு மிகுந்த சங்கடத்தை உண்டாக்கவே, அவன் “தாங்கள் அரச குலத்தில் பிறந்தவர், நானோ சாதாரண படைவீரன்” என்று எதையோ கூற ஆரம்பிக்கவும் அவனது பேச்சை இடைமறித்து உட்புகுந்த செகராசசேகரர் “சாதாரண படைவீரனா” என்று கேட்டவாறே சரேலென மஞ்சத்தை விட்டு எழுந்து பார்த்தீபனின் தோள் மீது தன் வஜ்ராயுதத்தை ஒத்த வலக்கரத்தை பதித்தது மட்டுமன்றி, அவனின் கண்களை ஆழ ஊடுருவவது போல் நோக்கியவாறே,

“நீ சாதாரண படைவீரனல்ல, என் தமையனாரின் உற்ற சினேகிதன், அதைவிட நீ ஒரு சாதாரணமான வீரனாக இருந்திருந்தால் என் தமையனார் உன்னை இங்கு அனுப்பி இருக்கவும் மாட்டார். உன் வீரத்தையும் விவேகத்தையும் நன்கு அறிந்ததனாலேயே அவர் உன்னை இந்த பணிக்காக தெரிவு செய்திருக்கிறார்.” என்றார் மிக உறுதியான குரலில்,

“அப்படியே இருந்தாலும் அரசகுலத்தில் பிறந்த தங்களுக்கு உரிய மரியாதை அளிப்பது என் கடமை” என்றான் பார்த்தீபன் மிகப்பணிவான குரலில்.

அவனை நோக்கி இளநகை ஒன்றை தன் இதழ்களில் தவழவிட்ட செகராசசேகரர், அவன் தோள்களை தன் இரு கைகளாலும் பற்றி இழுத்து மஞ்சத்தில் அமர வைத்து விட்டு தானும் அருகில் அமர்ந்து கொண்டு மெல்ல பேசவும் ஆரம்பித்தார்.
“பார்த்தீபா, மதிப்பும் சிறப்பும் ஒருவருக்கு பிறப்பாலும் குலத்தாலும் வருவதாக நான் ஒருபோதும் கருதவில்லை. ஒருவர் மதிக்கத்தக்கவரா இல்லையா என்பதை அவரின் செயல்களே நிர்ணயிக்கின்றன. அதைவிட எனக்கு இந்த அரசகுலம், ராஜ்ஜிய பாரம் என்பவற்றின் மீது தற்சமயம் துளியளவும் ஈடுபாடு இல்லை. என் தந்தையாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காக்கவே இச்சமயம் இந்த படையெடுப்புக்காக இங்கு வந்திருக்கின்றேன். இந்த சிங்கை நகர் முழுவதுமாக கைப்பற்றப்பட்டதும் என் தமையனார் ஆட்சி பீடத்தை அலங்கரிப்பார். நான் எனக்கு பிடித்த பணிகளை நோக்கி சென்று விடுவேன்”
என்றார் செகராசசேகரர் உணர்ச்சி ததும்பியகுரலில்.

“என்ன! தங்களுக்கு பிடித்த பணியா?, அது என்ன பணி” என்றான் பார்த்தீபன் சந்தேகம் குரலிலும் தொனிக்க.

“தமிழ்” என்று ஒற்றை சொல்லில் உறுதியாக வெளிவந்தது செகராசசேகரரின் பதில்.

“தமிழா?” என்று வினவிய பார்த்தீபனின் புருவங்களும் வினாக்களை தொடுப்பன போலவே நிமிர்ந்தன.

“ஆம் தமிழ்ப்பணி தான், இந்த விசயபாகுவின் ஆட்சியில் சிதைந்து போன சிங்கைநகர் தமிழ்சங்கத்தை மீண்டும் உண்டாக்குவேன். பல புலவர்களையும் பண்டிதர்களையும் இணைத்து பல கவிகளும் இலக்கியங்களும் புனைய செய்வேன். ஆகா இன்பத்தமிழ் கவிகளை கேட்டு எத்தனை காலங்களாகின்றன.” என்று உணர்ச்சி ததும்பப் பேசிய செகராசசேகரரின் கண்கள் ஏதோ சொப்பனலோகத்தில் மிதப்பன போலவே தோற்றப்பிரேமையை ஏற்படுத்தின பார்த்தீபனுக்கு.

அவ்வாறு கனவுலகில் சஞ்சரித்து உணர்ச்சி ததும்ப பேசிக்கொண்டிருந்த செகராசசேகரர், மெல்ல தான் அமர்ந்திருந்த மஞ்சத்தை விட்டு எழுந்து நகர்ந்து சென்று அந்த குடிசையின் சாளரத்தின் அருகில் வந்து சாளரத்தை பிடித்த படியே சில கணங்கள் எதுவுமே பேசாமல் வெளியில் நோக்கிக்கொண்டிருந்தாராகையால் அச்சமயம் அங்கே நிலவிக்கொண்டிருந்த பேரமைதியை குலைக்க விரும்பியவன் போலவே பார்த்தீபன் மெல்லிய குரலில் “தாங்கள் எப்படி இங்கே” என்று முற்றுப்பெறாத வினாவொன்றை செகராசசேகரர் பேரில் தொடுக்கவும் செய்தானாகையால், சாளரத்தை விட்டு அகன்று பின்னால் திரும்பி பார்த்தீபனை நோக்கிய செகராசசேகரர் மெல்ல அவனருகில் வந்து
“பார்த்தீபா, தற்சமயம் என் தமையனார் சிங்கை பரராசசேகரரின் படைகள் சேதுக்கரையில் எந்நேரமும் சிங்கை நகரை முற்றுகையிடுவதற்கு ஆயத்தமாக நின்று கொண்டிருக்கின்றன. அதே போல் கிழக்கு திசையில் என் தலைமையிலான கப்பல்படைகளும் தயார் நிலையிலேயே உள்ளன. இச்சமயத்தில் சிங்கை நகரின் நிலைமையை அறியவும் தாக்குதல் வியூகத்தை கணிக்கவும் நான் இங்கு வர வேண்டியது கட்டாயமாகின்றது” என்றார் மிக அமைதியான ஆனால் கம்பீரமான குரலில்.

“ஏன் அதற்கு ஒற்றர்கள் யாருமில்லையா, தாங்கள் தான் வர வேண்டுமா?” என்றான் பார்த்தீபன் சந்தேகம் கலந்த குரலில்.

“ஆம் நான் வர வேண்டியது அவசியமாகின்றது” என்றார் செகராசசேகரர் மிக உறுதியாக.

“ஏன்?” ஒற்றை சொல்லில் வெளிப்பட்டது பார்த்தீபனின் கேள்வி.

“ஏனென்றால் என் அண்ணனிடமுள்ளது போல் என்னிடம் திறமை மிகு வீரன் பார்த்தீபன் இல்லையே” என்றார் செகராசசேகரர் சர்வசாதாரணமாக.

“பரிகாசம் வேண்டாம் ஐயா, நான் ஒன்றும் அத்தனை திறமைசாலி அல்ல” என்று கூறிய பார்த்தீபனின் குரல் அவன் அடைந்திருந்த தர்மசங்கடமான நிலையையே குறித்துக்காட்டியது.

“இல்லை பரிகசிக்கவில்லை பார்த்தீபா, உண்மையிலேயே நீ மிகுந்த திறமைசாலி” என்று கூறி சிறிது தாமதித்த செகராசசேகரர் “நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன் உனக்கு தெரிந்த பதிலை சொல்” என்று கூறிவிட்டு, பார்த்தீபனின் அருகில் அமர்ந்து அவன் கண்களை தீட்சண்யமாக நோக்கிக்கொண்டே “பார்த்தீபா, இப்பொழுது எந்த வழியாக இச்சிங்கைநகரை தாக்குவது உசிதமானது என்று நீ கருதுகிறாய்?” என்று ஏதோ சந்தேகம் கேட்பவர் போன்றே வினவவும் செய்தார். அதற்கு “நான் எப்படி” என்று ஏதோ கூற முற்பட்ட பார்த்தீபனை கைகளாலேயே தடை செய்த இளவரசர் “உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைக்கூறு” என்றார் மிக இயல்பான குரலில். மெதுவாக இருமுறை மேலும் கீழும் தலையை அசைத்த பார்த்தீபன் அந்த வினாவிற்கு உடனடியாக பதிலளிக்காமல் மஞ்சத்திலிருந்து எழுந்து இருமுறை அங்குமிங்கும் நடந்து ஏதோ பலமான சிந்தனையில் ஆழ்ந்து விட்டு, பின் உறுதியான பார்வையை செகராசசேகரர் மீது வீசியபடியே மெல்ல பதிலளிக்கவும் ஆரம்பித்தான். அவன் அளித்த அந்த பதிலை கேட்டு சிங்கை செகராசசேகரர் மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்ததன்றி, அவனின் புத்திக்கூர்மையையும் போர் வியூகத்தையும் கண்டு மெய்சிலிர்த்து நின்றதுடன் அவனை ஆதரவுடன் கட்டியணைத்துக்கொள்ளவும் செய்தார்.

சிங்கை நகரத்து சிம்மாசனம் பதினோராவது அத்தியாயம் தொடரும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments