சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 11

0
1200
PicsArt_09-18-10.46.45

யுத்த வியூகம்

தாக்குதல் திட்டம் தொடர்பாக பார்த்தீபனிடம் சிங்கை செகராசசேகரர் ஏதோ சந்தேகம் கேட்பவர் போல் கேட்கவும், மெல்ல தலையை மேலும் கீழும் அசைத்த பார்த்தீபன் அங்கிருந்து எழுந்து குடிசையில் இருமுறை அங்குமிங்கும் உலவிய படியே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி, பின் செகராசசேகரரை நோக்கி தன் கூரிய வேல்ப்பார்வையை வீசியபடியே மெல்ல தன் திட்டத்தை விபரிக்கவும் ஆரம்பித்தான்.

“இச்சிங்கை நகரின் வடக்கு கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய மூன்று திசைகளிலும் பெருங்கடல் சூழ்ந்து காவலரண் அமைத்துள்ள அதே வேளை தென்திசையிலும் அடங்காப்பதியின் அடர் வனங்களும் பெரும் காப்பாகவே அமைந்துள்ளன”

“ஆம்” ஒற்றை சொல்லில் வெளிப்பட்டது செகராசசேகரரரின் பதில்.

“அடர்வனங்களுக்கு அப்புறமாக பலமிகு தக்கிணதேசத்து சிங்களராஜ்ஜியம் பரந்து கிடக்கிறது, ஆகவே தரை மார்க்கம் எப்பொழுதும் அவர்களின் கட்டுக்குள் தான் இருக்கும். அதேவேளை தென்திசையிலிருந்து படையுதவியும் எப்பொழுதும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். ஆகவே முதலில் அந்த வழியை தடைசெய்தாக வேண்டும்.” என்றான் பார்த்தீபன் மிக உறுதியான குரலில்.

“எவ்வாறு?” என்றார் செகராசசேகரர் வியப்பு குரலிலும் தொனிக்க.

“மாந்தை துறைமுகத்தில் நம்வீரர்கள் சிலரை வியாபாரிகள் போல் வேடமிட்டு தங்கவைக்க வேண்டும். அதே வேளை அடங்காப்பதி வன்னியர்களின் உதவியையும் இரகசியமாய் பெற்றுக்கொள்ளவும் வேண்டும். அவர்களை கொண்டு தென்திசையிலிருந்து வரும் படையுதவிகளை இடைவழியிலேயே முறியடிக்க வேண்டும்.” என்று கூறிய பார்த்தீபன் சற்று நிறுத்தவும்,

“ஆகா என்ன வியப்பு! இதுவல்லவோ உயிர் நட்பு” என்றார் செகராசசேகரர் வியப்பு குரலிலும் பிரதிபலிக்க.

“என்ன வியப்பு! என்ன சொல்கிறீர்கள்” என்றான் பார்த்தீபன், அவனின் கண்களும் வினாக்களையே தொடுக்க.

“பார்த்தீபா இப்பொழுது நீ கூறிய திட்டத்தை நேற்றைய தினமே தமையனார் செயற்படுத்தி விட்டார், மாந்தை துறைமுகத்தில் சீன வணிகர்களுடன் நம் வீரர்களும் மாறுவேடத்தில் வந்திறங்கியிருக்கிறார்கள், அதேவேளை வன்னியர்களின் உதவியையும் பெறுவதற்கே நான் இங்கு வந்துள்ளேன். ஆஹா என் அண்ணனும் நீயும் மனத்தால் எந்தளவு ஒன்றுபட்டிருக்கிறீர்கள், அதை நினைத்து வியந்தேன்” என்று வியப்புக்கலந்த தொனியிலேயே விளக்கினார் செகராசசேகரர்.

“மன எண்ணங்களும் உணர்வுகளும் ஒன்றாகும் பட்சத்திலேயே நட்பு என்பது உண்டாகும், அதில் வியப்பதற்கு என்ன இருக்கின்றது” என்று கூறி இளநகைபூத்த பார்த்தீபன் மேலும் தொடர்ந்தான்.

“தரைவழி மார்க்கங்கள் எல்லாம் முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் இச்சமயத்தில் கடல்வழி மார்க்கம் ஒன்றே நாம் தாக்குதலை ஆரம்பிக்க மிக பொருத்தமானதாகும்”

“ஆம்” உறுதியாக பதிலளித்தார் செகராசசேகரர்.

“ஆனால் வடதிசையில் தொண்டைமானாறு மூலமாகவோ காங்கேயன்துறை வழியாகவோ உள்நுழைவதென்பது தற்கொலைக்கு சமம்.” என்றான் பார்த்தீபன்.

பார்த்தீபன் அவ்வாறு கூறியதன் பொருள் செகராசசேகரருக்கும் நன்கு புரிந்தே இருந்ததென்றாலும், அதை அவன் வாயாலேயே கேட்க விரும்புபவர் போல,

“எவ்வாறு” என்றார் சந்தேகம் கலந்த குரலில்.

“தொண்டைமானாற்று துறைமுகத்திலிருந்து மூன்று காத சுற்றுவட்டத்தில் முக்கோணவடிவில் அமையுமாறு மூன்று சிறு கோட்டைகள் அமைக்கப்பட்டு படைவீரர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள், அதை ஒத்த வகையான ஏற்பாடு காங்கேயன்துறையிலும் செய்யப்பட்டிருக்கின்றது, ஆகையால் நாம் வடதிசை வழியாக உள்நுழையும் பட்சத்தில் அந்த கோட்டைகளில் உள்ள வீரர்கள் நம்மை சுற்றிவளைத்துக்கொள்வார்கள், ஒரு பக்கம் சிங்கள படைகளும் மறுபக்கம் பெருங்கடலும் நம் படைகளை நடுவிலே சிறைசெய்து விடும்” என்றான் மிக உறுதியாக.

“அப்படியென்றால் வேறுவழி”

“இருக்கிறது”

“அது என்ன” வியப்புடன் வினவினார் செகராசசேகரர்.

“பலவீனத்தை தாக்கி பலத்தை தகர்ப்போம்” என்றான் பார்த்தீபன்.

“அப்படியென்றால்” மீண்டும் வியப்புடனே வினவினார் செகராசசேகரர்.

“சிங்கை நகரின் மேற்கு திசை அத்தனை பலப்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. ஆகவே எம்படைகளில் ஒரு பிரிவு மேற்கு திசையில் ஊர்காவற்றுறை அருகாக உள்நுழைந்து திடீர் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு மேற்குத்திசை வழியாக நாம் தாக்குதலை ஆரம்பித்ததும், வடதிசையில் நிலைகொண்டுள்ள படைகளும் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள படைகளும் மேற்கு நோக்கி முன்னேறும், அவ்வாறு அப்படைகள் நகர்ந்ததும், அவர்கள் சிறிதும் எதிர்பாராத விதமாக கிழக்கு திசை வழியாக இன்னுமொரு படை கோணமலை துறைமுகத்தின் வழியாக தாக்குதலை ஆரம்பிக்கும், இந்த தாக்குதலால் சிங்கள படைகள் நிலைகுலையும் பட்சத்தில், வல்லிபுரம் வெள்ளையங்கிரி அவர்களினதும் அரசகேசரி மழவரினதும் சுதேச படைகள் வடக்கிலிருந்து தாக்குதலை ஆரம்பிக்கும். இந்நேரத்தில் தென்திசையிலிருந்து சிங்களப்படைக்கு கிடைக்கும் உதவிகள் இயலவே தடைப்பட்டுவிடுமாகையால், தக்கிணதேசத்துடனான சிங்களபடைகளின் உறவு அறுந்து போகும், அச்சமயத்தில் தெற்கிலிருந்து வன்னியர் படை வடதிசை நோக்கி முன்னேறும். சிங்களப்படை நம் படைகளுக்கு நடுவில் சிக்கிக்கொள்ளும். இச்சமயத்தில் தாக்குதலை நிகழ்த்துவது எளிது.” என்று கூறிய பார்த்தீபனை, அவனின் உதடுகள் உதிர்த்த அத்தனை சொற்களையும் விழுங்குவது போல் வைத்தகண் வாங்காமல் நோக்கிக்கொண்டிருந்த செகராச சேகரர், அவனருகில் வந்து அவனின் தோள்களை பற்றிப்பிடித்து இழுத்து கட்டித்தழுவிக் கொண்டதல்லாமல்,
“ஆஹா! பார்த்தீபா நீ வீரத்தில் மட்டுமல்ல வியூகத்திலும் சிறந்தவன், உன்னைப்போன்ற ஒரு வீரன் இருந்தால் இந்த ஒரு போர் என்ன இன்னும் எத்தனை போர்கள் வந்தாலும் சமாளித்து ஜெயலட்சுமியை எம்வசமாக்கி விடலாம்,” என்று உணர்ச்சி ததும்ப கூறிக் கொண்டதுடன் “பார்த்தீபா நீ சிங்கை நகரிற்கு வந்து ஒரு தினத்திலேயே இத்தனை விடயங்களை எப்படி தெரிந்துகொண்டாய்” என்றார் சந்தேகம் குரலிலும் தொனிக்க.
“ஐயா வருகின்ற வழியில் படகு செலுத்தி வந்த படகோட்டியிடம் தற்சமயம் சிங்கைநகரின் காவல் எப்படி உள்ளது என்கின்ற விடயங்களை அறிந்து கொண்டேன், மேலும் சில விடயங்களை நேற்றைய தினம் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்கார பெண்ணிடமிருந்து தெரிந்து கொண்டேன், சோதனை சாவடியில் மாட்டியிருந்த அச்சமயத்தில் என்னை காப்பாற்ற வந்த அந்த ஆலிங்கனும் அருகிலுள்ள தளபதியின் கோட்டையில் வீரர்கள் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருப்பதாகவும் அதன் பொருட்டு தளபதி ராஜசிங்கவும் இன்னும் சில வீரர்களும் அங்கு சென்று விட்டதாகவும் கூறினான். அது நான் கேள்விப்பட்ட விடயங்களை மேலும் ஊர்ஜிதம் செய்தது. அவ்வாறு நான் பெற்றுக்கொண்ட தகவல்களை அடிப்படையாக வைத்து ஒரு திட்டத்தையும் வகுத்துக்கொண்டேன்” என்றான் பார்த்தீபன் சர்வசாதாரணமாக. பார்த்தீபனை பெருமிதமாக நோக்கிகொண்டே அவன் தோள்களில் மெல்ல தட்டிக்கொடுத்துவிட்டு “இப்பொழுது புரிகிறதா நீ அத்தனை சிறந்த வீரன் என்று நான் ஏன் கூறினேன் என்பது” என்று கூறி புன்முறுவல் பூத்தார் செகராசசேகரர். இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் இருந்து ஒரு உருவம் “குடிசைக்குள் யுத்த ஆலோசனையா” என்று வினவியபடி, பயங்கரமாக நகைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது.

சிங்கை நகரத்து சிம்மாசனம் அத்தியாயம் பன்னிரெண்டு தொடரும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments