எந்த மார்க்கம்?
செகராசசேகரரும் பார்த்தீபனும் குடிசையில் போர்யுக்தி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கதவை படார் என திறந்து கொண்டே “குடிசைக்குள் யுத்த ஆலோசனையா?” என்று வினவிய படியே உள்ளே நுழைந்த ஆலிங்கனை கண்டதும், பார்த்தீபன் முதலில் சற்றுத் தடுமாறினானாலும், அடுத்து அவன் உதிர்த்த அந்த பயங்கரமான நகைப்பானது பார்த்தீபனுக்கு பெரும் எரிச்சலையே உண்டாக்கியிருந்ததாகையால், செகராசசேகரரை நோக்கி
“ஐயா இந்த மனிதர் ஏதும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?” என்றான் கடுமையான குரலில். அதற்கு பதிலளிப்பவன் போல ஆலிங்கனே “ஏனப்பா உனக்கு இப்படி ஒரு சந்தேகம் எழுந்தது” என்று மற்றுமொரு வினாவையும் தொடுத்துவைத்தான். அதற்கு பார்த்தீபன்
“இல்லை எப்பொழுது பார்த்தாலும் இப்படி பயங்கரமாக எக்காளம் கொட்டி சிரிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறீரே அது தான் கேட்டேன்” என்றான் விசமம் குரலிலும் தொனிக்க. அதற்கு ஆலிங்கன் “சிரிப்பதில் ஏதப்பா தவறை கண்டாய், மற்றவர்கள் நம்மை பார்த்து சிரிக்கும்படியாக வாழ்வது தான் தவறு, சிரித்து வாழ்வதில் தவறேதுமில்லையே!” என்றான் சர்வசாதாரணமாக.
“சிரித்து வாழ்வது தவறில்லை, சிரிப்பதையே வாழ்க்கையாக வைத்திருப்பது தான் தவறு” என்று இகழ்ச்சி ததும்பிய குரலில் பதிலளித்தான் பார்த்தீபன்.
“சப்பப்பா இருவரும் சற்று நிறுத்துங்கள், சிறிது நேரத்திற்குள் எலியும் பூனையும் போல் ஆரம்பித்து விட்டீர்களே” என்றார் செகராசசேகரர் சற்று கடுமையான தொனியில்.
“இளவரசே இந்த முரடனால் தான் எல்லாம் வந்தது, எப்பொழுது பார்த்தாலும் என்னை வம்புக்கு இழுக்கிறான்” என்றான் ஆலிங்கன் சற்று சினத்துடன்.
“ஏனப்பா நீ என்ன என்னுடைய முறைப்பெண்ணா? எப்பொழுதும் உன்னை வம்புக்கு இழுக்க” என்றான் பார்த்தீபன் விசமமாக. பொறுமையிழந்த செகராசசேகரர்
“அடேயப்பா போதும் நிறுத்துங்கள்” என்றார் கடும் தொனியில்.
“இளவரசே பாருங்கள் இந்த முரடனால் வந்த சேதியை மறந்து பேசிக்கொண்டிருக்கின்றேன். இளவரசே! உங்கள் இருவருக்கும் உணவு கொண்டு வந்திருக்கிறேன், இந்த முரடன் சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கட்டும். நள்ளிரவில் புறப்பட்டாக வேண்டும்” என்று கூறி உணவு கொண்டுவந்த பணியாளனை கை தட்டி அழைக்கவும் செய்தான். உணவை கொண்டுவந்த அந்த பணியாளன் இருவர் முன்னும் உணவை பரிமாறி வைத்து விட்டு சற்று விலகி பணிவாக நின்று கொண்டான். காலையில் தேன்மொழியின் வீட்டில் உணவருந்தி விட்டு புறப்பட்ட பின் வேறெங்கும் இடையில் ஆகாரமேதும் எடுத்துக்கொள்ளாத பார்த்தீபன் உண்மையிலேயே மிகுந்த பசிவயப்பட்டிருந்தானாகையால் மறு பேச்சு ஏதுமின்றி குனிந்த தலை நிமிராமல் வேகமாக உணவை உட்கொள்ளவும் ஆரம்பித்தானாகையால், ஆலிங்கன் பார்த்தீபனை நோக்கி
“ஏனப்பா இப்பொழுதே போருக்கு போக போகின்றாயா? இத்தனை வேகமாக வாய்க்குள் அள்ளிக்கொட்டுகிறாய். ஒன்றும் அவசரமில்லை மெதுவாகவே சாப்பிடு” என்று விசமமாகவே கூறியதல்லாமல், பலமாக நகைக்கவும் செய்தானாகையால் பார்த்தீபன் ஆலிங்கனை சுட்டெரிப்பது போல் நிமிர்ந்து நோக்கவும் “ஐயய்யோ நான் போகிறேன் ஆளை விடு” என்று கூறிவிட்டு, “விறு விறு” என நடக்கவும் ஆரம்பித்தான் ஆலிங்கன். அவ்வாறு ஆலிங்கன் அங்கிருந்து சென்றதும் செகராசசேகரர் பார்த்தீபனை நோக்கி
“பார்த்தீபா! அவனை நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். அவனின் சுபாவமே அது தான், ஆனால் காரியத்தில் கெட்டி, வெகு திறமைசாலி, எந்த சூழ்நிலையையும் சமாளித்து தப்பிவிடும் கலையறிந்தவன்” என்றார் உறுதியான குரலில்.
தான் சோதனை சாவடியில் சிக்கியிருந்த போது ஆலிங்கன் தன்னை வெகு புத்திசாலித்தனமாக தப்புவித்து இங்கு அழைத்து வந்ததும் அச்சமயத்தில் பார்த்தீபனுக்கு நினைவுக்கு வந்ததாகையால் அவனும் செகராசசேகரர் சொல்வதை ஓரளவு ஏற்றுக்கொள்ளவும் ஆரம்பித்திருந்தான். மேலும் தொடர்ந்த செகராசசேகரர் “சிற்றெறும்பு புற்றின் சிறுதுளையளவு வழிகிடைத்தாலும் எந்த இடத்திலும் இலகுவாக நுழைந்துவிடுவான். வேவு பார்ப்பதிலும் வேடம் தரிப்பதிலும் வெகு கெட்டிக்காரன்” என்று உணர்ச்சி பொங்க கூறி முடித்தார். இயலவே பார்த்தீபன் சோதனை சாவடியில் ஆலிங்கனின் திறமைகளை கண்கூடாக பார்த்திருந்தானாகையால், ஆம் என்பது போல் மெல்ல தலையசைத்ததுடன் “ச்சே அவன் செய்த உதவி பற்றி சிறிதும் நன்றி உணராமல் இப்படி பரிகாசம் பேசி விட்டோமே” என்று மனதினுள் எண்ணி வருந்தியதுடன், “நள்ளிரவில் அவனை சந்தித்ததும் முதல் வேலையாக அவனுக்கு நன்றி கூறி மன்னிப்பும் கோரிவிட வேண்டும்.” என்று மனதினுள் முடிவெடுத்தும் கொண்டான்.
இருவரும் உணவருந்தி முடித்ததும், அருகிலிருந்த ஓலைப்பாயை எடுத்து தரையில் விரித்த பார்த்தீபன் மல்லாந்து படுத்து கூரையை நோக்கிக்கொண்டே ஏதேதோ சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் தொண்டைமானாற்று துறையில் இறங்கியது முதல் தேன்மொழியை சந்தித்தது வரை நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளும் அவனின் மனதில் படமாக சுழன்றோடிக்கொண்டிருந்தன.
அடுத்த சில நாழிகைகளிலேயே மேல் வானின் அதியற்புத மாலைநேர மாயாஜாலங்கள் மறைந்து எங்கும் கங்குல் படர ஆரம்பித்திருந்தது. தனிமையும் இரவின் அமைதியும் இணைந்து காதலின் வேதனையை அதிகரிப்பது இயல்பானதொன்று தான் என்பதாலும், பார்த்தீபனின் மனதினுள்ளும் தேன்மொழியின் பேரழகு வதனத்தின் விம்பம் உருவாகி அவனை இம்சித்துக்கொண்டிருந்ததுடன் அவளின் அழகிய தாமரை வதனத்திலிருந்த அந்த மெல்லிதழ் உதடுகள் உதிர்த்த புன்னகையும் அவன் மனதில் தோன்றி அவனை அணுஅணுவாய் சித்திரவதை செய்து கொண்டிருந்தது. இதுவரையில் வாழ்வின் எத்தனையோ விதமான துன்பங்களையும் ஆபத்துகளையும் கண்ணிமையாமல் நோக்கி எதிர்கொண்டிருந்த பார்த்தீபனின் மனமும் அந்த காதல் எனும் கொடும் சுழலில் சிக்கி திணறிக் கொண்டிருந்த அதேவேளை அங்கே தொண்டைமானாறு அருகில் தன் குடிலில் அதே போன்ற ஒரு ஓலைப்பாயில் படுத்து குடிலின் விட்டத்தை நோக்கிக்கொண்டிருந்த தேன்மொழியும் காதல் எனும் இன்ப வேதனை தன்னை உண்மையிலேயே பீடித்திருப்பதை உணர்ந்திருந்தாள்.
நள்ளிரவு அண்மித்ததும் குடிசையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஆலிங்கன் பார்த்தீபனை அழைத்துக்கொண்டு விரைவாக புறப்பட்டு செல்கையில் இடை வழியில் பார்த்தீபன் ஆலிங்கனை நோக்கி
“வல்லிபுரத்தை அடையவேண்டி வேறு மார்க்கமாக செல்ல வேண்டும் என்று மழவர் கூறினாரே அது எந்த மார்க்கம்” என்றான் சந்தேகமான குரலில். பார்த்தீபனை நோக்கி சற்று இரைந்தே நகைத்த ஆலிங்கன் மெள்ள அந்த வினாவிற்கு பதிலளிக்கவும், அந்த மார்க்கம் இன்னது தான் என்பதை அறிந்த பார்த்தீபன் அளவில்லாத பெருவியப்புக்கும் உள்ளானான்.
பதின்மூன்றாம் அத்தியாயம் தொடரும்..