சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 13

0
1368
PicsArt_09-26-04.13.09

விளக்கு வேதாந்தம்.

கீழ்வானில் கிளைவிட்ட கிரகபதி மெல்ல மேலெழுந்து தன் பொன்னொளிக் கிரணங்களை ஆகாயவெளி எங்கும் படரவிட்டிருந்தானாகையால், வானில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் எழுந்து நின்ற மேகக்கூட்டங்கள் அவனின் ஒளியை பெற்று தாமும் தீப்பற்றி எரிவது போன்ற தோற்றப்பிரேமையை ஏற்படுத்திய அதே வேளை பல வித பட்சிகளும் வானில் வட்டமிட்டு பெருங்கூச்சலிட்டுக் கொண்டுமிருந்த அந்த ரம்மியமான காலை வேளையில், சிங்கை நகரின் பிரதானமான பெரு வீதிகளில் ஒன்றான வல்லிபுரத்து பெருவீதியில், முழுவதுமாக தலை மழித்து காவி வஸ்திரம் தரித்த பௌத்த பிக்கு ஒருவர் வேகமாக நடைபயின்று வந்து கொண்டிருந்த அதே வேளை வருகின்ற வழிநெடுகிலும் புத்தரின் புனித போதனைகளை தமிழிலும் சிங்களத்திலும் எடுத்து விளாசிக்கொண்டேயிருந்தார். அவரை பின்தொடர்ந்து திடகாத்தரதேகியான வாலிபன் ஒருவனும் வந்து கொண்டிருந்தான். அவ்வாறு அவரை தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்த அந்த வாலிபன் மெள்ள பிக்குவை நெருங்கி “அடேயப்பா, இப்படி அதிகபிரசங்கித்தனம் செய்து மாட்டி விடப்போகிறாய் சற்று அமைதியாகவே வா” என்றான் மிக மெல்லியகுரலில். அதைக்கேட்ட அந்த பிக்கு சற்று இரைந்தே நகைத்துவிட்டு “பார்த்தீபா! நீ என்னை அடேயப்பா என்று விழித்தது மட்டும் யார் காதிலாவது விழுந்திருந்தால் நீ தொலைந்தாய்” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு, பின் சற்று பலமாக “புத்தம் சரணம் கச்சாமி” என்று கோசம் எழுப்பியபடியே தொடர்ந்து நடந்தார்.

முந்தைய நாள் நள்ளிரவு நடந்தேறிய அத்தனை சம்பவங்களும் பார்த்தீபனுக்கு மிகுந்த பிரமிப்பையும் வியப்பையுமே ஏற்படுத்தியிருந்ததாகையால், அந்த பிக்குவின் செய்கையும் பார்த்தீபனுக்கு சினத்தை ஏற்படுத்துவதற்கு பதில் வியப்பையே ஏற்படுத்திக்கொண்டிருந்தது. முந்தையநாள் நள்ளிரவில் பார்த்தீபன் மல்லாந்து படுத்து குடிலின் மேற்கூரையை நோக்கிய படி ஏதேதோ சிந்தனைகளில் தன் மனதை லயிக்கவிட்டிருக்கையில், திடீரென கதவை திறந்தபடி ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. காவிவஸ்திரம் தரித்த அந்த பிக்கு உருவத்தை கண்ட பார்த்தீபன் திடுக்குற்று எழுந்ததல்லாமல், தன் உறை வாளையும் எடுத்து தயாராக நின்றானாதலால், அந்த பிக்கு அவனை நோக்கி “பார்த்தீபா கொஞ்சம் இரு, ஒரே வெட்டாக வெட்டிவிடாதே, நான் தான்” என்றார் மெல்லிய குரலில். அந்த குரல் பார்த்தீபனுக்கு இயலவே நன்கு பரீட்சயமான குரலாகவே தோன்றியதாகையால் நன்கு அவரின் முகத்தை கூர்ந்து நோக்கியதும், அந்த பிக்கு வேடத்தில் வந்திருப்பது ஆலிங்கன் தான் என்பதை இனங்கண்டு கொண்டானாதலால், அவனை நோக்கி “இதேதப்பா புது வேஷம்” என்றான் வியப்பு கலந்த குரலில். அதற்கு ஆலிங்கன் “இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் எந்த வேடமிட்டாலும் சோதனை இருக்கும். ஆனால் இந்த வேடத்திற்கு மரியாதை மட்டும் தான் இருக்கும்.” என்று கூறி பலமாக நகைத்தான்.
“அப்படியென்றால் நானும் தலையை மழிக்க வேண்டுமா, இந்த சுருள்கேசம் தான் என் முகத்திற்கு பேரழகு என்று பெண்கள் சொல்வார்கள்” என்றான் பார்த்தீபன் வருத்தம் தோய்ந்த குரலில்.
“பெண்கள் சொல்வார்களா, இல்லை பெண்கள் சொல்வார்கள் என்று நீயாக கற்பனை செய்து கொள்வாயா?” என்று விசமத்துடன் வினவிய ஆலிங்கன் இரைந்து நகைக்கவும் செய்தானாகையால், சற்றுமுன் பார்த்தீபன் எடுத்துக்கொண்ட சபதங்கள் எல்லாம் காற்றுடன் கரைந்து காணமலே போய்விடவும் அவனை நோக்கி கண்களில் அனல் பறக்க ஒரு பார்வையை வீசினானாகையால் “அடேயப்பா கோபப்படாதே சண்டையிட அவகாசமில்லை புறப்படுவோம்.” என்று கூறிவிட்டு கிடுகிடுவென நடக்கவும் ஆரம்பித்தான் ஆலிங்கன்.

சிறிது தூரம் ஆலிங்கனை பின்தொடர்ந்து சென்ற பார்த்தீபன் திடீரென அவனை நோக்கி “ஏனப்பா, வல்லிபுரத்திற்கு வேறு மார்க்கமாக செல்ல வேண்டுமென்று மழவர் கூறினாரே அது எந்த மார்க்கம்” என்றான் சந்தேகக்குரலில். அதற்கு மூன்றே எழுத்துக்களில் “கடல்” என்று ஆலிங்கன் அளித்த அந்தப்பதிலை கேட்ட பார்த்தீபன் பெரும் வியப்பை அடைந்ததல்லாமல், “என்ன கடலா?” என்று எல்லையற்ற பிரமிப்புடனனே ஒரு வினாவையும் வினவி விட்டு, மறுவார்த்தை ஏதுமின்றி ஆலிங்கனையே பின் தொடர்ந்தும் நடக்கவும் செய்தான்.

சிறிது நேர நடைபயணத்திற்கு பின் கடற்கரை ஓரத்தை அடைந்துவிட்ட இருவரும் அங்கிருந்த ஒரு படகில் ஏறிக்கொண்டதல்லாமல் ஆலிங்கன் படகு செலுத்துபவனை நோக்கி “படகை செலுத்து” என்று உத்தரவிட்டுவிட்டு, படகில் அமர்வதற்கேற்றவகையில் உருவாக்கப்பட்ட சிறு பலகை கட்டில் அமர்ந்து கொள்ளவும், அவனை தொடர்ந்து பார்த்தீபனும் ஆலிங்கனுக்கு அருகில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டான்.

படகில் வெளிச்சத்திற்காக ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கை சுட்டிக்காட்டிய ஆலிங்கன் பார்த்தீபனை நோக்கி “பார்த்தீபா இதோ தெரிகிறதே இந்த விளக்கு, இதற்கும் மனித மனத்திற்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கின்றன.” என்று ஏதோ வேதாந்தம் கூறுபவன் போலவே கூறினானாகையால், “என்ன ஒற்றுமை?” என்றான் பார்த்தீபன் சந்தேகக்குரலில்.
“இரவு முழுவதும் ஒளியற்று துடிக்கும் மனித குலம் இந்த விளக்கை ஏதோ அமிர்தம் என்றே கருதுகின்றன, ஆனால் காலையில் அதை விட சிறந்த சூரியன் வந்ததும், தன்னுயிர் கொடுத்து ஒளி தந்த இந்த விளக்கு உதாஷீனம் செய்யப்படுகிறது, மனித மனதில் அன்பும் இப்படி தான், இதையறியாமல் நாம் தான் அன்பு பாசம் எனும் தழைகளில் சிக்கித்தவிக்கிறோம்” என்று கூறி பெருமூச்செறிந்தான் ஆலிங்கன்.
“ஏனப்பா பிக்கு வேடம் தரித்ததும் வேதாந்தம் பேச ஆரம்பித்துவிட்டாய், இது என்ன விளக்கு வேதாந்தமா?” என்று கூறிய பார்த்தீபன் பலமாக நகைத்தான்.
“இல்லையப்பா ஏதோ தோன்றியது கூறினேன்!” என்றான் ஆலிங்கன் அமைதியான குரலில்.

இவ்வாறு பல விடயங்களை பேசியபடியே பயணப்பட்டுக் கொண்டிருந்தாலும் இடையிடையே ஆலிங்கன் சில இடங்களில் அந்த விளக்கை அணைத்து விட்டதுடன் அவ்விடம் கடந்ததும் மீண்டும் ஒளியேற்றவும் செய்தானாகையால், அவனின் அந்த செயல் பார்த்தீபனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தவே, “ஏனப்பா விளக்கை இடையிடையே அணைத்து விடுகிறாய்?” என்றான் வியப்பு குரலிலும் தொனிக்க.
“பார்த்தீபா அன்பு எப்படி அதிக இன்பத்தை தருமோ அதே போல் பல சந்தர்ப்பங்களில் சொல்லொண்ணா துன்பத்தையும் தரும், அதே போல தான் இந்த ஒளியும் நமக்கு உதவவும் செய்யும், சில இடங்களில் உபத்திரவமாகவும் அமையும்.” என்றான் அமைதியாக. அவன் கூறியதன் பொருள் பார்த்தீபனுக்கு முழுமையாக புரியவில்லை ஆகையால், ஏதோ சந்தேகம் கேட்பவன் போன்ற குரலிலேயே “எப்படி?” என்று ஒற்றை சொல்லில் வினவவும் செய்தான்.
“இந்த விளக்கை நான் அணைத்து விட்டேன் அல்லவா? அந்த இடங்களில் சோதனை சாவடிகள் இருக்கின்றன. இந்நேரத்தில் ஒரு படகு கடலில் பயணிப்பது தேவையற்ற ஆபத்துகளை உண்டுபண்ணலாம் அதனால் தான் விளக்கை அணைத்தேன், ஆனால் ஒளியின்றி படகு செலுத்துவது மிகக் கடினம், அதனால் தான் அந்த இடம் கடந்ததும் மீண்டும் ஒளியூட்டினேன்.” என்றான் சர்வசாதாரணமாக. அதை கேட்ட பார்த்தீபன் “இவனை பற்றி செகராசசேகரர் கூறியது எத்தனை உண்மை! இவன் மிகுந்த திறமைசாலி தான்!” என்று தனக்குள்ளாகவே கூறியும் கொண்டான்.

நெடுநேர பயணத்தில் நன்கு கண்ணயர்ந்து விட்ட பார்த்தீபன் கண்விழித்து பார்க்கையில் இருவரும் வல்லிபுரத்தை அடைந்து விட்டிருந்தார்கள். அங்கிருந்து பௌத்த பிக்குவாக வேடமிட்ட ஆலிங்கனும் பார்த்தீபனும் சிரமபரிகாரங்களை முடித்துவிட்டு வல்லிபுரம் வெள்ளையங்கிரியை காண தம் பயணத்தையும் ஆரம்பித்திருந்தனர். அங்கு அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருப்பதை உணராமல்.

சிஙகை நகரத்து சிம்மாசனம் பதினான்காம் அத்தியாயம் தொடரும்..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments