சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 15

0
1377
PicsArt_10-06-08.33.41

எதிர்பாராத காட்சி

வல்லிபுரம் வெள்ளையங்கிரியின் இல்லத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதும், திடீரென எதையோ அவதானித்து விட்ட ஆலிங்கன், பார்த்தீபனை இடைமறித்து நிறுத்தியதல்லாமல், அருகிலிருந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக மேலேறி கூரையினூடாக எட்டிப்பார்த்ததுடன், சடசடவென கீழே இறங்கி பார்த்தீபனையும் இழுத்துக்கொண்டு ஒரு பழைய மண்டபத்தினுள் புகுந்து மறைந்தும் கொண்டானாதலாலும், ஆலிங்கனின் அந்த செயற்பாடுகளின் விளைவாக பார்த்தீபன் மிகுந்த பிரமிப்பையே அடைந்து விட்டிருந்தானாகையால், ஆலிங்கனை நோக்கி “அங்கே என்ன” என்று எதையோ கேட்க முற்பட்டு அரைகுறையாகவே விட்டுவிட்டிருந்தானென்றாலும், அவன் இன்னதை தான் கேட்கமுற்பட்டிருப்பான் என்பதை உள்ளக்குறிப்பால் உணர்ந்து கொண்ட ஆலிங்கன், அதற்கு மெல்ல பதிலளிக்கவும் ஆரம்பித்தானாகையால், ஆபத்துகளை தானாகவே தேடிச்சென்று எதிர்கொள்ளும் இயல்புடையவனும், எந்த சந்தர்ப்பத்திலும் அச்சம் என்கின்ற உணர்விற்கு தன் மனதில் அணுவளவேனும் இடங்கொடாதவனும், எப்பேர்ப்பட்ட எதிரிகள் வந்தாலும் எதிர்த்து நின்று போராடுபவனுமாகிய அந்த வீர வாலிபன் பார்தீபனுடைய மனதிலும் பேரிடியை பாய்ச்சியது போன்ற பிரேமையை ஏற்படுத்தி நின்றது ஆலிங்கன் உதிர்த்த அந்த சொற்கள். அவ்வாறு ஆலிங்கன் கூறிய அந்த விடயமானது பார்த்தீபனின் மனதில் பெரும் பிரளயம் ஒன்றையே உருவாக்கியதல்லாமல் மீண்டும் மீண்டும் அந்த விடயம் அவன் புத்தியில் உருவாகி அவனின் இளமையின் வேகத்தில் பெரும் கொந்தளிப்பையே உண்டாக்கியதாகையால் சற்று பலமாகவே இரைந்த பார்த்தீபன் “அத்தனை தைரியமா அவனுக்கு” என்று முழங்கவும் செய்தானென்றால் அதற்கு உரிய காரணம் இல்லாமலும் இருக்கவில்லை.

பார்த்தீபன் தொடுத்திருந்த அந்த அரைகுறை வினாவிற்கு பதிலளிக்க விளைந்த ஆலிங்கன்
“அங்கே யார் இருந்தார்கள் தெரியுமா?” என்று தன்பங்குக்கு ஒரு வினாவையும் தொடுத்துவைத்தான்.
“யார்” என்ற பார்த்தீபனின் குரலிலும் வியப்பே மிதமிஞ்சிக்கிடந்தது.
“ராஜசிங்க” என்றான் ஆலிங்கன் உறுதியான குரலில்
“எப்படி?” என்று அர்த்தமே ஆகாத ஒரு வினாவை குழப்பமிகுதியில் தொடுத்தான் பார்த்தீபன்.
“எப்படி என்பதெல்லாம் எனக்கு தெரியாதப்பா, நான் கண்டதை சொல்கிறேன் கேள்” என்ற ஆலிங்கன்,
“நான் வேப்பமரம் வழியாக ஏறி கூரையிலிருந்த இடைவெளியூடாக வீட்டின் உட்புறத்தை நோக்கினேன், அங்கே நான் சற்றும் எதிர்பாராத ஒரு காட்சியை கண்டேன்” என்று கூறி இவ்விடத்தில் சற்று நிறுத்தவும் செய்தானாகையால்,
“என்ன காட்சி?” என்றான் பார்த்தீபன் வியப்பு குரலிலும் தொனிக்க.
“அங்கே வீட்டின் நடுப்பகுதியில் ஓர் உயர்ந்த நாற்காலியில் ராஜசிங்க அமர்ந்திருந்தான், அதேவேளை அவரின் எதிரில் நாற்காலியில் நன்கு கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் வேல் முனையில் வெள்ளையங்கிரி அமர்ந்திருந்தார், நாற்காலியில் கட்டப்பட்டிருந்த வெள்ளையங்கிரி அவர்களை இரண்டு வீரர்கள் வேலுடன் குறிவைத்து நின்றார்கள், அதேவேளை இன்னும் இரு வீரர்கள் வாயிலில் வேலுடன் நின்றார்கள், அதைவிட வேறு சில வீரர்கள் வாள்களுடன் ஆங்காங்கே நின்றுகொண்டுமிருந்தார்கள்.” என்று கூறியும் முடித்தான் ஆலிங்கன். அவ்வாறு ஆலிங்கன் கூறிய அந்த விடயமே பார்த்தீபனின் மன அலைகளை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியதல்லாமல் அவனை சற்று இரைந்து “அத்தனை தைரியமா அவனுக்கு?” என்று முழங்கவும் செய்திருந்தது.

அவ்வாறு அவன் தன் பயங்கரமான குரலில் மேற்கண்டவாறாக முழங்கியதும் எதற்கும் எதிரொலிசெய்துவிடும் அந்த பாழும் மண்டபமும் மிகுந்த பயங்கரத்துடனே அந்த குரலை மீண்டும் மீண்டும் எதிரொலித்ததாகையால், அந்த எரிரொலியானது அங்கே நிலவிய அந்த நிலைமையை மேலும் பயங்கரமாகவே ஆக்கிக்கொண்டிருந்தது. இயல்பாகவே மிக இலகுவில் தன் நிதானத்தை இழந்துவிடுபவனும், எதையுமே யோசிக்காமல் முரட்டுத்தனமாக காரியங்களில் இறங்கி விடக் கூடியவனுமான பார்த்தீபன், தான் சந்திக்க வந்த வெள்ளையங்கிரி அவர்கள், அவரின் சொந்த வீட்டிற்குள்ளாகவே ராஜசிங்கவால் சிறைவைக்கப்பட்டிருப்பதையும், அடுத்து அவரை நாடி வரும் தங்களையும் கொன்றுவிட ராஜசிங்கவின் ஆட்கள் தயார் நிலையில் இருப்பதையும் அறிந்தவுடன் இத்தகைய மனநிலையை அடைந்ததில் எவ்வித வியப்பும் இல்லையென்றாலும், தொடர்ந்தும் பார்த்தீபன் ஆலிங்கனை நோக்கி,
“ஆனால் நீ எப்படி உள்ளே ஏதோ ஓர் அசம்பாவிதம் இருப்பதை உணர்ந்து கொண்டாய்?” என்றான் சந்தேகம் குரலிலும் தொனிக்க. அதற்கு உடனடியாக பதிலளிக்காத ஆலிங்கன் அருகிலிருந்த சிறுகற்பாறை மீது மெதுவாக அமர்ந்து பின் பார்த்தீபனின் கண்களில் தன் கண்களை ஒரு கணம் சங்கமிக்கவிட்டு
“பார்த்தீபா நீ அந்த இல்லத்தின் பாதுகாப்பு வேலியை அவதானித்தாயா? அதில் ஏதோ ஒரு சிறு சேதம் ஏற்பட்டிருந்ததல்லவா, நான் அதை நன்கு அவதானித்தேன். கண்டிப்பாக அது யாரோ பலர் பலவந்தமாய் இடித்து உள்ளே நுழைய முனைந்ததால் உண்டான சேதமாக தான் இருக்க வேண்டுமென என் மனம் ஊகித்துக்கொண்டதாகையால், மேலும் அவதானமாகவே நோக்கினேன் அப்பொழுது வாயிலருகில் ஏகப்பட்ட காலடித்தடங்களும் இருப்பதை கண்டேன், அதைவிட பல விதமான அரவங்கள் வீட்டினுள் இருந்தும் எழுந்தும் கொண்டிருந்தன, அதை வைத்து தான் சந்தேகப்பட்டேன், கூரை வழியாக பார்த்ததும் என் சந்தேகமும் சரியாகி விட்டது”
என்றான் ஆலிங்கன் சர்வசாதாரணமாக.

மேற்கூறிய பதிலைக்கேட்ட பார்த்தீபன் பெரும் பிரமிப்பையே அடைந்தானாகையால், அந்த இடத்தில் தன் மனதில் வெறுமனே சினத்திற்கு மட்டும் இடமளிக்காமல், தான் அங்கு சிறிதும் அவதானித்திராத அந்த வேலியில் இருந்த சிறு சேதத்தையும், காலடி தடங்களையும், வீட்டினுள்ளிருந்து வந்த அரவங்களையும் மிக உன்னிப்பாக அவதானித்துவிட்டிருந்த ஆலிங்கனின் திறமையை உள்ளூர மெச்சி பெரு வியப்புக்கும் இடங்கொடுத்திருந்தானென்றாலும் சினமே மிகுதியாக இருந்ததாகையால் வியப்பை சிறிதும் வெளிக்குக்காட்டாமல் முழுமையாக உள்ளேயே அடக்கிவிட்ட சினமானது தானே முழுமையாக அவனது முகத்தில் படர்ந்து வெளிப்பட்டு நின்றதன் பயனாக பார்த்தீபனின் முகமானது பயங்கர சிவப்பாக அடித்துவிட்டிருந்ததுடன் அவனின் விழிகளும் இரத்தசிவப்பு நிறத்திலேயே மின்னி, அந்த வதனத்திற்கு இனம்புரியாத பயங்கரதோற்றத்தையும் கொடுத்திருந்தன. அவ்வாறு அவனின் மனதில் எழுந்திருந்த பெரும் சீற்றத்தின் விளைவாய் மீண்டும் சற்று இரைந்தே பயங்கரமான குரலில் “அவனை என்ன செய்கிறேன் பார்!” என்று கர்ஜனை செய்தபடியே தான் கொண்டுவந்திருந்த மூட்டையிலிருந்து வாளை உறையுடன் வெளியில் எடுத்து அதிலிருந்து வாளை உருவிய பார்த்தீபனின் வீர வதனத்தில் அத்தனை பயங்கரத்திலும் நிலைகொண்டிருந்த அவனின் கொஞ்சநஞ்ச வாலிப அழகும் அச்சமயத்தில் முழுவதுமாய் மறைந்து மிகப்பயங்கரமான தோற்றத்திற்கே இடங்கொடுத்திருந்ததாகையால் பார்த்தீபனின் அந்த கொடூரமான தோற்றமானது ஆலிங்கனுக்கே மிகுந்த அச்சத்தை உண்டாக்கியதுடன் இதனால் எப்படியான அசம்பாவிதங்கள் நிகழ்ந்தேறப்போகின்றனவோ என்கின்ற எண்ணத்தையும் ஆலிங்கனின் மனதில் உண்டாக்கவே செய்திருந்தது.

பதினாறாவது அத்தியாயம் தொடரும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments