சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 17

0
1272
PicsArt_10-20-04.51.58

தூண்டில் புழு

சுண்ணாம்புக்கல்லினால் அமைக்கப்பெற்றிருந்த அந்த சிறு இல்லத்தின் மையப்பகுதியில் அமையப்பெற்றிருந்த உயர்ந்த ஆசனம் ஒன்றின் பேரில் தளபதி ராஜசிங்க மிக கம்பீரமாக அமர்ந்திருக்க, அவனுக்கு நேர் எதிரே இருந்த ஆசனமொன்றில் கைகால்கள் நன்கு பிணைக்கப்பட்ட நிலையிலும், இரண்டு வீரர்களின் கூர் வேல்கள் குறிவைத்து நிற்கவும், வயோதிபத்தின் விளைவாய் முழுமையாய் நரைத்துவிட்ட தலையும் நீண்ட தாடியும் குழிவிழுந்த கன்னங்களும், ஒளியிழந்த கண்களும் என்றவாறான தோற்றத்தை கொண்டிருந்த வெள்ளையங்கிரி அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டிருந்தார்.

அவ்வாறு அந்த வயோதிபர் வெள்ளையங்கிரி தன்னால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தும், அவருடைய கை கால்கள் நன்கு இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தும், இரண்டு ஈட்டிகள் அவரை பதம் பார்க்க காத்திருந்தும், அவரிற்கு முன்னே தளபதியாகிய தானே அமர்ந்திருந்தும் கூட அந்த முதிய மனிதரின் முகத்திரையில் அணுவளவேனும் அச்சம் பீடித்திராமையானது, அச்சமயத்தில் ராஜசிங்கவுக்கு மிகுந்த பிரமிப்பையே அளித்திருந்ததென்றாலும், அது குறித்து எவ்வித உணர்வையும் தன் வதனத்தில் படர அனுமதிக்காமல் பழைய கம்பீரமான பார்வையையே அந்த வயோதிகர் மீது செலுத்திய படி
“என்ன கிழவரே உம் ஆளை இன்னமும் வரக்காணோம்?”
என்று ஒரு வினாவையும் தொடுத்து விட்டு, அந்த இல்லமே அதிரும்படியாக பலமாக நகைக்கவும் செய்தான்.
“ஏனப்பா அவன் வந்தால் என்ன செய்வதாக உத்தேசம், அவனது வருகையில் நீ என்னை விட ஆர்வமாக இருக்கிறாய் போலல்லவா இருக்கிறது” என்றார் வெள்ளையங்கிரி வியப்பை குரலிலும் காட்டி.
“ஏன் இருக்காது, அவனை கொன்றால் தான் என் ஆத்திரம் அடங்கும், அந்த வாலிபன் சோதனை சாவடியில் என்னையே ஏமாற்றிவிட்டு தப்பி விட்டான், அவன் உம்மை தேடி வந்த ஒற்றன் என்பதை நான் முன்னமே அறிந்திருந்தால், அக்கணமே அவன் தலையை சீவி விட்டிருப்பேன்.” என்று கூறிய ராஜசிங்கவின் கண்கள் அனலையே கக்கிக்கொண்டிருந்தன,
“ஓஹோ உன்னையே ஏமாற்றிவிட்டானா? ஆனால் இது விடையில்லா நெருக்கடி தான்” என்றார் வெள்ளையங்கிரி இளநகையை உதடுகளில் தவளவிட்டவாறே.
“என்ன நெருக்கடி?” என்றான் ராஜசிங்க சந்தேகக்குரலில்.
“அவன் புத்திசாலியா? இல்லை நீ முட்டாளா? என்கின்ற நெருக்கடி தான்” என்றார் வெள்ளையங்கிரி விசமமாக.
“ஏய் கிழவா நிறுத்து உன் பரிகாச பேச்சை, சிங்கைமன்னர்களின் படை வீரர்களை சிறையில் தள்ளியபோதே உன்னையும் கொன்றிருக்க வேண்டும், எல்லாம் நான் செய்த தவறு தான்”
“ஏனப்பா சிங்கையின் படை வீரர்கள் சிறையில் இருக்கிறார்கள், உங்கள் அரசுக்கெதிராக கிளர்ந்த இளைஞர்களையும் சிறையில் தள்ளிவிட்டீர்கள், இந்நிலையில் இந்த கிழவரை கண்டு நீ அஞ்சுவது விநோதமாக இருக்கிறது”
“நான் எப்பொழுது அஞ்சினேன்?” என்றான் ராஜசிங்க கடுமையான குரலில்.
“பின் இந்த கிழவன் உன்னை என்ன செய்து விடுவேன் என்று என்னை கயிற்றால் பிணைத்து, வேலால் குறிவைத்து இத்தனை பாதுகாப்புடன் வைத்திருக்கிறாய்” என்றார் வெள்ளையங்கிரி இகழ்ச்சி ததும்பிய குரலில்.
“உன்னை நினைத்தும் பயமில்லை, உன்னை தேடி வருபவனை நினைத்தும் பயமில்லை, உன்னை தேடி வரப்போகும் அந்த மீன் வந்ததும், உன்னை தூண்டில் புழுவாய் கொண்டு அந்த மீனை பிடித்து விடுவேன், அவன் மூலமாக போர் வியூகங்களையும் அறிந்துவிடுவேன், அதன் பின் படையெடுத்து வரும் அந்த பரராசசேகரனையும் முறியடித்துவிடுவேன், ஆனால் இவற்றை பார்க்க உனக்கும் அவனுக்கும் தான் அதிர்ஷ்டமில்லை, இன்றே கூட நீங்கள் எமனை காணலாம்”

“ஏனப்பா உங்களை பற்றி எனக்கு தெரியாதா? பதினேழு ஆண்டுகள் முன் கோட்டை பராக்கிரமபாகுவின் கட்டளையின் பேரில் செண்பகப்பெருமாள் படையெடுத்து வந்தான், அடங்காப்பதி வன்னியர்களை உங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததும், கிழக்கு பகுதியிலிருந்த சில ராஜவிசுவாசிகளை சிறைப்பிடித்து கொடுமைப்படுத்தி எம் படை விபரங்களை அறிந்து, பலவீனத்தை தாக்கினீர்கள், கனகசூரியசிங்கையாரிய சக்கரவர்த்தியை கொன்று ராஜ்ஜியத்தையும் கைப்பற்றினீர்கள். வெட்கம் நீங்கள் இன்று வரை அந்த முறையை மாற்றவேயில்லையா? ஒரே வியூகத்தை எத்தனை ஆண்டுகள் தான் கடைப்பிடிப்பீர்கள்?” என்று சற்று விசமமான குரலிலேயே வினவிய வெள்ளையங்கிரி தன் பொக்கை வாயை திறந்து சற்று இரைந்தே நகைத்தமையானது ராஜசிங்கவுக்கு கடும் சினத்தை உண்டாக்கவே
“ஏ கிழவா! யார் முன் பேசுகிறாய் என்று தெரிகிறதா”
என்றான் கடுமையான குரலில்.
“ஏனப்பா இந்த கிழவனுக்கு கண்களும் புண்களாகி விட்டதென்றே எண்ணி விட்டாயா?, எங்கள் தமிழில் அரும்பெரும் சொத்தாய் ஒரு நூல் இருக்கிறது, மூவடியில் உலகளந்த பெருமானுக்கே சவால் விடும் வகையில் ஈரடியில் உலகளந்த நூல் அது, அதன் பெயர் திருக்குறள்”
“அதற்கு” என்றான் ராஜசிங்க வியப்பு குரலிலும் தொனிக்க
“அதிலே ஓர் அருமையான குறளும் உள்ளது”
“என்ன குறள்”
“கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்து இரண்டு
புண்ணுடையவர் கல்லாதவர்.
அப்படியென்றால் கல்வி கற்றவர்கள் முகத்தில் இருப்பது மட்டுமே கண்ணாம், கல்லாதவர் முகத்தில் இருப்பது இரண்டு புண்ணாம், அந்த வகையில் என்முகத்தில் இருப்பது கண் தான்”
“இதை எதற்கு இப்பொழுது கூறுகிறாய்?” என்றான் ராஜசிங்க சினம் குரலிலும் தொனிக்க.
“இல்லையப்பா எப்படியும் என் ஆள் வரும் வரை நீ இப்படியே சும்மா இருக்க முடியாதல்லவா? உனக்கும் பொழுது போக வேண்டும் இல்லையா அதற்கு தான்” என்று கூறிய வெள்ளையங்கிரி சற்று இரைந்தே நகைத்தார்.

“ஏய் கிழவா, அவன் மீது அத்தனை நம்பிக்கையா உனக்கு, சிறிதும் பயமில்லாமல் என்னையே பரிகசிக்கிறாய்”
“இந்த கட்டை இன்றோ நாளையோ வேக வேண்டிய ஒன்று தான், அது குறித்து நான் ஏன் அஞ்ச வேண்டும்.” என்றார் வெள்ளையங்கிரி சர்வசாதாரணமாக.
“அப்படியா? இரு உன் ஆள் வந்ததும் இருவரையும் கூண்டோடு மேலுலகம் அனுப்பி விடுகிறேன்” என்றான் ராஜசிங்க பயங்கரமான குரலில்
“அதற்கு வாய்ப்பேயில்லை தளபதியாரே” என்று அந்த இல்லத்தின் இன்னொரு மூலையில் இருந்து ஒலித்த அந்த கடுமையான குரலானது ராஜசிங்கவிற்கும் மற்றைய படைவீரர்களும் மிகுந்த வியப்பையே அளித்ததாகையால் குரல் வந்த திசையை நோக்கி சடுதியாகத்திரும்பிய அவர்கள் பிரமிப்பின் உச்சத்தையே அடைந்திருந்தார்கள்.

அங்கே தூண்மறைவில் இருந்து ஓர் உருவம் மிக அமைதியாக வெளியில் வந்தது மட்டுமல்லாமல், தன் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டியபடி சர்வசாதாரணமாகவே தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்ததுடன் அந்த உருவம் முகத்தை கறுப்பு நிறத்துணியால் நன்கு மறைத்து போர்த்தியிருந்ததென்றாலும் அந்த துணியின் இடையில் வெளித்தெரிந்த அந்த இரண்டு சிறிய கண்களும் மிகப்பிரகாசமாகவே ஒளிவீசிக்கொண்டிருந்தமையானது அவர்களுக்கு மேலும் வியப்பையே அளித்துக்கொண்டிருந்தது.

பதினெட்டாவது அத்தியாயம் தொடரும்..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments