சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 19

0
1319
PicsArt_11-25-10.39.35

விபரீத பணி

ராஜசிங்கவிடம் அகப்பட்டு தன் சொந்த வீட்டிற்குள்ளாகவே பணையக்கைதி போல் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளையங்கிரியை பார்த்தீபனும் ஆலிங்கனும் மீட்டு அந்த பாழும் மண்டபத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும், கண்விழித்ததும் சற்றே தடுமாறிய வெள்ளையங்கிரி, தன்னை காப்பாற்றி வந்த அந்த இருவரையும் யாரென்று அறியாமல் சற்று தளம்பினாரென்றாலும், பின் ஆலிங்கனை இனங்கண்டு கொண்டதும் பழைய தெளிவான நிலையை அடைந்து விட்டிருந்தாராகையாலும், தன்னை தேடி ஓலை கொண்டு வந்த அந்த வாலிப வீரன் தான் பார்த்தீபன் என்பதை அறிந்துவிட்டதாலும், மெல்ல பார்த்தீபனை நோக்கி “நீ இதை விட கடினமான பணி ஒன்றை நிறைவேற்றியாக வேண்டும்” என்று உறுதியான குரலிலேயே கூறவும் செய்தார். அவ்வாறு அவர் கூறியதும், அவரின் கண்களையே உற்று நோக்கிய பார்த்தீபன் சந்தேகம் கலந்த குரலிலேயே “என்ன பணி?” என்று வினவவும் செய்தானாகையால், தான் சாய்ந்து அமர்ந்திருந்த அந்த பெரும் தூணிலிருந்து சற்றே சிரமப்பட்டு எழுந்து நின்ற அந்த முதியவர் “ஏனப்பா அந்த ஓலையை சற்று இங்கே கொடு” என்று கூறி தன் கையை பார்த்தீபனை நோக்கி நீட்டவும் செய்தார். அவ்வாறு வெள்ளையங்கிரி பார்த்தீபனிடம் ஓலையை கேட்டதும், தன் இடையில் மிக பக்குவமாக வைத்திருந்த அந்த ஓலையை எடுத்த பார்த்தீபன் அதை அந்த முதியவரை நோக்கி நீட்டவும் செய்தான். 

அந்த ஓலையை வாங்கிய வெள்ளையங்கிரி அதை பிரித்து அதில் எழுதப்பட்டிருந்த அந்த விடயத்தை சற்றே சப்தமாக படிக்கவும் செய்தார். 

“இச்சிங்கை நகரானது இயற்கையாகவே முப்புறமும் பெருங்கடலை அரணாக கொண்டிருப்பதால், இச்சிங்கை நகரை கைப்பற்றுவதற்காக வெளியிலிருந்து படையெடுப்பு நிகழ்த்தவேண்டும் என்கின்ற போது, வெளியிலிருந்து மட்டுமே தாக்குதலை நிகழ்த்துவது என்பது அத்தனை பொருத்தமானதல்ல. உள்ளேயிருந்தும் சுதேச படைகள் ஒரு திசையில் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும், இது தொடர்பான உதவியை தங்களிடம் இயலவே கேட்டிருந்தோம். அதற்கு தகுதியான விவேகம் மிக்க வீரன் ஒருவனை அனுப்பி வைக்குமாறு தாங்கள் பதிலனுப்பியிருந்தீர்கள். இந்த ஓலையை கொண்டு வரும் வீரனை தாங்கள் முழுமையாக நம்பலாம். அவனின் வீரத்தையும் விவேகத்தையும் நான் நன்கு அறிவேன். ஆகவே தாங்களும் முழுமையாக நம்பலாம்.” 

மேற்படி விடயத்தை மிகத்தெளிவாகவும் சப்தமாகவுமே படித்த வெள்ளையங்கிரி, அந்த ஓலையை தன்னுடைய இடையில் சொருகி வைத்துவிட்டு, 

“பார்த்தீபா” என்று ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவர் போலவே அழைத்தது மட்டுமல்லாமல் கனவுலகில் இருப்பவர் போலவே மெல்ல 

“சிங்கை மன்னர்களின் வேளகார படை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று அதே தொனியில் ஒரு வினாவை தொடுக்கவும் செய்தார்.

“ஆம்” என்று பார்த்தீபன் எதையோ பேச ஆரம்பிக்கும் முன்பாகவே அதற்கான பதிலையும் தானே கூறவும் ஆரம்பித்தார் வெள்ளையங்கிரி.

“சோழ சாம்ராஜ்ஜியத்தில் இருந்தது போலவே சிங்கைராசதானியிலும் வேளக்காரப் படைகள் இருந்தன. மற்றைய படைவீரர்களை காட்டிலும் இவர்கள் மிகவும் சிறப்பானவர்கள், ஏனென்றால் இவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் மன்னரின் உயிரை தம் உயிரை கொடுத்தேனும் காப்பாற்றுவதாக சத்தியம் செய்தவர்கள். எந்த போரிலாவது தம் மன்னர் உயிர் விட நேர்ந்தால் இவர்களும் தம்முடைய உயிரையும் மாய்த்து தம் விசுவாசத்தை வெளிப்படுத்த வல்லவர்கள். கனக சூரிய சிங்கையாரியச்சக்கரவர்த்தி காலத்தில் செண்பகப்பெருமாள் இங்கு படையெடுத்து வந்து பெரும் நாசங்களை செய்தான். கோவில்களை இடித்தான், பல உயிர்களை காவு கொண்டான். இறுதியில் சிங்கை நகரை கைப்பற்றியும் கொண்டான். மன்னர் கனகசூரிய..” என்று மிக கம்பீரமாகவே கூறிக்கொண்டிருந்த வெள்ளையங்கிரி இடைநடுவிலேயே வயோதிபத்தின் தளர்ச்சியில் தொண்டை வரண்டு பலமாக இருமவும் செய்தாராகையால், அவரின் தோள்களை தாங்கிப்பிடித்த பார்த்தீபன் அவரை அமைதியாக அமரவைக்கவும், மண்குடுவையில் நீரை எடுத்துக்கொண்டு ஓடி வந்த ஆலிங்கன் அவரின் வாயில் அந்த குடுவையில் இருந்த நீரை மெல்ல புகட்டவும் செய்தான்.

ஆலிங்கன் கொடுத்த அந்த நீரைப்பருகி தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்ட வெள்ளையங்கிரியை நோக்கி தன் கூரிய பார்வையை செலுத்திய பார்த்தீபன் “இப்பொழுது நான் செய்ய வேண்டிய காரியம் என்ன?” என்றான் மிக உறுதியான குரலில். மிகப்பலமாக மூச்சை இழுத்து விட்டு தன்னை இயல்பான நிலைக்கு கொண்டு வந்த வெள்ளையங்கிரி, தலையை மெல்ல இருமுறை மேலும் கீழும் அசைத்தார். பின் பார்த்தீபனின் கண்களை மிக உறுதியாகவே நோக்கியபடி

“அவ்வாறான அனுபவமிக்க சிறந்த வேளக்காரப் படை வீரர்களும், உணர்வு மிக்க சில சுதேச கிளர்ச்சியாளர்களும் ராஜசிங்கவால் சிறைச்சாலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.” என்றார் சினம் குரலிலும் தொனிக்க.

“அப்படியா?”

“ஆம், அந்த வேளக்கார படை வீரர்களை சிறையில் இருந்து தப்பவைத்து வெளியே கொண்டு வரவேண்டும். அதுவே நீ நிறைவேற்ற வேண்டிய பணி” என்றார் வெள்ளையங்கிரி மிக அமைதியாக.

அவ்வாறு வெள்ளையங்கிரி, பார்த்தீபன் செய்ய வேண்டிய அந்த பணியை மேற்கண்டவாறு விபரித்ததும், பிரமிப்பின் உச்சத்தையே தொட்டுவிட்ட பார்த்தீபனின் மனதிலும் இந்த பணி அத்தனை எளிதானதல்ல என்ற எண்ணமே வேரூன்றவும் செய்ததாகையால், அதை வெளிப்படையாகவே “இது அத்தனை எளிதான காரியமாய் எனக்கு தோன்றவில்லை” என்று கூறிய பார்த்தீபனின் கண்களும், அவன் ஏதோ பலமான சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை தெளிவுபடுத்தவே செய்தன.

“ஆம் பார்த்தீபா, எனக்கும் இந்த காரியம் அத்தனை எளிதாக தோன்றவில்லை. சிறைச்சாலையில் புகை போடவும் முடியாது.” என்றான் ஆலிங்கன் மிக அமைதியாக.

பார்த்தீபனையும் ஆலிங்கனையும் நோக்கி தெளிவான பார்வையை வீசிய வெள்ளையங்கிரி

“ஆனால் உங்களால் இந்த காரியத்தை முடிக்கமுடியும் என்றே எனக்கு தோன்றுகிறது” என்றார் நம்பிக்கையான குரலில்.

“ஒரு வேளை மேற்கண்ட காரியத்தை முடிக்க முடியாவிட்டால்” என்றான் பார்த்தீபன் சந்தேகம் கலந்த குரலில்.

“வெற்றி அத்தனை எளிதல்ல, உள்ளே இருப்பவர்கள் மன்னரின் வேளகார படைவீரர்கள். அதை விட அவர்களின் கீழ் செயற்பட பல ஆபத்துதவி வீரர்கள் தயாராக இருக்கிறார்கள், ஆனால் தம் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதும் அவர்கள் அனைவரும் காடுகளுக்குள் சென்று மறைந்து விட்டார்கள். சிறையில் இருக்கும் அந்த வீரர்கள் வெளியில் வந்தால், மறைந்து வாழும் ஏனைய வேளக்கார படைவீரர்களும் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள், நம்முடைய படைபலமும் அதிகமாகும்.” என்றார் வெள்ளையங்கிரி உறுதியான குரலில்.

“எத்தனை பேர் அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்?”

“ஏழு பேர்”

அதை கேட்டதும் மெல்ல தலையை அசைத்த பார்த்தீபனின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் மெல்ல படரவே ஆரம்பித்தன.

“ஐயா அத்துடன் உள்ளூரில் நமக்கு ஆதரவளிக்கக்கூடிய இளைஞர்களையும் இனங்காணுங்கள். அவர்களை பயிற்றுவித்து திறமையான வீரர்களாக உண்டாக்குங்கள், யுத்தமென்று வந்து விட்டால் பயிற்சி மிக்க வீரர்களே அவசியம். வெளியிலிருக்கும் வீரர்களை சிறந்த வீரர்களாக உருவாக்குவோம் அதே நேரம் சிறையிலிருக்கும் வீரர்களையும் தப்புவிக்க முயல்வோம். ஒரு வேளை சூழ்நிலை நமக்கு கைகொடுக்காவிட்டால், வெளியிலுள்ள இளைஞர்களை பயிற்சிபெற்ற வீரர்களாக உருவாக்குவது நமக்கு ஒரு மாற்று ஏற்படாக அமையும்.” என்றான் பார்த்தீபன் உறுதியாக.

“ஆம்” என்பது போல் மெல்ல தலையசைத்த வெள்ளையங்கிரி, “அந்த காரியம் இயலவே செய்யப்பட்டாகி விட்டது. பல இளைஞர்களுக்கு இரகசியமாக வனாந்தரங்கயில் வைத்து உரிய போர்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் தயாராகவே உள்ளனர்” என்றார்.

“உம் நல்லது. அப்படியே வாள், வேல், கட்டாரி, கோடரி முதலான ஆயுதங்களை மிகையாகவே தயாரிக்க சொல்லுங்கள் போர் என்று வந்துவிட்டால் ஆயுத பஞ்சம் மட்டும் எப்பொழுதும் வந்துவிடக்கூடாது” என்றான் பார்த்தீபன்

“அதை நான் கவனித்துக்கொள்கிறேன்” என்றார் வெள்ளையங்கிரி மிக அமைதியான ஆனால் உறுதியான குரலில்.

“பார்த்தீபா, இந்த விபரீத பணியை ஆற்றுவதற்கு நீ தயாரா?” என்றான் ஆலிங்கன் கண்களில் சுறுசுறுப்பை காட்டி.

“நான் இது போன்ற சாகச காரியங்களுக்கு எப்பொழுதுமே தயார் தான் ஆலிங்கா, முடிந்தவரை வெல்வதற்கே முயற்சிப்போம்.” என்றான் பார்த்தீபன் மிகுந்த உற்சாகத்துடன்.

“கண்டிப்பாக வெற்றியடைவீர்கள் என்று எனக்கு தெரியும் வீரர்களே!” என்று கூறிய வெள்ளையங்கிரியின் கண்களில் மட்டுமல்லாமல், அவரின் வயோதிபத்தால் தளர்ந்து போய்விட்ட அந்த குரலிலும் கூட அமிதமான நம்பிக்கை தெளிவாக வெளிப்பட்டே நின்றது.

இருபதாவது அத்தியாயம் தொடரும்..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments