சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 20

1
1091

கானகத்துக்கோட்டை

சிங்கைநகரின் தென்திசை எங்கும் பரந்து விரிந்து கிடந்த பெரும் நிலப்பரப்பும்இ எவருக்குமே அடங்கிடாத மக்கள் கூட்டத்தை தன்னகத்தே கொண்டதுமாக இருந்ததன் பயனாக அடங்காப்பதி என்றே பெயர் பெற்றதும்இ வன்னிமைகள் எனப்படும் குறுநில மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களாகையால் வன்னி என்றே அழைக்கப்பட்டதுமான அந்த பெரு நிலப்பரப்பின்இ தென்திசை எங்கும் இயற்கையாகவே அரண் அமைந்துவிட்ட அடர்கானகத்தில்இ முன்னிரவு கடந்துவிட்ட அந்தப்பொழுதில் இராக்கால பறவைகளின் பயங்கரமான சப்தங்களும் அவற்றின் இறக்கைகளின் படபடப்பும் உண்டாக்கிய பெரும் சலசலப்புகளும் காற்றின் விளைவாக மரங்கள் உண்டாக்கிய சலசலப்பும் இணைந்து அந்த இரவின் கொடிய பயங்கரத்தை இன்னமும் பயங்கரமாகவே அடித்துக்கொண்டிருக்கையில்இ அந்த அடர்ந்த கானகத்தின் ஒற்றையடிப்பாதை போல் தோன்றிய பாதை ஊடாக ஊடறுத்து ஒரு புரவி மெதுநடைபுரிந்து வந்து கொண்டிருந்தது. அந்த புரவியின் பேரில் ஆரோகணித்திருந்த அந்த மனிதர் தன் வலது கரத்தில் ஒரு தீவர்த்தியை வைத்துக்கொண்டும்இ இடது கரத்தால் தன் குதிரையின் கடிவாளத்தை பிடித்துக்கொண்டும் அமர்ந்திருந்தார். அந்த தீவர்த்தியின் வெளிச்சத்தில் அவரின் முகத்தில் தென்பட்ட சிந்தனை ரேகைகள் அவர் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதையே உணர்த்தினாலும்இ இடையிடையே அவரின் கண்கள் இருபுறமும் துளாவிய விதமானது அவர் அந்த இடத்தில் வேறு யாரையோ எதிர்பார்த்தே வந்திருப்பதை குறித்துக்காட்டிக்கொண்டிருந்தது.

சில காத தூரங்கள் வரை அவ்வாறு மெதுவாகவே குதிரையை செலுத்தியபடியே வந்து கொண்டிருந்த அந்த மனிதன்இ குறித்த ஓரிடம் வந்ததும் தன் புரவியை அங்கிருந்த ஒரு உயர்ந்த வன்னிமரத்தின் அடியில் நிறுத்திவிட்டு மெதுவாக குதித்து கீழே இறங்கிஇ அருகிலிருந்த உன்மத்த வயிரவர் ஆலயத்தின் அருகாமையில் இருந்த பெரிய பாறையின் பேரில் சென்று அமர்ந்தும் கொண்டதன்றி தன் கையிலிருந்த தீவர்த்தியை சரித்து அணைத்துவிட்டு இடையிடேயே வானத்தை அண்ணாந்து நோக்கி ஏதேதோ கணக்குகளைப்போட்டபடியே அமர்ந்திருந்தார்.

சிறிது நேரம் அவ்வாறு அந்த மனிதர் மிக அமைதியாக அமர்ந்திருக்கவும்இ திடீரென சற்று தொலைவினிலிருந்த பற்றைகளில் பெரும் சலசலப்பு வெளிப்படவே அந்த மனிதர் பாறையிலிருந்து சரேலென எழுந்தார். சற்று நேரத்திற்கெல்லாம் அந்த பற்றையை விலக்கிக்கொண்டு குள்ளமான உருவமுடைய இரண்டு தடியர்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் கைகளில் இருந்த தீவர்த்திகள் உண்டாக்கிய ஒளியானது அந்த இருவரின் முகத்திலும் படும் போது அந்த முகங்கள் பார்ப்பதற்கே பயங்கரமான ராட்சத தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. தடிப்பான கரிய மீசைகளும் சிவந்த பெரிய கண்களும் அவர்கள் இருவரும் யாரோ எமகிங்காரர்கள் என்றே எண்ணவைத்துக்கொண்டிருந்தது. அவ்வாறு பற்றையிலிருந்து வெளியில் வந்தவர்கள் நேராக அந்த மனிதனை நோக்கி வந்ததன்றிஇ இருவரும் தம் இடது கரங்களின் ஆட்காட்டி விரல்களை சற்று வளைத்து நீட்டி குறுக்கே பிடித்து இரண்டு வாள்கள் ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்திருப்பது போல் சமிக்ஞை செய்யவும்இ அந்த மனிதரும் தன் வலது கரத்தின் நடு இரண்டு விரல்களையும் மடக்கி பெருவிரலை தொட்டபடியும் ஆட்காட்டிவிரலும் சிறுவிரலும் மேலே கொம்புகள் போல் நீட்டி நிற்கவும் வைத்துஇ நந்தியின் உருவம் போன்றே சமிக்ஞை காட்டவும். உடனே தலையை குனிந்து வணங்குவது போல் சைகை செய்த அந்த இரு குள்ளர்களும் அந்த மனிதனை தம்மை தொடர்ந்து வரச்சொல்வது போல் கை அசைத்து சைகை செய்து விட்டு முன்னே வேகமாக நடக்கவும் ஆரம்பித்தார்களாகையால் அந்த மனிதனும் தன் குதிரையை அங்கேயே கட்டிப்போட்டுவிட்டு அவர்களை தொடர்ந்து தானும் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

பகலிலேயே அவ்வளவாக வெளிச்சம் புகமுடியாத அந்த அடர்ந்த வனத்தினுள் அந்த இராப்பொழுதில் நிலவும் நட்சத்திரங்களும் அளித்த ஒளியானது சிறிதும் உள்நுழைய முடியவில்லை ஆகையால்இ அந்த இரண்டு குள்ளர்களின் கைகளில் இருந்த தீவர்த்தியின் ஒளியை விட வேறு எந்த ஒளியும் அந்த மனிதனின் கண்களுக்கு புலப்படவே இல்லை என்பதனால் அந்த மனிதன்இ தீவர்த்திகள் உண்டாக்கிய அந்த ஒளியின் மீதே தன் முழு கவனத்தையும் செலுத்தியபடியே அவர்களை தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டே நடந்து கொண்டிருந்தான். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் பொழுது இடைவழியில் எவ்விதமான தடைகளும் கால்களில் தட்டுப்படவில்லை ஆகையால் அந்த மனிதன் தன் மனதிற்குள் ‘இந்த பாதை இயலவே அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு பாதையாக தான் இருக்க வேண்டும்’ என்று எண்ணியும் கொண்டான்.

சிறிது தூர நடைப்பயணத்திற்கு பிறகு மூவரும் அந்த அடர்ந்த காடுகளை தாண்டி சற்றே வெளியான பகுதியை அடைந்துவிட்டிருந்தார்கள். ஓரிடத்தில் திடீரென அசைவின்றி நின்ற அந்த இரு குள்ளர்களும் தம்மை தொடர்ந்து வந்த அந்த மனிதனை திரும்பி நோக்கி இடது பக்கமாக தம் கைகளை நீட்டி சுட்டிக்காட்டி ‘அதோ அங்கே தெரிகிறது பாருங்கள் அந்த அடர்ந்த தோப்புகளினூடாக சென்று மறுபக்கத்தை அடைந்ததும். எங்களின் ஆள் ஒருவன் இருப்பான் அவனிடமும் இதே சங்கேதக்குறியை பயன்படுத்துங்கள்’ என்று கூறிவிட்டுஇ ஒரு குள்ளன் தன் கையிலிருந்த தீவர்த்தியை அந்த மனிதனிடம் கொடுத்தான்இ பின் இரு குள்ளர்களும் வலது பக்கமாக திரும்பி விறுவிறு என நடக்கவும் ஆரம்பித்தார்கள். அந்த வெளியான பகுதியில் நிலவொளியும் நட்சத்திர ஒளியும் தெளிவாகவே விழுந்ததாகையால் அந்த இரு குள்ள உருவங்களும் கண்ணிலிருந்து மறையும் வரை அவர்களையே நோக்கிக்கொண்டிருந்த அந்த மனிதர்இ அவர்கள் இருவரும் சென்றதும் இடது புறமாக இருந்த தோப்புகளினூடாக புகுந்து விரைவாக நடந்து தோப்பின் மறுபுறத்தையும் அடைந்தார். அங்கிருந்த ஒரு சிறு மண்டபத்தின் வாயிலில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டும் கையில் தீவர்த்தியுடனும் அமர்ந்திருந்த ஒரு வீரன் திடீரென எழுந்து அவரை நோக்கி வந்து தன் இரண்டு ஆட்காட்டி விரல்களையும் குறுக்கே வைத்து அதே சைகையை செய்யவும்இ அந்த மனிதரும் தன் விரல்களை மடக்கி தன்னுடைய சைகையையும் செய்தாராகையால். தலை குனிந்து வணக்கம் தெரிவித்த அந்த வீரன்இ தன்னை பின்தொடர்ந்து வருமாறு அந்த மனிதருக்கு சைகை செய்துவிட்டு விரைவாக நடக்கவும்இ அவனை தொடர்ந்து அந்த மனிதரும் நடந்தார்.

சிறிது தூரம் சென்றதும் இருவரும் மீண்டும் அடர்ந்த காடுகளினூடாக புகுந்து சென்று கொண்டிருக்கையில் அந்த அடர்ந்த காட்டின் நடுப்பகுதியில் தோன்றிய பெரும் ஒளியானது அந்த மனிதரின் கவனத்தை ஈர்க்கவேஇ அந்த ஒளி வந்த திசையை மேலும் அவதானமாக கூர்ந்து நோக்கவும் செய்தார். முன்னால் வழிகாட்டியாக சென்ற அந்த வீரனும் அந்த ஒளி உண்டான இடத்தை நோக்கியே விரைந்து சென்று கொண்டிருந்தானாகையால்இ அந்த ஒளியிற்கு மிக அருகில் நெருங்கி சென்றதும்இ அந்த வீரனை தொடர்ந்து சென்று கொண்டிருந்த அந்த மனிதரின் கண்களிற்கு அந்த ஒளி எங்கிருந்து பிறக்கின்றது என்பதற்கான பதில் தெளிவாக தோன்றவே செய்தது.

காட்டின் மையப்பகுதியில் பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த சிறு கட்டடமொன்றின் சுவரில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த தீவர்த்திகளே அந்த ஒளிக்கு காரணம் என்பதை அந்த மனிதர் உணர்ந்தாரானாலும் அந்த கட்டடத்தின் சுவர்கள் மிகப்பலமானதாகவும் சற்று சாய்வானதாகவும் மிக உயரமானதாகவும் அமைக்கப்பட்டிருந்ததை கொண்டு ‘தேவைப்பட்டால் இந்த கட்டடம் ஒரு சிறு கோட்டையாகவும் பயன்படுத்தத்தக்கது தான்’ என்றும் அந்த மனிதர் தன் மனதினுள் எண்ணியும் கொண்டார். அந்தக்கட்டட வாயிலை அவர்கள் இருவரும் அடைந்ததும் அந்த வீரன் தன் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து அங்கிருந்த காவலர்களிடம் காட்டவும்இ அதை பார்த்துவிட்டு அவர்கள் அந்த கதவை இழுத்து திறக்கவும் செய்தார்கள். அந்த வீரனைத்தொடர்ந்து உள்ளே நுழைந்த அந்த மனிதரைஇ உள்ளே இருந்த பெரும் மண்டபத்தின் உயர்ந்த பீடமொன்றில் அமரச்செய்த அந்த வீரன். அந்த மனிதரின் காதருகில் குனிந்து ‘சொற்ப நேரத்தில் அனைவரும் வந்துவிடுவார்கள்’ என்றான் மிக மெல்லிய பணிவான குரலில்.
அதற்கு ஆம் என்பது போல் மெல்ல தலையசைத்தார் அந்த மனிதர்.

இருபத்தியோராவது அத்தியாயம் தொடரும்..

4 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Karthick
Karthick
5 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

நல்ல முயற்சி. சிறப்பாக எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள். 20ஆவது அத்தியாயத்திற்காக நீண்ட நாட்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.