பார்த்தீபன் கணிப்பு
வானவீதியில் பாலென காய்ந்து, தன் வெண்மையான தண்ணொளி பிரவாகத்தை வான வீதி எங்கும் பாய்ந்தோட செய்தவண்ணம் பூரண சந்திரனானவன் மிளிர்ந்து கொண்டிருந்தானானாலும், விதானம் போல் விரிந்து கூடாரமென வளர்ந்து நின்ற பெரும் விருட்சங்களை ஊடறுத்து அவனால் முழுமையாக தன் ஒளியை பாய்ச்ச இயலவில்லையாகையால், மிக மங்கலான ஒளியையே அவ்விருவர் மீதும் பாய்ச்சியிருந்தானானாலும், அவ்வாறான மங்கலான வெளிச்சத்திலும் பிரகாசமாய் மின்னிக்கொண்டிருந்த கூரிய விழிகளையுடையவனான அந்த வாலிபன், மரத்தின் மீது சாய்ந்து தங்கபதுமை போல் நின்று கொண்டிருந்த தேன்மொழியை நோக்கி மெல்ல நெருங்கி வந்து, தன்னுடைய இடையில் இருந்த அந்த பொருளை எடுத்துக்காட்டி, “இது எனக்கு உதவும்” என்று கூறியதால், அவள் அமிதமான அதிர்ச்சியில் உறைந்து கல்லென சமைந்து அசைவற்று நின்றாளானாலும், திடீரென பார்த்தீபனின் புரவி கனைத்ததால் அவளை பீடித்திருந்த திக்பிரமை கலைந்துவிடவே “இது எப்படி” என்று ஏதோ கேட்க ஆரம்பித்து, அதற்கு மேல் பேசுவதற்கு நாவெழாமல் நின்றாளாகையால் பார்த்தீபனே மெல்ல பதிலளிக்கவும் ஆரம்பித்தான்.
“தற்சமயம் என் கையில் இருக்கும் இந்த பொருளின் பெறுமதி யாதென என்னை விட தங்களுக்கு நன்கு தெரியும்! இந்த முத்திரை மோதிரமானது இந்நாளில் சிங்கை நகர அரசின் மீது அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் தென்பகுதி கோட்டை ராஜவம்சத்தவரின் முத்திரை பொறித்த மோதிரமாகையால், இந்த மோதிரத்தை சில முக்கிய பிரமுகர்கள் மட்டுமே தங்கள் பால் வைத்திருப்பார்கள். அதை விட முக்கிய ராஜாங்க பணி நிமித்தமாக செல்லும் வேவுக்காரர்களுக்கும், தூதர்களுக்கும், அலுவலர்களுக்கும் வேலையை துரிதமாக்கவும், இடை வழியில் காவலர்களால் தடைகள் ஏற்படாமல் தடுக்கவும் இந்த முத்திரை மோதிரமானது அவர்கள் பால் கொடுத்தனுப்பப்படுவதுமுண்டு. அவ்வாறு இந்த மோதிரத்துடன் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தவோ, விசாரணை செய்யவோ எந்த காவலாளிகளுக்கும் எவ்வித அதிகாரமும் கிடையாது. அதை விட தற்சமயம் இராஜ்ஜியம் இருக்கும் குழப்பமான நிலையில் ராஜாங்க அலுவல்கள் நிமித்தமாக செல்லும் அதிகாரிகளின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்குமாதலால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நான் காவலர்களிடமோ சோதனை சாவடிகளிலோ சிக்கிவிடாமல் இந்த மோதிரத்தை பயன்படுத்தி மிக இலகுவாக செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய இயலும்” என்று இயல்பான குரலில் திட்டமாக கூறி முடித்தான் பார்த்தீபன்.
“ஆம்,” என்று சற்று உறுதியாகவே பதிலளித்த தேன்மொழி, “ஆனால் இது எப்படி தங்களிடம் வந்தது?” என்று சற்று சந்தேகத்துடனேயே வினவவும் செய்தாள்.
அந்த வினாவிற்கு உடனடியாக பதில் அளிக்காத பார்த்தீபன், இரண்டு அடி முன்னே நகர்ந்து, அங்கு நின்ற மரம் ஒன்றின் மீது தன் கைகளை ஊன்றியபடியே, தேன்மொழியின் மீது தன் கூரிய பார்வையை செலுத்தி பின் மெல்லிய குரலில்,
“சற்று முன்னதாக இவ்வழியே நான் புரவியின் பேரில் அமர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தேனல்லவா, அச்சமயம் ஒரு இளம் பெண்ணின் அவலக்குரல் என் காதில் விழுந்தது. அந்த குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தேன், அங்கே ஒரு முரடன் ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். அச்சமயம் அவளை காக்க வேண்டி அந்த முரனுடன் நான் சண்டை செய்ய வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது. அச்சமயத்தில் அவனுடன் மோதிக்கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக அந்த முரடனின் கையில் இருந்த இந்த முத்திரை மோதிரம் என் கண்களில் பட்டது. இவன் ராஜாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவனாக தான் இருக்க இயலும் என்றும் எண்ணிக்கொண்டேன். பின்னர் ‘சரி எதற்கும் இருக்கட்டுமே’ என்று அந்த முத்திரை மோதிரத்தை ஜாக்கிரதையாக அவன் விரலில் இருந்து கழற்றி எடுத்து பத்திரமாக என் இடையில் சொருகி வைத்துக்கொண்டேன்,” என்றான் பார்த்தீபன் சர்வசாதாரணமாக.
அந்த வாலிபனை ஒரு முறை ஏற இறங்க நோக்கிய தேன்மொழி,
“ஓகோ! நீர் பெரிய திருடன் தான் போலிருக்கிறது. உம்மை போய் கண்ணியமானவர் என்று எண்ணியது என் தவறு தான்.” என்றாள் இதழ்களில் இகழ்ச்சி நகை கூட்டியவாறே.
“நான் எதையும் திருடவில்லையே பின்பு எப்படி திருடனாக முடியும்?”
“அப்படி என்றால் இது என்னவாம்?”
“இந்த பொருள் எனக்கு தேவைப்பட்டது எடுத்துக்கொண்டேன். அது எப்படி திருட்டு ஆகும்?”
“அப்படி என்றால் இது திருட்டு இல்லையோ?”
“இல்லை! தேவைக்கு மேலதிகமாக எதையும் எடுத்தால் தானே அது திருட்டு ஆகும். தேவைக்கு எடுப்பது எப்படி திருட்டாகும்?”
“நல்ல கதையாக தான் இருக்கிறது, நீரும் உமது சித்தாந்தமும்” என்று கூறிய தேன்மொழி சற்று பலமாகவே நகைத்தாள், திடீரென ஏதோ நினைவு வந்தவள் போல் “ஒரு வேளை அந்த தளபதி முத்திரை மோதிரம் திருட்டுப்போய் விட்டது தொடர்பாக மன்னரிடம் புகார் அளித்துவிட்டால், உம் திட்டம் முழுவதும் தவிடு பொடி ஆகி விடுமே! அந்த முத்திரை மோதிரத்தை கொண்டு செல்லும் தங்களை காவலர்கள் சந்தேகத்துடன் விசாரிக்க தொடங்கி விட்டால், ஒருவேளை சிறை செய்தே விட்டால், என்ன ஆகும்!” என்று சற்று வியப்புடனே வினாவை எழுப்பினாள் தேன்மொழி.
“ஓர் அதிகாரி, அவரின் முக்கியத்துவம் குறித்து அரசால் வழங்கப்பெற்ற முத்திரை மோதிரத்தை தொலைத்து விட்டாரானால் அந்த அதிகாரிக்கு என்ன தண்டனை வழங்கப்படுமென்பதை தாங்கள் அறிவீர்களா?, அதுவும் நாடு ஒரு படையெடுப்பை எதிர்கொள்ள போகின்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ள போது” என்று வினவிய பார்த்தீபனின் புருவங்களும் அவளிடம் வினா எழுப்புவன போலவே சற்று மேலே உயர்ந்தன.
“ஆம் அறிவேன், பதவி நீக்கம்” என்றாள் தேன்மொழி திட்டமான குரலில்.
“ஆகையால் தன் பதவியை காத்துக்கொள்ள தளபதியார் இந்த விடயத்தை மேலிடத்திற்கு கொண்டு செல்லாமல் தானாகவே முடித்துவிட தான் பார்ப்பார். ஆகவே தாங்கள் கூறியது போல் நிகழ்வதற்கு எவ்வித வழிவகையும் இல்லையென்றே கணித்தேன்.” என்றான் பார்த்தீபன் மிக உறுதியாக.
“ஆம்” என்பது போல் தலையை அசைத்த தேன்மொழி “இங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தால், அந்த முரட்டு தளபதி மீண்டும் எழுந்து வந்தாலும் வந்து விடுவான்.” என்றாள் உதட்டில் இளநகை கூட்டியவாறே.
“ஆம் அங்கே உங்கள் சேலையை பிடித்தான், இங்கே வந்தால் என் கால்களை பிடிப்பான்” என்று கூறிய பார்த்தீபன் சற்று இரைந்தே நகைத்தான்.
பார்த்தீபனின் நகைச்சுவையை அவ்வளவாக இரசிக்காத தேன்மொழி அங்கிருந்து நகர்ந்து மிக வேகமாக குதித்து குதித்து குடு குடு என முன்னே நடக்க ஆரம்பித்தாள். ஒரு கையில் தன் புரவியை பிடித்தவாறே பார்த்தீபனும் அவளை பின் தொடர்ந்து அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க பிரயத்தனப்பட்டவாறே நடந்தான். அவ்வாறு நடக்க ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு நாழிகைக்குள்ளாகவே அவர்கள் இருவரும் அங்கிருந்த ஒரு குடிசையை அடைந்துவிட்டிருந்தனர். குடிசையின் பின்புறத்திற்கு சென்று புரவியை கட்டிப்போட்டுவிட்ட அந்த வாலிபன் அதற்கு வேண்டியவற்றையும் தேன்மொழியின் உதவியுடன் ஏற்பாடுசெய்து கொடுத்து விட்டு, மெல்ல அந்த குடிசைக்குள் நுழைந்தான். சிறிய அகல் விளக்கிலிருந்து பிறந்த மிக மெல்லிய வெளிச்சம் அந்த குடிசையெங்கும் பரவி பிரவாகித்துக்கொண்டிருந்தது. அந்த குடிசையின் ஒரு மூலையில் சற்று வயதான முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். தேன்மொழி அவரின் காதுகளில் ஏதையோ இரகசியம் போல் மெல்லிய குரலில் கூறவும், சரேலென அந்த பெரியவர் அந்த வாலிபனை நிமிர்ந்து நோக்கினார். பின்னர் தன் அருகில் வந்து உட்காரு என்பது போல் பார்த்தீபனை நோக்கி தலையை அசைக்கவும் செய்தார். அவரின் முகத்தில் குடிகொண்டிருந்த அந்த கம்பீரம் அவனுக்கு அவர் மீது மிகுந்த மரியாதையை உண்டாக்கவே பார்த்தீபன் மெல்ல அவரருகில் சென்று பயபக்தியுடன் அமர்ந்தான். அவனின் தோள்களை தட்டிக்கொடுத்த அந்த பெரியவர் அவனின் தலையிலும் மெல்ல தன் கைகளை வைத்து ஆசி வழங்குவது போல் சைகை செய்து நம்பிக்கை பொங்கிய புன்சிரிப்பையும் இதழ்களில் தவழவிட்டார். இரவு போஜனத்தை முடித்துக்கொண்டு விட்ட அந்த வாலிபன் தேன்மொழியை நோக்கி “யாரிந்த பெரியவர்?” என்று வியப்புடன் வினவவும் செய்தான்.
“இவர் என் பாட்டனார் பெயர் சொக்கலிங்கம். ஒரு காலத்தில் கனகசூரிய சிங்கையாரிய சக்கரவர்த்தியின் படைகளில் முக்கிய பொறுப்பை வகித்தார். தென்பகுதியிலிருந்து படையெடுப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் இவருக்கு கடும் குளிர் சுரம் ஏற்படவே போரில் பங்கு கொள்ள இயலவில்லையாதலால், மன்னர் தோல்வியை தழுவி விட்டதால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியின் விளைவாக இப்பொழுதெல்லாம் யாரிடமும் பேசுவதில்லை. எப்பொழுதும் ஊமை போலவே அமர்ந்திருப்பார். தாங்கள் சிங்கை பரராஜசேகரரின் பிரநிதியாக இங்கு நுழைந்திருப்பதாக சொன்னேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதனால் தான் தங்களை ஆசிர்வதிக்கவும் செய்தார்.” என்றாள் தேன்மொழி உணர்ச்சி பொங்கிய குரலில்.
“ம்ம்” என்று தலையை அசைத்த பார்த்தீபன் அந்த கிழவரின் ராஜவிசுவாசத்தை எண்ணி மெச்சிக்கொண்டே திண்ணையில் படுத்து கண்களை மூடினான். நீண்ட தூர கடற்பிரயாணத்தை மேற்கொண்டு வந்த அந்த வாலிபனுக்கு இயல்பாகவே உண்டாகிய உடற்சோர்வு காரணமாக வெகு விரைவிலேயே உறங்கியும் போனான்.
அடுத்த நாளே அவன் ஆபத்தான பயணமொன்றை தொடர இருப்பதையும், அவனின் திட்டம் பலிக்குமா என்பதையும் மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்த்த தேன்மொழி தூக்கம் பிடிக்காமல் நடந்து கொண்டிருந்தாளானாலும், இடையிடையே அந்த வாலிபனையும் திரும்பி பார்த்து, “இத்தனை பயங்கர காரியத்தில் இறங்க போவது குறித்து எவ்வித கவலையுமின்றி எப்படித்தான் உறங்குகிறாரோ?” என்று தனக்குள் கூறியும் கொண்டாள். “இருந்தாலும் இவர் மேல் எனக்கு ஏன் இத்தனை சிரத்தை, ஒரு நாள் பழக்கத்தில், அதுவும் சில நாழிகைகள் பழக்கத்தில், இவர் குறித்து ஏன் நான் இத்தனை தூரம் கவலைப்பட வேண்டும்” என்றும் போலியாக தன்னையே கடிந்து கொண்டாளானாலும், மனம் அந்த வாலிபனையே மீண்டும் மீண்டும் நாடிக்கொண்டிருந்தது.
அடுத்த தினமே தன்னுடைய கணிப்பு பொய்த்துவிட போவதையும், அவன் பெரும் ஆபத்துக்களை சந்திக்க இருப்பதையும் பல அரும்பெரும் சாகசங்களை செய்து முடிக்க போவதையும் அக்கணத்தில் பார்த்தீபன் உணர்ந்திருக்கவில்லையாகையால், எந்தவிதமான கவலையுமின்றி பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் போலவே அமைதியாக ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். விடிந்து விட்டதை கூட உணராமல்.
சிங்கைநகரத்து சிம்மாசனம் ஐந்தாவது அத்தியாயம் தொடரும்