சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 05

0
1352

நடுக்கடலில்

சில தினங்களுக்கு முன்பு கோடிக்கரையிலிருந்து படகில் ஏறி, பரந்து விரிந்த அந்த பெருங்கடற்பிரவாகத்தில் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அந்த பேரலைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் பயணத்தை ஆரம்பித்திருந்த அந்த வாலிபன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆதிஅந்தமற்ற பரம்பொருளை நினைவுபடுத்துவது போலவே பரந்து விரிந்து கிடந்த அந்த நீல நீர்ப்பிரவாகத்தில் பொங்கிய அலைகள் சிதறிய அழகையும், அவ்வாறு சிதறிய நீர்த்துளிகள் தன் மேனியில் தீண்டும் சுகத்தையும் அனுபவித்து வியந்த வண்ணமே படகின் மேல் நின்று கொண்டிருந்த அந்த வேளையில் அவனின் கண்களில் ஒரு விசித்திரமான காட்சி தென்படவே, அவ்விடத்தை மேலும் கூர்ந்து நோக்கினான்.

பார்த்தீபன் பயணம் செய்து கொண்டிருந்த படகிலிருந்து சிறிது தொலைவில் சீன தேசத்து வியாபார கப்பல் ஒன்று தென்பட்ட அதேவேளை, அந்த வியாபார கப்பலை இடைமறித்த மற்றுமொரு கப்பலில் இருந்து ஏழெட்டு முரட்டு தடியர்கள் கையில் பயங்கர ஆயுதங்களை தாங்கிய வண்ணம் அந்த வியாபார கப்பலினுள் குதித்து இறங்கிக்கொண்டிருக்கவும், அதை அவதானித்துவிட்ட பார்த்தீபன் அங்கு ஏதோ விபரீத சம்பவங்கள் நிகழப்போவதை உணர்ந்தானாதலால், மாலுமியை நோக்கி அந்த கப்பல் நிற்கும் திசைக்கு படகை செலுத்துமாறு கட்டளை பிறப்பித்தது மட்டுமன்றி, தன் உடைவாளை கைகளில் உருவி படகின் ஓரத்திற்கு வந்து தயாராகவும் நின்றான்.

பார்த்தீபனின் படகு அந்த கப்பலை நெருங்கியதும் நொடிப்பொழுதில் புயலென விரைந்திட்ட பார்த்தீபன் தன் படகின் விளிம்பை மிதித்து ஒரே தாவாக தாவி வேங்கை போல் அந்த கப்பலினுள் குதிக்கவும், அவன் உந்திய விசையினால் அந்த படகு ஒரு பெரும் ஆட்டத்தை காட்டியே நின்றதன் விளைவாய், எத்தனையோ பெரும் பிரளயங்களிலும் அஞ்சாமல் படகு வலித்த அந்த மாலுமி கூட சிறிது தடுமாறித்தான் போனார்.

அவ்வாறு பார்த்தீபன் அந்த வியாபார கப்பலினுள் பாய்ந்த மறுகணமே ஆறடிக்கும் சற்று அதிகமாக வளர்ந்து விட்டிருந்த ஏழெட்டு முரட்டு தடியர்கள் கையில் ஆயுதங்களுடன் அவனை சூழ்ந்து விட்டிருந்தார்களானாலும், அது குறித்து சற்றும் பதற்றப்படாத பார்த்தீபன் தன் கூரிய வேல்ப்பார்வையை ஒரு முறை சுழல விட்டு அந்த தடியர்களை கண்களாலேயே அளவெடுத்து அவர்கள் கடற்கொள்ளையர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் என்று முடிவு கட்டியிருந்தானாதலால், அதற்குமேல் ஒரு கணமும் தாமதிக்காமல் விரைந்து செயற்பட்ட பார்த்தீபன் தன் நீண்ட நெடுவாளால், தன் முன்னால் நின்று கொண்டிருந்த இருவரை வெட்டி சாய்த்த அதே வேளை தன் கால்களால் பின்னால் நின்ற இருவரை ஒரே எத்தாக எத்தி தள்ளியும் விட்டிருந்தான். அதே நேரம் பார்த்தீபனின் வலப்புறத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு கொள்ளையன் தன் வாளை பார்த்தீபனின் பேரில் வீசவும் கணப்பொழுதில் விரைந்து செயற்பட்ட பார்த்தீபன் தன்னுடைய வாளால் இலாவகமாய் அவனுடைய வாளை தட்டிவிட்டதன்றி, அந்த கொள்ளையனின் இடையில் செருகப்பட்டிருந்த குறுவாளையும் இழுத்து பின்னாலிருந்து தாக்க வந்த மற்றொருவனின் மார்பை பதம்பார்த்தது மட்டுமல்லாமல், வாளை வீசிய அந்த கொள்ளையனின் கழுத்தையும் சரேலென வெட்டினான். பார்த்தீபன் சற்றும் எதிர்பார்க்காத வேளையில் அவனின் முதுகுப்புறம் நின்ற அந்த கொள்ளையர்களில் ஒருவன் அவனின் தோளில் ஆழமாக தன் வாளை பதிக்கவும், அவனை நோக்கி திரும்பிய பார்த்தீபன் அந்த கொள்ளையனின் தலையை தன் நீண்ட வாளால் நொடிப்பொழுதில் வெட்டியும் வீழ்த்தினான்.

இவ்வாறு சுமார் அரை நாழிகைக்குள்ளாகவே அந்த கொள்ளையர்கள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டிருந்த அந்த வீர வாலிபனை வைத்த கண் வாங்காமல் நோக்கிக்கொண்டிருந்த சீனதேசத்து வியாபாரிகளில் ஒருவன் சீன பாஷையில் நன்றி கூறியதோடு நில்லாமல் சில பச்சிலைகளை கொண்டு அவனின் காயத்திற்கு மருந்திட்டு, ஓய்வெடுக்குமாறும் கூறினானாலும், தனக்கு முக்கியமான பணி ஒன்று இருப்பதாக கூறி அவர்களிடமிருந்து விடை பெற்று தன் படகிலேறிய பார்த்தீபன் தொண்டைமானாற்று முகத்துவாரத்தையும் அடைந்திருந்தான். இயல்பாகவே ஆபத்துகளை தானாகவே தேடி சென்று அவற்றை வெற்றி கொண்டு மீளும் சுபாவமுடையவனான பார்த்தீபன் இயலவே நடுக்கடலில் பெரும் சாகச காரியங்களை நிகழ்த்தியிருந்ததாலும், தொண்டைமானாற்றிலும் ஒரு முரடனுடன் மோத வேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டதாலும், இயல்பாகவே அவனை பீடித்திருந்த உடற்சோர்வின் விளைவாக நித்திராதேவியானவள் அவனை சற்று அதிகமாகவே ஆட்கொண்டு விட்டாளாதலால், விடிந்த பின்னரும் தூக்கம் கலையாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டுமிருந்தான்.

இந்த நிலையற்ற போலி உலகில் எத்தனையோ பெரும் ராஜாங்கங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலானதாக வான வீதியில் தனிப்பெரும் ராஜாங்கத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பவனும், உலக உயிர்களுக்கெல்லாம் மூல முதலாக இருப்பவனுமான கதிரவன் தன் கதிர்க்கரங்களை மெல்ல உயர்த்தி கீழ்வானை வெளுக்க செய்து வையமெங்கும் தன் ஒளியை பரப்ப ஆரம்பித்து விட்டிருந்த அதேவேளையில், பல வித பட்சிகள் தங்களின் இனிய குரல்களில் நானாவித ஒலிகளையும் எழுப்பி இனிய கானங்களை இசைத்தபடியே வானை அலங்கரிக்க பல வித அழகிய கோலங்களை அமைத்து கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்த அந்த பொழுதினிலும், தன்னை மறந்து உடல் அசதியின் விளைவாய் சுருண்டு படுத்திருந்த பார்த்தீபனை மெல்ல உலுப்பி துயில் கலைத்தாள் தேன்மொழி.

சூரியஉதயம் நிகழ்ந்து இத்தனை நேரமாகியும் உறங்கிக் கொண்டிருக்கிறோமே என்கின்ற எண்ணத்தில் பார்த்தீபனுக்கு சிறிது வெட்கம் உண்டாகியதாலும், அதன் பொருட்டு தன் மீதே உண்டான கோபத்தாலும், தன்னை தானே மனதிற்குள் கடிந்து கொண்டு தேன்மொழியின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் வேகமாக எழுந்து விரைந்து சென்ற பார்த்தீபன் சிரமபரிகாரங்களை முடித்துக்கொண்டும் சுதேசிகள் அணிகின்ற ஆடை அணிகலன்களை தரித்துக்கொண்டும் தன் பயணத்தை தொடர்வதற்கு தயாராக நின்ற அதே வேளை, இரவு முழுவதும் நன்றாக ஓய்வெடுத்துவிட்ட அந்த புரவியும் பயணத்திற்கு தயாராக இருப்பதை வெளிப்படுத்துவது போல் கம்பீரமாக தன் முன்னங்கால்களை தூக்கி கனைத்தமையானது, அந்த புரவி தன் எஜமானனுக்கு வந்தனம் கூறி நிற்பதை போலவே ஒரு தோற்றப்பாட்டை உண்டாக்கி நின்றது.

ஒரே நாள் பழக்கத்தில் தனக்கு அந்த வாலிபன் மீது உண்டாகிவிட்ட அந்த சிரத்தையை சற்றும் நம்ப மறுத்த தேன்மொழியின் வெளிமனமானது, அவனையே நாடிச்சென்று கொண்டிருந்த ஆழ்மனதை கண்டித்துக்கொண்டிருந்தனால் உண்டான கோபமும், இத்தனை பயங்கர காரியத்தை சாதிக்க தன்னந்தனியே செல்கிறாரே இவர் என்கிற எண்ணத்தினால் விளைந்த அச்சமும், அந்த வாலிபன் தன்னை பிரிந்து செல்ல போவதனால் அவளின் மனதில் உண்டான துயரமும் இணைந்து, அழகே உருவமாய் தங்கச்சிலையென நின்றுகொண்டிருந்த தேன்மொழியின், பேரொளி பொருந்திய வதனத்தில் இனங்காண இயலாத விசித்திர உணர்வு ஒன்றையே படர வைத்திருந்திருந்தது.

தேன்மொழியின் பாட்டனாரிடம் ஆசி பெற்றுக்கொண்டு புறப்படுவதற்கு தயாரான அந்த வாலிபன் தேன்மொழியை நெருங்கி வந்து அவளிடமும் விடை பெற்றுக்கொண்டு புரவியின் பேரில் ஒரே தாவலாக தாவி ஏறினான். கிழக்கு திசை நோக்கி புழுதியை கிளப்பியவாறே விரைந்த அந்த புரவி சில கணங்களிலேயே அவள் கண்களில் இருந்து முழுமையாக மாயமாய் மறைந்து விட்டிருந்ததனால் அவ்வேளை தேன்மொழியின் மனதில் எழுந்த சொல்லொண்ணா வேதனையின் பயனாக பொங்கிய கண்ணீரானது தாரை தாரையாய் கண்களை கடந்து பெருகிக்கொண்டிருந்ததனால், அக்கண்ணீரை வெளிக்கு காட்டாமல் தலையை குனிந்த படியே ஆற்றங்கரையை நோக்கி ஓடினாள்.

புரவியில் ஏறி தன் பயணத்தை ஆரம்பித்திருந்த அந்த வாலிப வீரன், அடுத்த சில நொடிகளிலேயே இரண்டரை காததூரங்களை கடந்து வந்து விட்டிருந்தானானாலும், அவன் பயணத்தை தடை செய்யவென்றே அங்கிருந்த சோதனை சாவடி ஒன்றில் கைகளில் ஈட்டிகளுடன் நின்றுகொண்டிருந்த இரண்டு சிங்கள வீரர்கள் புரவிக்கு குறுக்கே தம் ஈட்டிகளை நீட்டி வழிமறித்தது மட்டுமல்லாமல், புரவியிலிருந்து அவனை இறங்குமாறு சிங்களத்திலேயே கட்டளையும் பிறப்பித்திருந்தனர். அடுத்து அங்கே நிகழ இருக்கின்ற மிகச்சிறிய சம்பவம் ஒன்று மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவதை அச்சமயத்தில் அந்த வாலிபன் உணர்ந்திருக்கவில்லையாகையால் மிக அலட்சியமாகவே குதிரையில் இருந்து குதித்துக் கீழே இறங்கவும் செய்தான்.

சிங்கை நகரத்து சிம்மாசனம் ஆறாம் அத்தியாயம் தொடரும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments