அவசரபுத்தி
புரவியில் ஏறி தன் பிரயாணத்தை ஆரம்பித்து ஒரு சில விநாடிகளுக்குள்ளாகவே இரண்டரை காத தூரங்களை கடந்து வந்து விட்டிருந்த பார்த்தீபனை சோதனை சாவடி ஒன்றில் ஈட்டிகளை நீட்டி பிடித்தவண்ணம் நின்று கொண்டிருந்த இரண்டு சிங்கள வீரர்கள் குறுக்கே தம் ஈட்டிகளை நீட்டி தடைசெய்தது மட்டுமன்றி அவர்களில் ஒருவன் பார்த்தீபனை புரவியில் இருந்து இறங்குமாறு சிங்களத்திலேயே கட்டளையிடவும் செய்தான். சிங்கள பாசையில் அத்தனை பரீட்சையம் அந்த வாலிபனுக்கு இல்லையென்றாலும் அந்த வீரர்களின் அங்க அசைவுகளை துணையாக கொண்டு அவர்கள் இன்னதை தான் கூறியிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டவன் “நம்மிடம் தான் முத்திரை மோதிரம் இருக்கின்றதே” என்கின்ற அசட்டு தைரியத்தில் புரவியின் பேரில் இருந்து மிக அலட்சியமாகவே குதித்து இறங்கியதல்லாமல் முத்திரை மோதிரத்தின் சக்தியை பரிசோதித்து பார்க்க எண்ணி ஒரு விசித்திர காரியத்திலும் இறங்கி.
“நீ யாரடா என்னை தடுக்க, எத்தனை தைரியம் உனக்கு”
“கவுத ஒயே?”
“நான் யார் என்று தெரியுமா என்னையே புரவியிலிருந்து இறங்க சொல்கிறாயா?”
“கவுத”
“முட்டாளே என்னை தடுத்ததற்கு உனக்கு என்ன தண்டனை என்று தெரியுமா?”
என்று பயங்கரமாக கூச்சலிட்டு அந்த வீரர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தான். அவன் பேசிய தமிழ் அவர்களுக்கு ஓரளவு புரிந்திருந்தாலும் அந்த வீரர்கள் பேசிய சிங்களபாசை பார்த்தீபனுக்கு ஒரு துளி கூட புரிந்திருக்கவில்லையாகையால் அவர்களுக்கு பேசுவதற்கு அவகாசமே வழங்காத பார்த்தீபன் தானே சரமாரியாக இடைவிடாமல் பேசியும் தள்ளினான். ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் முற்றி அந்த வீரர்கள் தம் ஈட்டிகளை பார்த்தீபனின் பேரில் செலுத்த முயலவும் பார்த்தீபன் அந்த இரண்டு ஈட்டிகளையும் பிடித்து ஒரே தள்ளாக தள்ளி அந்த இரண்டு வீரர்களையும் நிலத்திலே உருட்டியும் விட்டிருந்தானாதலால், மேலும் பல வீரர்கள் கையில் ஆயுதங்களை ஏந்தியபடி பார்த்தீபனை நோக்கி நெருங்கி வரவும் மெல்லிய குறு நகை ஒன்றை உதடுகளில் தவழவிட்டவாறே பார்த்தீபன் தன் இடைக்கச்சையில் கையை விட்டு அதுவரை நேரமும் மந்திர மோதிரம் என்றே அவன் எண்ணிக்கொண்டிருந்த அந்த முத்திரை மோதிரத்தை எடுக்க முயலவும் அதற்குள்ளாக அந்த சோதனை சாவடிக்குள் இருந்து “கவுத எஹே! எஹே மொனவத சத்தே?” என்று பயங்கரமான குரலில் சிங்களத்தில் முழங்கிய வண்ணம் இடையில் மட்டும் ஒரே ஒரு வஸ்திரத்தை தரித்துக்கொண்டும் மேலாடை எதுவுமில்லாமலும் தன் இறுகிய கட்டுமஸ்தான மேனியை வெளிக்கு காட்டிக்கொண்டும் வந்து நின்ற அந்த மனிதன் சாட்சாத் தளபதி ராஜசிங்க தான் என்பதை பார்த்தீபன் இனங்கண்டு கொண்டானானாலும், முந்தைய இரவுப்பொழுதில் பனங்கள்ளு அளித்த போதையின் மயக்கத்தில் தடுமாறிக்கொண்டும் காம போதையின் உச்சத்தில் நின்று பாவையின் சேலையை இழுத்து வம்பு வளர்த்த அந்த ராஜசிங்க அல்ல இவன் என்பதையும் கம்பீரமான தளபதியாக அவதாரம் எடுத்துவிட்ட தளபதி ராஜசிங்க தான் இவன் என்பதையும் உணர்ந்தானாதலாலும், முத்திரை மோதிரத்தை இவனிடம் காட்டுவது அத்தனை உசிதமல்ல என்றும் வேறு எதாவது திட்டத்தை தான் செயல்படுத்தியாக வேண்டும் என்றும் முடிவுகட்டிக்கொண்டவன் அந்த முத்திரை மோதிரத்தை மீண்டும் இடைக்கச்சையிலேயே பத்திரப்படுத்தி வைத்தும் கொண்டான். அத்துடன் “இந்த கேடு கெட்ட போதை எப்பேர்ப்பட்ட பெரிய வீரர்களையும் நொடிப்பொழுதில் சிறியவர்களாக்கி விடுகிறதே” என்று தனக்குள்ளாகவே மனதினுள் கூறி வியந்தும் கொண்டான்.
சோதனை சாவடிக்குள் இருந்து வெளியில் வந்து தனது இரண்டு இரும்பு கரங்களையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கம்பீரமாக நின்றுகொண்டிருந்த ராஜசிங்க பார்த்தீபனை நோக்கி “கவுத ஒயா?, கொஹே இந்தக்க என்னே” என்று சற்று இரைந்தே வினவினான். அவன் பேசிய பாசை பார்த்தீபனுக்கு புரிந்திருக்கவில்லையானாலும், அவன் வினவிய தோரணையையும், அவனின் முக பாவங்களையும், தான் நின்று கொண்டிருக்கும் அந்த சந்தர்ப்பத்தையும் இணைத்து நோக்கிய பார்த்தீபன் அவன் இன்னதை தான் கேட்டிருக்க வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தானானாலும், அதற்கு எவ்வித பதிலும் அளிக்காமல் செயலற்றே நின்று கொண்டிருந்தானாதலால், சினத்தின் உச்சத்தையே தொட்டுவிட்டிருந்த ராஜசிங்க மிக கடுமையான தொனியில் “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்” என்று அதையே தமிழிலும் வினவினான். அப்பொழுதும் சில கணங்கள் மௌனம் சாதித்த பார்த்தீபன், எதையோ முடிவு செய்து விட்டவனாய் ஏதோ ஒரு பதிலைக் கூறுவதற்கு வாய் திறக்குமுன்பாகவே, எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு வீரன் ராஜசிங்கவின் காதுகளில் எதையோ இரகசியமாய் ஓதவும், ராஜசிங்கவின் கண்களில் கோபத்தீ சுடர்விட்டு எரிந்து அனல் பறக்கவும் ஆரம்பித்திருந்ததை பார்த்தீபன் அவதானித்திருந்தானானாலும், அந்த வீரன் ராஜசிங்கவின் காதுகளில் இன்னதை தான் கூறியிருப்பான் என்கின்ற முடிவுக்கு பார்த்தீபனால் வர இயலவில்லையாகையால் “ஒரு வேளை நான் யார் என்பதை அறிந்து விட்டானோ, இல்லை இல்லை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை, அப்படி என்றால் வேறு என்னவாக இருக்கும்” என்று பல விதமான வினாக்களை தனக்குள் எழுப்பி குழம்பிக்கொண்டும் நின்றான்.
அந்த வீரன் காதில் இரகசியம் ஓதி முடித்த மறுகணமே தன் கொடிய சிவந்த கண்களை பார்த்தீபனின் பால் திருப்பிய ராஜசிங்க அவனை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு ஏதேதோ கட்டளைகளை தன் வீரர்களை நோக்கி பிறப்பித்தது மட்டுமல்லாமல், விரைவாக அவ்விடத்தை விட்டு சில வீரர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு காதில் இரகசியம் கூறிய அந்த வீரன் காட்டிய திசையை நோக்கியும் புறப்பட்டான்.
தளபதி வெளிச்சென்ற மறுகணமே பார்த்தீபனை ஏழெட்டு வீரர்கள் நாலாபுறமும் இருந்து வந்து சூழ்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அவனை இறுக்கமாக பிடித்துக்கொள்ளவும் செய்தார்கள். அவர்களில் ஒருவன் பார்த்தீபனின் இடையில் தொங்கிக்கொண்டிருந்த நெடுவாளை இழுத்து அவனிடம் இருந்து பறித்து எடுக்கவும் தன் வாளை அந்நியன் ஒருவன் தொட்டு விட்டானே என்கின்ற எண்ணத்தின் மேலீட்டால் பார்த்தீபனுக்கு அவனையே அறியாமல் அந்த வீரனின் பேரில் உண்டான சினத்தின் விளைவாக ஒரு தடவை உடலை ஆவேசத்துடன் திமிறி தன்னை பிடித்திருந்த வீரர்களில் சிலரை தரையில் தள்ளி விட்டது மட்டுமல்லாமல் ஒரே இழுவையாக இழுத்து தன் வலது கையை பிடித்துக்கொண்டிருந்த ஒரு வீரனை அருகில் இருந்த பெரிய தூணுடன் பலமாக மோதவும் செய்தான். பின் தன்னுடைய வாளை இழுத்து பறித்த அந்த வீரனின் மோவாயில் ஓங்கி ஒரு குத்தும் விட்டான். இன்னும் சிலகணங்கள் தாமதித்து விட்டிருந்தாலும் அங்கு பெரும் இரத்த ஆறே ஓடியிருக்குமென்றாலும், அதற்குள்ளாகவே இன்னும் பல வீரர்கள் பார்த்தீபனை சூழ்ந்து மேலும் பலமாக பிடித்துக்கொள்ளவே ஒரு வீரன் நல்ல உறுதியான கயிறு ஒன்றை கொண்டு வந்து பார்த்தீபனின் கை கால்களை நன்கு இறுக்கமாக கட்டினான். பார்த்தீபன் கைகால்களை திமிறி அந்த கட்டிலிருந்து விடுபட முயன்றானானாலும் கைகால்கள் இறுக்கமாக உடலுடன் பிணைத்துக் கட்டப்பட்டிருந்ததனால் அந்த முயற்சி அவனுக்கு சிறிதும் பலனளிக்காமலே போனது.
பின்னர் நான்கு பேர் சேர்ந்து பார்த்தீபனை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு போய் ஒரு இருள் நிரம்பிய அறையினுள் போட்டது மட்டுமல்லாமல் அங்கிருந்த பெரிய தூணுடன் சேர்த்து இறுக்கமாகவும் கட்டினார்கள்.
அந்த சோதனை சாவடியின் அமைப்பை ஒரு முறை கண்களால் அளவெடுப்பது போல் நோக்கிய பார்த்தீபன் முன்பொரு நாளில் இங்கே ஒரு சத்திரம் இயங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும் அந்த சத்திரக்கட்டடம் தான் இந்நாளில் சோதனை சாவடியாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கவும் வேண்டும் என்றும் மனதிற்குள் முடிவு கட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் அங்கிருந்து தப்பிக்க எதாவது வழி கிடைக்கிறதா என்று மிக அவதானத்துடன் நோக்கியும் கொண்டு இருந்தான். அவனின் கைகால்களில் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்த அந்த கயிறு, அவனுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தவே “ச்சே நம் அவசர புத்தியால் இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே” என்று தன்னை தானே கடிந்து கொண்டது மட்டுமல்லாமல், தன்மீது கட்டப்பட்டிருந்த அக்கட்டுகளை தளர்த்த பெரிதும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தானானாலும் அச்சமயத்தில் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.
அடுத்த சில நாழிகைகளிலேயே திரும்பி வந்துவிட்ட ராஜசிங்க பார்த்தீபனை கட்டிப்போட்டிருக்கும் அறையை திறந்து உள்ளே நுழைந்தான், ஆனால் அங்கே அவனுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்கள் பார்த்தீபனை கட்டுவதற்கு பயன்படுத்திய கயிறு மட்டுமே தூணில் சுற்றப்பட்டிருந்ததன்றி அங்கே இருக்க வேண்டிய பார்த்தீபன் மாயமாய் மறைந்திருந்தான்.
சிங்கை நகரத்து சிம்மாசனம் ஏழாவது அத்தியாயம் தொடரும்