சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 07

0
1345
PicsArt_09-04-12.45.05

தேன்மொழியின் கலக்கம்

கிழக்குத் திசையில் பொன்னென ஒளி வீசிக்கொண்டிருந்த அலர்கதிர் ஞாயிறானது மெல்ல நகர்ந்து உச்சியை அடைந்து தன் இளஞ்சூட்டு கதிர்களை பிரவாகிக்க ஆரம்பித்திருந்த அந்த வேளையினிலே செங்கதிர்க்கதிரவன் அளித்த வெம்மைக்கு எப்போதும் தண்மையாய் ஓடிக்கொண்டிருக்கும் வல்லியாற்றின் நீர்ப்பிரவாகம் மிகுந்த இதமாகவே அவளுக்கு தோன்றியதாகையால், வல்லியாற்றின் மேற்கு கரையில் அமர்ந்து தன் கால்களை தண்ணீரிற்குள்ளே விட்டபடி ஏதேதோ சிந்தனையில் மூழ்கியிருந்த தேன்மொழியின் விரிந்த செந்தாமரை ஒத்த பொலிவுடைய முகமானது வாடி வதங்கி சோர்ந்து கிடந்தமையானது அவளின் மனதில் பொங்கி எழுந்து பாய்ந்து கொண்டிருந்த வேதனை அலைகளையே புலப்படுத்திக்கொண்டிருந்த அதேவேளை அடிக்கடி அவள் நாசியிலிருந்து எழுந்த துன்பியல் பெருமூச்சு அதையே மேலும் உறுதி செய்யவும் செய்தது.

தேன்மொழியின் இந்த நிலைக்கு உகந்த காரணமொன்று இல்லாமலும் இருக்கவில்லை. மனித மனமானது இரு அணிகளாக பிரிந்து ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றை ஒன்று ஜெயிக்க முற்படுகையில் மனிதனுக்கு இவ்வாறான இனம் புரியாத சோகம் பீடித்துக்கொள்வது இயல்பான ஒன்று தான் அல்லவா? அவ்வாறானதொரு நிலையை தான் தற்சமயம் தேன்மொழியும் எதிர்கொண்டிருந்தாள். அவளின் உடல் மட்டுமே அச்சமயம் அவ் வல்லியாற்றங்கரையில் வீற்றிருந்ததே ஒழிய அவளின் மனமானது நேற்றைய தினம் படகுத்துறையில் இறங்கி அந்த முரடனிடமிருந்து தன்னை காப்பாற்றி முத்திரை மோதிரத்தை தளபதியிடமிருந்தே சுருட்டி பின் புரவியில் ஏறி சென்றுவிட்டிருந்த அந்த வீர வாலிபனையே எப்பொழுதும் நாடிய வண்ணம் இருந்ததாகையால்.
“ச்சே மனமே! என்ன இது ஒரு நாள் பார்த்த மாத்திரத்தில் அந்த வாலிபன் மீது இத்தனை நாட்டம் கொண்டுவிட்டாயா?” என்று தன்னையே கடிந்து கொண்டதல்லாமல், “இல்லை இல்லை அந்த வாலிபர் ஏதோ பெரும் அபாயங்களையெல்லாம் தன்னந்தனியே சந்திக்கப்போகிறாரே என்கின்ற எண்ணத்தினால்  உண்டான பரிதாபமாக தான் இருக்க வேண்டும்”
என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக்கொண்டாள். பின் ஏதோ நினைவு வந்தவளாய் “அவர் குறித்து நான் ஏன் அஞ்ச வேண்டும், எந்த அபாயத்தையும் மிக இலகுவாக எதிர்கொள்ளும் திறமை அவருக்கு இருக்கின்றது, அவரின் கண்களில் வீசிய ஒளியே அதற்கு சாட்சி” என்றும் கூறிக்கொண்டாள். “ச்சே மனமே என்ன இது! அவரை பற்றி எண்ணுவதை நிறுத்தவே மாட்டாயா?” என்று கடும் சினத்துடன் தனக்குள்ளாகவே வினாவை எழுப்பிய தேன்மொழியின் முகம் மீண்டும் வாடி வதங்கி சோகமயமாகவே மாறியது.

இவ்வாறு பெரும் மனப்போராட்டங்களுடன் ஆற்றங்கரையில் ஜல ஓட்டத்தில் கால்களை வைத்து அமர்ந்திருந்த தேன்மொழியின் காதுகளில் ஏதேதோ சில அரவங்கள் கேட்கவும் மெல்ல அவற்றை காது கொடுத்து நோக்கியவள், திடீரென எழுந்து வேகமாக தன் குடிசையை நோக்கி குதித்து குதித்து ஓடிச்சென்றமையானது அழகிய மான் குட்டியொன்று ஓடுவது போலவே தோற்றபிரமையை ஏற்படுத்தி நின்றது. அவ்வாறு விரைந்து சென்று அவள் தொண்டைமானாற்று பெருவீதியை அடைந்த அச்சமயத்தில் சற்றுமுன் அவள் கிரகித்த அந்த ஓசைகள் எதன் பேரில் உருவானவை என்பதை அவள் உணர்ந்துகொண்டாளானாலும் அவள் அங்கு கேட்ட விடயமானது அவளின் மனதில் ஏற்கனவே அடித்து ஓய்ந்திருந்த பெரும் புயலிலும் விட பலமான பெரும் பிரளையம் ஒன்றையே அவள் மனதினுள் உருவாக்கி நின்றது.

தொண்டைமானாற்று பெருவீதியின் இருமருங்கிலும் இருந்த குடிசைகளில் இருந்த மக்கள் எல்லோரும் வெளியில் வந்து குடிசைகளின் வாயில்களில் நின்று வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேன்மொழியும் அங்கே நின்றுகொண்டிருந்த மக்களுடன் மக்களாக வீதியின் ஓரமாக நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்க்கவும் தொடங்கினாள்.

இரண்டு புரவி வீரர்கள் கையில் வேல்களை தாங்கிய வண்ணம் வந்து கொண்டிருக்க அவர்களுக்கு மத்தியிலே பெரிய முரசு ஒன்றை கழுத்திலே தொங்க விட்டபடி நடந்து வந்துகொண்டிருந்த ஒரு மனிதன் முரசை அறைந்து ஓர் அறிவிப்பையும் வெளியிட்டான். “அரச காரியங்களை உளவு பார்க்கவும், நாட்டின் அரசை சரிக்கவும் வந்த ஒற்றனொருவன் சோதனை சாவடியில் வீரர்களை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டான். புதியவர்கள் யாரையாவது கண்டால் உடனடியாக தகவல்களை வழங்குவதுடன் குறித்த ஒற்றனை பற்றிய தகவல்களை தருவோருக்கு பொற்காசுகள் சன்மானமாக தரப்படும்.” என்று அரைகுறை தமிழில் கூறிவிட்டு மீண்டும் முரசை மூன்று முறை “டமார் டமார் டமார்” என்று அறைந்து விட்டு அடுத்த வீதியை நோக்கி நகர்ந்தான்.

முரசறைபவன் மேற்கூறிய அறிவிப்பை அறைகூவல் விடுத்து விட்டு சென்றதுமே மக்கள் வீதியில் ஆங்காங்கே கூடி நின்று பல விதமாக பேசிக்கொள்ளவும் ஆரம்பித்தார்கள்.

 “யாரோ ஒற்றன் வந்துவிட்டானாமே” என்றாள் ஒருத்தி.

“ஆமாமடி! நேற்று புதியவர் ஒருவரை கண்டேன், அவர் தான் அந்த ஒற்றராக இருப்பாரோ?” என்று தன்னுடைய சந்தேகத்தை வெளியிட்டாள் மற்றுமொரு பெண்.

“நேற்று படகில் வந்து இறங்கினாரே ஒருவர் அவரை தானே சொல்கிறாய், ஆகா! என்ன தோற்றம், என்ன முகப்பொலிவு, அவர் முகத்தில் தான் எத்தனை ராஜகளை” என்றாள் இன்னுமொருத்தி

“அவர் தான் அந்த ஒற்றனாக இருப்பார் போலும்” என்றாள் மேற்கண்ட பேச்சை ஆரம்பித்துவைத்த பெண்.

“இல்லை அவர் மகாவீரர்” என்றாள் மற்றவள்.

“போதுமடி நீ அவர் பேரில் உன் மனதை பறிகொடுத்துவிட்டாய் போலல்லவா இருக்கிறது.” என்றாள் அதுவரை அமைதியாக நின்றுகொண்டிருந்த இன்னுமொருத்தி. பின் அவர்களிடமிருந்து “கொல்” என்ற சிரிப்பு சப்தமும் வெளிப்பட்டது.

அங்கே கூடி நின்ற சில பெண்கள் மேற்கண்டவாறு பேசியும் பரிகசித்தும் கொண்டிருந்ததை கேட்ட தேன்மொழிக்கு சகிக்கமுடியாத கடும்சினம் அந்த பெண்களின் பேரில் உண்டாகியிருந்ததாகையால் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அங்கிருந்து நகர்ந்து தன் குடிசையை நோக்கி விரைந்தாளானாலும் வழியிலேயும் கூடி நின்ற மக்களில் வேறு சிலர் பேசிக்கொண்டிருந்ததையும் காதுகளில் போட்டுக்கொண்டே நகர்ந்தாள்.  கூட்டத்தில் ஒரு சிலர் “யாரோ இளைஞன் தானாம், தளபதியையே அடித்துப்போட்டுவிட்டு தப்பி விட்டானாம், அவனிடம் அடிவாங்கிய தளபதியார் எழவே முடியாமல் படுத்துக்கிடக்கிறாராம்” என்று சில பரிகாச புரளிகளையும் கிளப்பிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் சிலர் “யாரோ ஒற்றன் வந்திருக்கின்றானாமே, எப்படியோ இவர்களின் ஆட்சி ஒழிந்தால் போதும்” என்று கூறி பெருமூச்சும் விட்டுக்கொண்டனர். அங்கு பெரும்பாலும் அனைவரும் ஒரே கட்சியினராகவே இருந்தார்கள் ஆகையினால் அவர்களுக்குள் ஒழிவு மறைவேதுமில்லாமல் வெளிப்படையாகவே அவ்வாறு பேசியும் பரிகசித்தும் கொண்டிருந்தார்கள். இவை எதிலுமே அவ்வளவாக ஈடுபாடு காட்டாத தேன்மொழி மிக விரைவாக நடந்து தன் குடிசையை அடைந்திருந்தாள்.

அவள் மனதில் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த பெரும் புயல் தற்சமயம் மறைந்திருக்க அதற்கு பதில் பெரும் பிரளையமே அவள் மனதிற்குள் வெடித்துக்கொண்டுமிருந்ததாகையால் தேன்மொழி ஓரிடத்தில் உட்காரபிடிக்காதவள் போல் அங்குமிங்கும் வேகமாக நடைபயின்று கொண்டிருந்தாள். அவளின் மனமோ “அவருக்கு என்னவெல்லாம் ஆபத்து நேர்ந்திருக்கிறதோ?” என்று எண்ணி துடிதுடித்துக்கொண்டிருந்தது.

தொண்டைமானாறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஊராகையால் தொண்டைமானாறு என்றே பெயர்பெற்றுவிட்ட மணலூர் பெருவீதி எங்கும் சற்று நேரத்திற்கெல்லாம் குதிரைகளின் “டக் டக்” என்ற குளம்படி சப்தங்களும், படைவீரர்கள் அங்குமிங்கும் ஓடிச்செல்லும் சப்தங்களும், சிங்கள வீரர்கள் உரத்த குரலில் ஏதேதோ பேசிக்கொண்ட சப்தங்களும் இணைந்து பெரும் பரபரப்பை கிளப்பி விட்டிருந்ததானாலும் அதை காட்டிலும் பன் மடங்கு பரபரப்பு தேன்மொழியின் உள்ளத்தில் அச்சமயம் குடிகொண்டிருந்தது. தேன்மொழியின் உள்ளத்தை காட்டிலும் பன்மடங்கு பரபரப்பும் ஆவலும் அங்கே நகரத்தின் மற்றொரு பக்கத்தில் இருந்த பார்த்தீபனுடைய மனதிலும் குடிகொண்டிருந்தது.

சிங்கை நகரத்து சிம்மாசனம் அத்தியாயம் எட்டு தொடரும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments