சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 09

0
1453
PicsArt_09-12-12.19.37

வெளிப்பட்ட இரகசியம்

நீண்டு வளர்ந்த ஜடாமுடியை மடக்கி முடிந்து கொண்டும் நெற்றி முதலான பதினெண் பகுதிகளில் திரிபுண்டரமாய் விபூதிக் குறியிட்டுக்கொண்டும், கழுத்தில் ஓர் உருத்திராட்சமாலை இலங்கிக் கொண்டிருக்கவும், முகத்தில் தீட்சண்யமான பார்வையை வீசிக்கொண்டும், அந்த சிறு ஆலயத்தின் முன்றலில் நின்று கொண்டிருந்த அந்த மனிதரை சுட்டிக்காட்டிய காவல் வீரன் “இவர் தான் பொன்பற்றியூர் முடிதொட்ட வேளாளர் பாண்டிமழவர் வழி வந்த அரசகேசரிமழவர்” என்று அறிமுகம் செய்து வைக்கவும் “அவரா” என்று வினவிய பார்த்தீபன் ஒருகணம் அமிதமான வியப்பிலுறைந்து கல்லென சமைந்து நின்றான்.

முன்பொரு முறை இச் சிங்கை நகர இராசதானியானது மன்னரில்லாமல் தலையற்ற முண்டமென தவித்து நின்றுகொண்டிருந்த சமயத்தில் கப்பலேறி மதுரைக்கு சென்று அங்கே கல்வி கேள்விகளிலும் வீரதீரத்திலும் சிறந்து விளங்கிய பாண்டி நாட்டு இளங்கோ ஒருவனான சிங்கையாரியன் என்பவரை அழைத்து வந்து சிங்கையாரியச் சக்கரவர்த்தி என்கின்ற திருநாமம் புனைந்து ராஜ்ஜியபாரத்தை ஒப்படைத்ததன்றி சிங்கை நகர இராசதானியில் ஆரியச் சக்கரவர்த்திகள் தனி ஆட்சி அமைத்து சிறப்பு பெற ஏதுவான வழிவகைகளையும் செய்தவரான பாண்டிமழவர் என்கின்ற பிரபுவின் வழி வந்தவர் தான் இந்த அரசகேசரிமழவர் என்கின்ற காரணத்தினாலோ இல்லை ஒளி மிகுந்த அந்த தெய்வீக தன்மையான தேஜஸ் பொருந்திய வதனத்திலுண்டான ஈர்ப்பின் விளைவினாலோ பார்த்தீபனுக்கு அந்த புதிய மனிதரின் பேரில் சொல்லொண்ணா மரியாதையும் சிரத்தையும் அச்சமயத்தில் உண்டாகியிருந்தது.

அந்த மனிதரை சுட்டிக்காட்டி அறிமுகம் செய்து வைத்த அந்த காவல் வீரன் அத்துடன் நில்லாமல் அரசகேசரிமழவரை நோக்கி சோதனைசாவடியில் நிகழ்ந்த சம்பவங்களை விளக்கி கூறியதல்லாமல்
“ஐயா, இந்த அதிகப்பிரசங்கி வாலிபன் சோதனை சாவடியில் செய்துவிட்ட காரியத்திற்கு அக்கணமே அவர்கள் இவனுக்கு சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்று தான் எண்ணினேன் ஆனால் ஆண்டவன் புண்ணியத்தில் என் தயவால் தற்சமயம் தங்கள் முன் உயிருடன் நிற்கிறான்” என்று கூறி சற்று இரைந்தே நகைத்தான். அந்த புதிய மனிதரின் பேரில் பார்த்தீபனுக்கு மிகுந்த மரியாதை உண்டாகி விட்டதன் காரணமாக அவரின் முன்னிலையில் அந்த காவல் வீரன் தன் வீரத்தை பரிகாசமாக பேசி நகைத்தானாதலால் அவனின் அந்த நகைப்பு பார்த்தீபனுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கவே அதை பொறுத்துக்கொள்ள மாட்டாமல் சற்று கடுமையான தொனியிலேயே “அவர்கள் சிரச்சேதம் செய்யும் வரை என் கைகள் என்ன பூப்பறித்துக்கொண்டா இருக்கும்?” என்று முழங்கவும் செய்தான். அதற்கு பதிலளிப்பது போலவே அந்த காவல் வீரன் சற்று இகழ்ச்சி ததும்பிய குரலில்
“ஏனப்பா அத்தனை பேர் சேர்ந்து உன்னை கயிற்றால் கட்டி குண்டுக்கட்டாக தூக்கி போடும் வரை உன் கைகள் என்ன பழம் பொறுக்கிக்கொண்டா இருந்தன” என்று கேட்டு விட்டு மீண்டும் இரைந்தே நகைக்கவும் சினத்தின் உச்சத்திற்கே சென்று விட்டிருந்த பார்த்தீபன் தன் உடைவாளை உருவியபடி “என்னடா கூறினாய்?” என்று பயங்கரமாக முழங்கிக்கொண்டே பாயவும், “போதும் நிறுத்துங்கள்” என ஒலித்த அரசகேசரிமழவரின் கணீரென்ற காந்தக்குரல் பார்த்தீபனை தன் கட்டுக்குள் கொண்டுவந்து ஸ்தம்பிக்க வைத்திருந்தது.

“சப்பப்பா இவன் சரியான முரடன். இவனை நான் காப்பாற்ற சென்ற சமயத்திலும் இப்படி தான் என்னை தள்ளி விழுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பார்த்தான். இந்த அதிகப்பிரசங்கி வாலிபனை எப்படி தான் இத்தனை முக்கியமான ராஜாங்க காரியத்திற்காக அனுப்பினார்களோ?” என்று சலித்துக்கொண்டான் அந்த காவல் வீரன்.

அந்த காவல் வீரன் இறுதியாக பேசியவற்றில் “இத்தனை முக்கியமான ராஜாங்க காரியத்திற்காக” என்பது மட்டும் மீண்டும் மீண்டும் பார்த்தீபனின் காதில் ஒலித்துக் கொண்டிருந்ததாகையால், தான் ராஜாங்க காரியமாக வந்திருப்பது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று மனதினுள் எண்ணியவன் மிகுந்த குழப்பமுற்று பிரமை பிடித்தது போலவே நின்றானானாலும் அடுத்ததாக அரசகேசரிமழவர் அவனை நோக்கி “நீ தானே பார்த்தீபன், வல்லிபுரம் வெள்ளையங்கிரிக்கு அல்லவா ஓலை கொண்டு செல்கிறாய்” என்று வினவியதும் பார்த்தீபன் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டிருந்தான்.

இதுவரை நேரமும் தான் யாரென்பதும் எதற்காக வந்திருக்கின்றான் என்பதும் யாருக்குமே தெரியாத இரகசியமென்றே எண்ணியிருந்த பார்த்தீபன், தன்னை பற்றிய சகல விடயங்களும் இவர்களுக்கு தெரிந்திருக்கின்றதே என்கின்ற எண்ணத்தினால் உண்டான மிதமிஞ்சிய வியப்பின் பயனாக அது குறித்து அவர்களிடமே கேட்டு விடவேண்டும் என்று எண்ணி “அது எப்படி” என்று ஏதோ வினவமுற்படவும் தன் வலது கையை தூக்கி அவனை தடுத்த அரசகேசரிமழவர், “நீ என்ன கேட்கப்போகிறாய் என்பது எனக்கு நன்கு புரிகிறது. அதற்கான பதிலை நீயே இன்னமும் சற்று நேரத்தில் அறிந்து கொள்வாய் அதுவரை சற்று பொறு. தற்சமயம் நான் சொல்வதை கவனமாக கேள்” என்று கூறிவிட்டு அவனை நோக்கி மெல்ல நகர்ந்து வந்து அவனின் தோள் மீது தன் வலது கரத்தை பதித்து மெதுவாக பேசவும் ஆரம்பித்தார். “நீ செய்துவிட்ட காரியத்தால் தற்சமயம் ஊரெங்கும் உன்னை தேடி தளபதியாரின் ஆட்கள் ஆவேசமாக திரிந்து கொண்டிருக்கிறார்கள். இச்சமயம் நீ இங்கிருந்து வல்லிபுரம் நோக்கி செல்வதென்பது அத்தனை இலகுவான காரியமல்ல அதனால்” என்று இழுக்கவும் பார்த்தீபன் அவரின் கண்களின் மீது தன் கூரிய வேல் பார்வையை செலுத்தியவாறே,
“ஆனால் முன்வைத்த காலை பின் வைப்பது என்னை போன்ற வீரனுக்கும் அத்தனை அழகல்ல” என்றான் கம்பீரமான குரலில். அவனின் மறுமொழியையும் அதில் தொனித்த கம்பீரத்தையும் கவனிக்கத் தவறாத அரசகேசரிமழவர் பார்த்தீபனின் தோளை மெள்ள ஆதரவுடன் தட்டிக்கொடுத்துவிட்டு “இளமையின் வேகம்” என்று கூறி இளநகை ஒன்றையும் தன் உதடுகளில் தவழவிட்டு பின் சிறிது தாமதித்து “நான் உன்னை பின்வாங்க சொல்லவில்லையே. நான் சொல்லும் வரையில் சற்று பொறுத்திரு. இன்றிரவே நீ இங்கிருந்து வல்லிபுரத்தை நோக்கி புறப்படலாம் ஆனால் வேறு மார்க்கமாக செல்ல வேண்டும். உனக்கு துணையாக இந்த ஆலிங்கனும் உன்னுடன் வருவான்” என்று கூறி அந்த காவல் வீரனையும் சுட்டிக்காட்டினார். “ஐயோ இந்த முரடனுடனா” என்று ஏதோ கூற ஆரம்பித்த சிங்களத்து காவல் வீரனாக வேடம் தரித்திருந்த ஆலிங்கனை கண்களாலேயே தடுத்து நிறுத்திய அரசகேசரிமழவர் “இது என் உத்தரவு” என்றார் கடுமையான குரலில். “ஆகட்டும் பிரபு” என்று கூறி பணிந்து நின்றான் ஆலிங்கன். பின் பார்த்தீபனை நோக்கி திரும்பிய அரசகேசரிமழவர் “பார்த்தீபா உனக்கு ஏதாவது ஆட்சேபனை உண்டா?” என்று மெல்லிய குரலில் வினவவும் அவரை நிமிர்ந்து நோக்கிய பார்த்தீபன் “எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, ஆனால் இவன் வாயை கொஞ்சம் அடக்கி வைத்திருப்பது இவனுக்கு நல்லது” என்று கூறியதும் பார்த்தீபனின் அந்த பதிலை கேட்டு மெல்ல நகைத்த அரசகேசரிமழவர் “சரி என்னை பின்தொடர்ந்து வாருங்கள்” என்று கூறி விட்டு முன்னே நடக்கவும் பார்த்தீபனும் ஆலிங்கனும் அவரை பின்தொடர்ந்தும் நடந்தார்கள்.

அந்த சிறு ஆலயத்தை சுற்றி பின்புறமாக சென்றதும் அங்கிருந்த ஒரு சிறு குடிசையை சுட்டிக்காட்டிய அரசகேசரி மழவர் “பார்த்தீபா தற்சமயம் நீ இங்கேயே தங்கியிரு. நள்ளிரவில் இந்த ஆலிங்கன் வந்து உன்னை இங்கிருந்து அழைத்து செல்வான். அது வரை வெளியில் எங்கும் செல்லாதே” என்று கூறிவிட்டு விறுவிறுவென நடந்து அங்கிருந்து விரைந்தார். அவரையே தொடர்ந்து ஆலிங்கனும் சென்றான். அவர்கள் இருவரும் பார்த்தீபனின் கண்களில் இருந்து மறையும் வரை அவர்களையே வைத்த கண் வாங்காமல் நோக்கிக்கொண்டிருந்த பார்த்தீபன், அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும் அரசகேசரிமழவர் சுட்டிக்காட்டியிருந்த அந்த குடிசையினுள் மெல்ல நுழைந்தான். அங்கே இயலவே அந்த குடிசையினுள் இன்னுமொரு மனிதரும் இருப்பதை கண்டு ஒரு கணம் தடுமாறினானாலும் அந்த மனிதரை கண்டதும் அதுவரை அவன் விடையறியாத பல வினாக்களுக்கான விடைகளும் அச்சமயத்தில் அவனுக்கு புலப்பட ஆரம்பித்திருந்தது.

சிங்கை நகரத்து சிம்மாசனம் அத்தியாயம் பத்து தொடரும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments