உன் இன்மையால்
உன் மீது உண்டான
அலாதி நேசத்தினை,
எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்…!
எதேச்சையாக
உன்னை காண நேரிட்டாலும்,
அவைகளின் சுமையை
பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை.
இவ்வாழ்வு…!
என்னிலிருந்து உன்னை
அடித்திழுத்துக் கொண்டு சென்ற உண்மை, அப்படியே இருந்து விடட்டும்.
உன் மீளுதலை வேண்டிவிட்டு,
மீண்டும் நான்
நிதானமிழந்து போகும் துயரினை,
காணும் துர்ப்பாக்கியம்
உனக்கு வேண்டாம்.
இங்கே!
உன் இல்லாமை கூட,
உன்னால் சூழப்பட்டதாகவே கிடக்கிறது. வதைச்சிறை தான் எனினும்,
உன் நியாபகங்களால்
தூசி படிந்து கிடக்கிறதல்லவா?
அதற்காகவே,
அதனுள் வாழப் பிடிக்கிறது.
அணு அணுவாய்
என் உலகை செதுக்கிய நீயே!
இன்று என்னிலிருந்து,
அற்றுப் போய் விட்டாய்.
சித்ரவதைகளின்
சிறு உலகில்
விசும்பிக் கொண்டிருப்பவன் தான்…! மரணெமெனும் அசுரத்தை
நுகர நினைக்கிறான்.
ப்ச்ச்…!
வேதனைகளின்
தாகம் தணிக்கப்படுவது,
அங்கே தான் போலும்.
என்னை நகர்த்த
நான் படும்பாட்டினை,
எங்கு சென்றும்
பிதற்றி வைக்கத் தெரியவில்லை.
உன்னால் ஆன,
ரணமான அழுத்தங்களுக்கும்…!
நீ தந்த,
ரசிக்கும்படியான அழுத்தங்களுக்கும்…! இடைப்பட்ட காலத்திற்குள் மட்டும் தான்,
என் ஆன்மா
சுழன்று கொண்டிருக்கிறது.
அது தவிர்த்த
ஒரு உலகும் இல்லை,
அங்கே…!
உன்னைத் தவிர்த்த
பிற மனிதர்களும் எனக்கில்லை,
உறவாக உறவாட.