சுயநலம்

0
3839

தான் மட்டும், 
தனக்கானவை மட்டும்,
என்ற அகலமான சுயநலத்திற்குள்
அடங்கி இருக்கிறது
மிக மெல்லிய ஓர் இதயத்தின்
கனத்த பேரன்பொன்று

தன்னை தாண்டிய ஒருவரிடம், 
தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்
இருந்து விடக் கூடாது என்பதில்… எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப் புன்னகையாயினும் சரியே.

அப்போது மனதில் சூழும்
கோபங்கள் கூட, 
ஆழமான அன்பின்
வெளிப்பாடாய் தான் நிகழ்கிறது
என்பதைத் தவிர, 
வேறெதையும் புரிந்து கொள்ள
முற்படல் என்பதெல்லாம், 
வெறும் வெறுமைகளே. 
அதில் அர்த்தப்பாடு ஏதும் இல்லை. 

எத்துனைத் தான்
ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தாலும், அதை விட ஆழமான
சுயநலத்தின் வெளிப்பாடாய்
மிளிரும் ஒவ்வோர் உணர்வும், அசாத்தியமான நேசத்தின்
கச்சிதமான நிலைப்பாடு தான்.

நேசித்திற்குரியவரை
தக்க வைத்துக் கொள்ள
முயற்சிக்கும் மனோ நிலை
என்பதைக் காட்டிலும்…!
தனக்கானதாய் மட்டும்
நிரம்பிக்கிடக்க வேண்டும் என்ற அலாதியான ஏக்கத்தின்
பரிதாப மனோ நிலை என்றே
இதை ஏற்க வேண்டி இருக்கிறது. 

சோகம், மகிழ்ச்சி,
திட்டல், அழுதல்,
மெளனம், பரவசம்,
என எதையெல்லாம் நேசத்திற்குள் இயல்பாய் அனுபவிக்க
அனுமதித்து தீர வேண்டுமோ…!
அது போன்ற ஒன்றாய் மட்டும் இச்சுயநலத்தினையும்,
அலட்டிக் கொள்ளாமல்
அனுமதிப்பதே
அன்பில் அசௌகரியத்தை தடுக்கும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments