தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும்
ஒரு வயலின் சிற்பம் கண்டேன்
தனிமையின் அகாலத்தில்
என்னுடன் நான் பேசிக் கொள்வது போல்
எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல்
என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல்
என் தோளில் நானே விழுந்து உடைந்து அழுவது போல்
எனக்கு நானே முடி திருத்திக்கொள்வது போல்
சர்க்கரையில்லாத தேனீரை என்னுடன் நானே அருந்துவது போல்
எனக்காக நானே ஒரு நூடுல்ஸ்
சமைப்பது போல்
என் செருப்பை நானே பழுது பார்ப்பது போல்
அறுந்த என் பொத்தான்களை நானே தைத்துக் கொள்வது போல்
குளியலறையில் தவறி விழும்போது
எனக்கு நானே கைகொடுத்து தூக்குவது போல்
என் அறையை நானே சுத்தம் செய்வது போல்
என் காயங்களை எனக்கு நானே காண்பித்துக் கொள்வது போல்
எனக்கு நானே எழுதிய கடிதத்தை நானே படித்து கண்ணீர்மல்க நெஞ்சோடு அணைத்துக் கொள்வது போல்
என் கண்ணீரை நானே துடைத்துக் கொள்வது போல்
எனக்கு நானே அன்பு செய்வது போல்
என்னை நானே வெறுப்பது போல்
என்னை நானே ஆறத்தழுவி தேற்றுவதுபோல்
ஒருகட்டத்தில்
என்னை நானே கைவிடுவது போல்
அவ்வளவு எளிதல்ல
எனக்கு நானே ஒரு இரங்கற்பா இசைத்துக் கொள்வது..!
Very nice
மனுஷ்ய புத்திரனின் கவிதை சாயலை உங்கள் வரிகளில் காண முடிகிறது . தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி சகோ! மிக்க மகிழ்ச்சி:)