முடிவறியா வாழ்க்கைப் புத்தகமதை
ஆவலாகவும்
சில சமயம் சங்கடத்தோடும்
புரட்டிக் கொண்டிருக்கிறேன்
யுகங்கள் சேர்ந்து பரிசளித்த
நிறமில்லா நிஜமாக வந்து போகிறது
குளிர்ச்சோலை பிரசவித்த தென்றலாக
சிலிர்க்க வைத்துச் செல்கிறது
நட்சத்திரமில்லா பால் வீதியென
எழுத்துகளற்று வெறுமையாகத் தூங்குகிறது
குருதி சிந்தாமல் குத்திக் கிழிக்கும்
போர்க்களமாய் இரணகளப்படுத்துகிறது
உச்சம் தொட ஆருடம் சொன்னது
பொய்மையென கேலியாய்ச் சிரிக்கிறது
இடியென விழும் இதயம்
தாங்கா செய்திகளையும் சுமக்கிறது
எதிர்பார்ப்பிலும் ஏமாற்றம் ஊடுருவி
தூண்டில் மீனாய் சிக்க வைக்கிறது
நினைக்காத ஒன்று எட்டாம் அதிசயமாய்
ஒரு அத்தியாயத்தில் ஒளிந்து கிடக்கிறது
ஒவ்வொரு பக்கமும் புரியாத புதிராகத் தெரிகிறது
காத்திருக்கிறேன் நாளைய பக்கத்தின் சுவாரஸ்யம் அறிய…