பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் உணவு வகை ஒன்றாகும். எல்லோராலும் ஏதோ ஒன்றை பிரியாணி என்ற பெயரில் செய்ய முடியும். ஆனால் சுவை நிறைந்த பிரியாணியை குறிப்பிட்ட சிலராலேயே செய்யமுடியும். நீங்கள் ஒரு பிரியாணிப் பிரியரா? அப்படியானால் இது உங்களுக்கான பதிவு!
தேவையான பொருட்கள்:
1. அரிசி –
நல்ல ஒரு பிரியாணிக்கு நாம் பயன்படுத்தும் அரிசி மிகவும் முக்கியம். பொவாக சீராக சம்பா அரிசி அல்லது பொன்னி பச்சை அரிசி இரண்டும் மிக சிறப்பு. பாசுமதி அரிசி இரண்டாம் இடம்தான். மேலும் அரிசி புதியதாக இல்லாமல் கொஞ்சம் பழைய அரிசியாக இருப்பின் பிரியாணி கட்டாயம் மணக்கும்.
அரிசி புதுசு பழசு எப்படி கண்டு பிடிப்பது ? புதிய அரிசி என்றால் பார்வைக்கு நல்ல வெண்ணிறத்தில் இருக்கும் அரிசியை முகர்ந்து பார்த்தால் மணமிருக்காது. ஆனால் பழைய அரிசி என்றால் சற்று பழுப்பாக இருக்கும் அரிசியை முகர்ந்து பார்த்தால் சமைத்த பின்பும் நல்ல மணம் இருக்கும்.
2. கறி- இளம் ஆட்டுக்கறி / பண்ணை கோழி / நாட்டுக்கோழி
இளம் ஆட்டுக்கறி என்றால் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும். 10 கிலோ எடை இருந்தால் நல்லது இ முத்தல் ஆடு என்றால் கறி வேகுவதற்கு மிகவும் நேரம் எடுக்கும். கறி வேகவில்லை என்றால் பிரியாணி பழுதாகி விடும். எதிர்பார்த்தளவு சுவையாக அமையாது.
பண்ணை கோழி பெரிய அளவில் கூடிய நிறை இல்லாமல் 1.5 கிலோ எடை இருப்பின் நல்லது . இல்லையென்றால் கறி சக்கையாக இருக்கும் மசாலா பொருட்கள் உள் இறங்காது.
நாட்டு கோழியில் சமைத்தால் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் மிகுந்த வயதான கோழியாக இல்லாமல் எடையும் அதிகம் இல்லாமல் இருந்தால் நல்லது.
3. சமைக்கும் சோற்று குக்கர் அல்லது பாத்திரம்
அதிகம் 1.5 முபு வரை குக்கரில் சமைக்கலாம் ( பெரிய குக்கர் உள்ளது ) ஆனாலும் பாத்திரத்தில் சமைக்கும் பிரியாணி போல் குக்கர் பிரியாணி அவ்வளவு எளிதல்ல அரிசி குலைய வாய்ப்புண்டு மேலும் கறியும் உடைய வாய்ப்பு உண்டு.
பாத்திரம் என்றால் நல்ல அகண்ற பாத்திரம் இருந்தால் சரி . பொதுவாக மூடியுடன் கூடிய பாத்திரம் அதாவது பிரியாணி சமைத்தவுடன் தம் போடுவதற்கு சரியாக இருக்குமாறு பார்த்து கொள்ளுதல் நல்லது.
4. சமைக்கும் முறை – விறகு அடுப்பு அல்லது காஸ் அடுப்பு
வீட்டில் குறைவான அளவு சமைப்பதாயின் காஸ் அடுப்பு ஓகே. ஆனால் பெரிய அளவில் செய்தால் விறகு அடுப்பில் செய்தால் தான் நல்லது. அதுவும் காய்த்த புளிய விறகு என்றால் அருமை. இந்த விறகு நின்று மெதுவாக எரியும். புகையும் அதிகம் வராது, சூடும் மிதமாக இருக்கும். எறிந்த விறகுக் கரி கடைசியாக தம் கொடுத்து முடிப்பதற்கு உபயோகப்படும்.
5. கரம் மசாலா பொருட்கள் – பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை
இவை அனைத்தையும் பொடிசெய்யாமல் முழுவதுமாக உபயோகம் செய்வது நல்லது. பொடித்து போட்டால் பிரியாணியில் கரம் மசாலாவில் வாசனை அதிகமாகி பிரியாணியின் மணத்தை கெடுத்துவிடும்
6. கடலை எண்ணெய் மற்றும் சுத்தமான நெய்
பிரியாணிக்கு மணம் இந்த கடலை எண்ணெய் மேலும் நல்ல நெய். இது பிரியாணியின் சுவையை அதிகமாக்கி மேலும் மேலும் மெருகேற்றும்.
7. சீவிய வெங்காயம் மற்றும் முழு பச்சை மிளகாய்
பிரியாணி சமைக்கும் போது வெங்காயத்துடன் முழு காம்பு கிள்ளிய பச்சை மிளகாய் பயன்படுத்தவும். மிளகாயை கீறியோ அல்லது நறுக்கியோ போடா கூடாது.
வெங்காயம் அதிக பொன்னிறமாக வதக்க கூடாது.
( அலங்காரத்துக்கு தனியாக வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து கொள்ளலாம் )
8. இஞ்சி பூண்டு விழுது
அன்றைய நாட்களில் கிராம பூண்டுகள் அதாவது பூண்டின் பல் சிறியதாக இருக்கும் அரைத்தால் மணமாக இருக்கும் ஆனால் இன்று ஆபீஸ் பூண்டு அதாவது ஹய்ப்ரீட் பூண்டு தான் கிடைக்கிறது வேலை எளிதும்கூட. கட்டாயம் இஞ்சி பூண்டு தனித்தனியாக பிரித்து சம பங்கு என பிரியாணிக்கு அரைத்து கொள்ள வேண்டும்.
9. மிளாகாய் தூள்
எந்த கலப்படம் இல்லாத தனி மிளகாய் தூள் நல்லது. பொதுவாக கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூளும் சேர்ப்பதில்லை ஆதலின் மிளகாய் தூள் தனியாக இருக்க வேண்டும். வேறு எந்த கலப்பும் இருக்கக் கூடாது.
10. தக்காளி – நாட்டு தக்காளி
நம் நாட்டு தக்காளி பிரியாணிக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக தக்காளியை அரைத்து பயன்படுத்துவது சிறந்தது அல்லது நீங்கள் நன்றாக நறுக்கியும் உபயோகம் செய்யலாம். ஆனால் நன்றாக பழுத்த தக்காளியாக இருக்க வேண்டும்.
11. கொத்தமல்லி மற்றும் புதினா இலை
நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலை பிரியாணிக்கு நல்ல மணம் தரும். இதில் இன்னொரு சூட்சமம் உள்ளது அதாவது இதை இரண்டு பங்காக பிரித்து கொள்ளவும் . ஒருபங்கை வெங்காயம் இஞ்சிபூண்டு விழுது வதக்கியபின் பாதியும் பின் தக்காளி இ கறியுடன் சேர்த்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கி நீர் சேர்த்தபின் மற்றைய பாதியும் சேர்க்க வேண்டும். ஏனெனில் முதலில் சேர்ப்பது வேகும் கறிக்கு சுவையும் மணமூட்டும் . பின் சேர்க்கும் பகுதி சமைக்கப்படும் அரிசிக்கு மணம் ஊட்டும்.
12. எலுமிச்சை சாறு மற்றும் தயிர்
என் பாட்டி எப்பொழுது பிரியாணி செய்தாலும் கொஞ்சம் தயிர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சை பழம் சாறு சேர்த்து பிரியாணி செய்வார்கள் இ கறி வேகவைக்கும் போது நன்றாக வேகும் . பிரியாணியும் மணமாக இருக்கும்.
அவ்வளவுதாங்க சமைத்து பார்த்து குறை நிறைகளை சொல்லுங்கள். உங்கள் வீட்டிலும் சுவை நிறைந்த பிரியாணி தயார் .
வாசித்தமைக்கு நன்றி !!!!! தங்கள் கருத்துக்களை பகிரவும்
Source :வலைத்தள பகிர்வு