ஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள் நிறுவனம். 2006 ம் ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கூகுளின் ஜி சூட் என்பது கூகுளின் பெரும்பாலான தயாரிப்புகளான ஜி மெயில், கேலண்டர், கூகுள் டிரைவ், கூகுள் டாக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது வியாபார ரீதியாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இதை பயன்படுத்திய பயனர்கள் இதில் பாஸ்வேர்ட் சம்பந்தமாக புகார் கூறியுள்ளனர்.
அதாவது இணையதளங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்தும்போது அது மற்றவர்கள் பார்க்க முடியாதபடி மறைக்கப்பட்டு விடும். ஆனால் ஜி சூட்டை பயன்படுத்தும் பயனர்களின் பாஸ்வேர்டுகள் பிறர் பார்க்கும்படி இருந்தது என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த குறைபாடு பலரது கணக்குகளை ஹேக் செய்ய ஹேக்கர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடும். இது ஒருபுறம் என்றால் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கூகுளின் அமைப்புகளில் சேமிக்கப் பட்டுள்ளது என்ற குற்றசாட்டும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தங்களது பயனர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை மாற்றுவதை உறுதி செய்ய கூகுள் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது. இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜி சூட் பயனர்களின் பாஸ்வேர்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது குறித்து அறிவிப்பு வெளியிடப் பட்டு இருந்ததாகவும் இது ஜி சூட் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இல்லை என்றும் குறிப்பாக இலவச கணக்குகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றும் கூகுள் கூறியுள்ளது. இருந்தாலும் வர்த்தக பயன்பாட்டுக்கு பாதிப்பு உள்ளது என்றும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட பயனர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்றி விடுமாறு கூகுள் அறிவுறுத்தியுள்ளது.\
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்