தப்புத்தப்பாய் ஒரு தப்பு!

0
1104

***********

” நீங்க என்ன வேலை செய்றீங்க” என்று நிரஞ்சனிடம் கேட்டால், ” ஐ அம் எ ப்ரொஃபெஷனலிஸ்ட்” என்று சிரித்தபடி சொல்லுவான்!
தொழில்முறை வல்லுநன்.. அப்படித்தான் அவன் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளுவான்!
உடனே IT கம்பனி, சொஃப்ட்வெயார் எஞ்சினியர், டை, சப்பாத்து போட்டு கண்டீனில் நாலைந்து பெண்கள் புடைசூழ ஒரு கையில் கோக் டின்னும் மறு கையில் பர்கரும் வைத்துக் கொண்டு ” யூ நோ.. ஐ டோண்ட் நோ டமில்” என்று நுனி நாக்கில் பீட்டர் விடுபவனை கற்பனை செய்து விடாதீர்கள்!

நிரஞ்சன் ஒரு திருடன்!

அவனது முறைகள் வித்தியாசமானவை! பூட்டுகளை அடித்து உடைத்து, நெம்பி நூடுல்ஸாக்குவது அவனுக்கு பிடிக்காது! கேட்டால் “பூட்டும் பொண்ணும் ஒண்ணு தோழர்! பலாத்காரப் படுத்தாதே” என்பான்!
எந்த வகைப் பூட்டாயிருந்தாலும் அவன் கை பட்டதும் அவனை காதலித்துவிடும்!
பூட்டை தொட்டு தடவி , அதன் உள் விவகாரங்களுடன் உறவாடி, அந்தரங்கங்களை அக்குவேறு ஆணி வேறாக அலசி…..
சற்றேறக்குறைய ஓரிரு மணித்தியாலங்களிலேயே எந்தப் பூட்டும் அவனிடம் கற்பிழந்து விடும்!

அதற்கென தனிப்பட்ட உபகரணங்கள் அவனிடம் உள்ளன!
சிறிய அரம், சிறிய உளி, சிறிய சுத்தியல், சிறிய ட்ரில்லும் இயந்திரம்.. இப்படி பல சிறிய இத்யாதிகள் அவனது கைப்பெட்டியில் நிரம்பியிருக்கும்!
அவற்றை வைத்து எப்படிப்பட்ட பூட்டுக்கும் மாற்றுச்சாவி தயாரிக்க அவனால் முடியும்!

உதாரணத்துக்கு, இரவு கடைய சாத்தி விட்டுச் சென்ற அண்ணாச்சி, மறுநாள் வழமைபோல வந்து கடைய திறந்து, அப்பனே வினாயகா என்று கிழக்கே பார்த்து கும்பிட்டு விட்டு, கல்லாவை திறந்தால் துடைத்து வழித்து காலியாக இருக்கும்!
எந்த வன்முறையும் நடந்திருக்காது! கல்லாவில் கை வைக்கும் வரைக்கும் திருட்டு போன விஷயமே அண்ணாச்சிக்கு தெரிந்திருக்காது!

அதுதான் நிரஞ்சனின் திறமை!
மேலும் இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பாக அவனுக்கிருந்த அறிவும் சிலவேளைகளில் கைகொடுக்கும், இந்தக் கதையில் நிகழப் போவதைப் போல!

யாருக்கும் நிரஞ்சன் மீது இதுவரை சந்தேகம் வந்ததில்லை!

******

கதையின் ஏழாம் பந்தியிலேயே நிரஞ்சனுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது! எவ்வளவு நாளைக்குத் தான் இப்படி சில்லறை திருட்டுகளாகவே செய்து கொண்டிருப்பது!?
பெரிசா ஏதும் செய்து செட்டில் ஆகி விடவேண்டும் என முடிவெடுத்தான்!

மூன்று மாதங்களாக சுற்றித் திரிந்து உளவியதில், நகரின் ஒதுக்குப் புறமாயிருந்த அந்த நிதி நிறுவனம் அவன் கண்ணை உறுத்தியது!

சற்று பெரியளவிலான, மாதாந்தம் லட்சக்கணக்கில் பணம் புரளும் நிறுவனம் அது!
தற்போது தான் மெல்ல டெவலப்படைந்து வரும் பகுதியில் இருப்பதால், முன்னிரவுப் பொழுதுகளிலேயே ஊரடங்கி விடும்!
ஒரேயொரு இரவுக்காவல்காரன் !
வலிமையான , விதவிதமான நவீன பூட்டுகளையே தன் பிரதான பாதுகாப்பு அமைப்பாக கொண்டிருந்தது அந்த நிதி நிறுவனம்!

 

இவ்வளவும் ஆரம்பகட்ட விசாரணகளின் போது நிரஞ்சனுக்கு அறியக் கிடைத்தன!

உபரியாக எதற்கும் இருக்கட்டும் என நிறுவனத்தின் அதிகாரிகள் சிலரின் வீடு இருக்குமிடம், அவர்களின் கார் எண் போன்றவற்றையும் சேகரித்துக் கொண்டான்!

நிறுவனத்தில் கணக்கு தொடங்குபவனைப் போல இரண்டு மூன்று முறை உள்ளே நுழைந்து பார்த்ததில் அந்த இடத்தின் மொத்த பூட்டு அமைப்பை கிரகித்துக் கொண்டான்.
வெளியே ஒரு மகா கதவு, அதற்கு மூன்று மகா மகா பூட்டுகள், அதை தாண்டினால் கண்ணாடிக் கதவு, அதில் உட்பொதிந்திருக்கும் இண்டர்லொக் சிஸ்டம்… இவற்றை தாண்டினால் உள்ளே நுழைந்து விடலாம்!
மொத்தத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒருவித அலட்சியம் தெரிந்தது!!

இனி அவனுக்கு வேண்டியது பணம் வைத்திருக்கும் வோல்ட்டின் ( vault) அமைவிடமும், அதன் பாதுகாப்பு அமைப்பும், செக்யூரிட்டி கமராக்கள் மற்றும் ஏதும் அலார்ம் இருந்தால் அதன் விவரம்.. அவ்வளவே!!

******

அவனே எதிர்பாராதவகையில் ஒருநாள் அந்த சந்தர்ப்பம் அமைந்தது!
மாலை ஆறு மணி போல ரோட்டோரக் கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை சட்டென அவனைக் கடந்து சென்ற அந்த ஒருவித ரோஸ்நிற கார் கவர்ந்தது!
அட.. இது அந்த நிறுவன மனேஜரின் காரல்லவா.. இந்த நேரத்தில் எங்க போகுது பயபுள்ள என்று நினைத்தவன், சட்டென தன் பைக்கிலேறி அவரை பின் தொடர்ந்தான்!
அதிஷ்டமும் அவன் கூடவே தொடர்ந்தது!!

அதன் பின் நடந்த சம்பவங்களை விவரிக்க முற்பட்டால் தணிக்கை பண்ணப்படலாம் என்பதால், அந்த துரத்தலின் முடிவுக்கு ஸ்ட்ரெயிட்டாக வரலாம்!
அது அந்த மனேஜரின் வெளியுலகிற்குத் தெரியாத வீடு!
ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்தது!
நிரஞ்சன் சிறிது காலம் கண்காணித்ததில் கிழமையில் மூன்று நான்கு நாட்கள் ரூட்டீனாக மாலை வந்து இரவு பத்துமணியளவில் திரும்ப வீடு செல்கிறார் என்றும் தெரிந்தது.

நிரஞ்சன் மனதில் திட்டமொன்று உருவாகத் தொடங்கியது!

தனியே வரும் மனேஜரை கடத்தி ப்ளாக் மெயில் செய்து, அல்லது கத்திமுனையில் மிரட்டி…
ஹோல்ட் ஒன்..!
இந்தக் கதையில் எந்த இடத்திலும் கத்தியையோ, ரத்தத்தையோ, வன்முறையையோ நீங்கள் சந்திக்கப்போவதில்லை!
ஆகவே, கூடக்குறைய யோசிக்காமல் கதையை ஃபாலோ பண்ணுங்கள்!

குறித்த ஒரு நாளில் அவரைப் பின் தொடர்ந்த நிரஞ்சன், அவர் காரை நிறுத்தி உள்ளே போனதும், அந்தக் காரின் இரண்டு டயர்களை நாலைந்து தரம் தான் கொண்டு வந்திருந்த ஆணியால் குத்தி பஞ்சராக்கி விட்டான்!

மேட்டர் முடிந்து இரவு பதினொரு மணியளவில் வெளியே வந்த மனேஜர் காரை ஸ்டார்ட் பண்ணி, அது தாறுமாறாக ஓடி, நின்றபின் காரின் பஞ்சரைப் பார்த்து ஷாக்காகி, இந்த இரவில் டயருக்கு வைத்தியம் பார்க்க எங்கே போவது, இரவு வீடு திரும்பாவிடில் ஏற்கனவே டவுட்டுல இருக்கிற மனைவியை எப்படி சமாளிப்பது என்று அவர் குழம்பியபடி நின்றபோது, அந்த வழியே “தற்செயலாக” வந்த நிரஞ்சனைக் கண்டார்!

அதன் பின் அன்றிரவு முழுதும் அங்குமிங்கும் ஓடியாடி காரை சரி செய்து, வீடு கொண்டு சேர்க்குமட்டும் நிரஞ்சன் அவரை விட்டு அகலவில்லை!
வீடு சேர்ந்ததும் கண்ணீர்மல்கி கை கூப்பி வணங்கி நிரஞ்சனை அனுப்பி வைத்தார்!

அந்த அறிமுகத்தின் பின் நிரஞ்சனால் நிறுவனத்தின் உள்ளே சற்று சுதந்திரமாக ஊடாட முடிந்தது!
இரண்டொரு தடவை மனேஜரின் அறைக்குள்ளும் சென்று அவரிடம் பேச்சுக்கொடுத்து பார்த்ததிலிருந்து பணம் வைக்கும் வோல்ட் மனேஜரின் அறைக்குளிருக்கும் ஒரு சிறிய அறைக்குள் தான் இருக்கிறதென்பதும் , அலார்ம் பைபாஸ் சுவிட்ச் மற்றும் செக்யூரிட்டி கெமராவை இயக்கும் சுவிட்ச் என்பன அவரின் மேசையை அடுத்துள்ள சிறிய சுவிட்ச் போர்ட்டில் இருக்கிறதென்பதையும் கண்டு கொண்டான்!
அத்துடன் செக்யூரிட்டி கமராவின் பார்வை வீச்சிலிருந்து தப்பி மனேஜரின் அறைக்குள் செல்ல ஒரு பாதையையும் வகுத்துக் கொண்டான்!

******

இனி பெரியளவிலான ஒரு திருட்டை செய்ய தகுந்த நாளை எதிர்பார்த்திருந்த நிரஞ்சனை அவனது அதிஷ்டமோ துரதிஷ்டமோ, அதிக நாட்களுக்கு காத்திருக்க விடவில்லை!

அன்று நிரஞ்சனுக்கு அந்த முக்கிய செய்தி கிடைத்தது!

அந்த நிறுவனத்தில் திறந்திருந்த ஒரு பாலிசிக்கு பணம் கட்டுபவனைப் போல அங்கு சென்ற நிரஞ்சன், அலுவலகத்தில் எல்லோரும் ஒருவித பரபரப்புடனும் மகிழச்சியுடனும் இருப்பதைக் கவனித்தான்!
அங்கு கவுண்டரில் இருந்த பெண்ணிடம் வினவியதில், அந்த நிதி நிறுவனம் மூலமாக இன்னொரு பெரிய தனியார் கம்பனி ஒரு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதற்கான பணம் 15 கோடி ரூபாய்கள் வரும் அக்டோபர் முதலாம் திகதி hot cash ஆக வழங்கப் படவுள்ளதாகவும், இன்று தான் அந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதாகவும் நிரஞ்சனுக்கு தெரியவந்தது

வழமையாக அக்டோபர் முதலாம் திகதி அந்த நிறுவனத்தின் ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்படுவதும், அதற்கு முதல்நாள் எல்லா ஊழியர்களும் இரவு முழுதும் நிறுவனத்திலேயே நின்று அதற்கான ஆயத்தங்களை புரிவதும்,
அன்றும் கூட பாதுகாப்புக்காக வெளிப்பூட்டுகள யாவும் பூட்டப்பட்டிருக்கும் என்பதும் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விடயமாக இருந்தது!

நிரஞ்சனுக்குள் சரியான திட்டமொன்று உருவாகத் தொடங்கியது!

“அக்டோபர் மாதத்துக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கு! அதுக்குள்ள எல்லாப் பூட்டுகளுக்கும் டூப்ளிக்கேட அடிச்சிடலாம்.
செக்யூரிட்டிய கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கும். அத பாத்துக் கொள்ளலாம்!
அக்டோபர் 1ம் திகதி திங்கள், அதற்கு முதல் நாள் செப்டம்பர் 31 ம் திகதி ஞாயிறு – அன்று எல்லா ஊழியர்களும் நிறுவனத்தில் இருப்பாங்க, அன்று ஒன்றும் செய்ய ஏலாது!
ஞாயிறு விடுமுறை என்றதால பணம் அதற்கு முதல்நாள் 30ம் திகதி சனிக்கிழமையே நிறுவனத்தில் வைக்கப் பட்டு விடும்!
சோ, சனிக்கிழமை இரவு தான் முகூர்த்தம்”

ஒரு கிழமை செக்யூரிட்டியை வாட்ச் பண்ணியதில், அதிகாலை ஒருமணியில் இருந்து மூன்று மணிவரை பக்கத்திலிருக்கும் ஒருவீட்டுக்கு சென்று வருவது தெரிந்தது!
இரண்டு மணித்தியாலம் என்பது நிரஞ்சனுக்கு வெள்ளம்!

ஒவ்வொரு நாளும் செக்யூரிட்டி அகன்றவுடன், ஒவ்வொரு பூட்டாக தன் உபகரணங்களால் நிரடி அவற்றின் உள்சமாச்சாரங்களை உளவறிந்து, தன் அறைக்குச் சென்று அவற்றை பிரதியெடுத்து, பின் மீண்டும் மறுநாள் இரவு சென்று, அவற்றில் செய்ய வேண்டிய நுண்ணிய மாற்றங்களை செய்து….

சரியாக ஆறு கிழமைகளில் அந்த நிறுவனத்தின் வெளிப்பூட்டிலிருந்து, வோல்ட் லொக் வரைக்கும் அவன் சொன்னால் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான்!

இன்னும் இரண்டு கிழமைகள் மீதியிருந்தன!
புலி பாய்வதற்கு பதுங்கியிருந்தது!

*********

குறித்த அந்த நாளும் வந்தது!

செப்டம்பர் 30!

அதிகாலை 2.30!

எல்லா வெளிப்பூட்டுகளும் நிரஞ்சனின் ஆணையை சிரமேற்கொண்டு வாயைப் பிளந்தன!

கதவுகளைத் திறந்து உள்ளே சென்ற நிரஞ்சன் அதிர்ந்து நின்றான்!

அதற்கு அடுத்த நாள், பொலிஸ் லொக்கப் அறையில் மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்த படி ” இவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டு செய்த இந்த திருட்டு எப்படி பிழைத்தது!?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்!

******
உங்களுக்காவது தெரிகிறதா திட்டத்தில் எங்கு பிழை நடந்ததென்று!??

( நடந்த பிழையை கதை வாசித்துக் கொண்டிருக்கும் போதே கண்டு பிடித்த திறமைசாலிகள் ஸ்கொட்லாண்ட் யார்ட்டுக்கு சிபாரிசு செய்யப் படுகிறார்கள்)..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments