தயவுசெய்து வாசிக்காதீங்க…

6
1427
WhatsApp Image 2020-05-26 at 22.26.17

இந்தத் தொடரில் வரும் யாவும் கற்பனையே. மனம் பலவீனமானவர்கள் தயவுசெய்து இந்தப் படைப்பை வாசிக்க வேண்டாம். மீறி வாசித்து ஏற்படும் மனவுளைச்சல்களுக்கு இப்படைப்பை எழுதியவரோ, வெளியீட்டாளர்களோ பொறுப்பானவர்கள் அல்ல……


இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது கீதா வாசிக்க ஆரம்பித்த திகில் புத்தகம். விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் செல்லும் கீதா, எட்டு மணிநேர பயணத்தை எப்படியோ கடத்திவிட வேண்டும் என்று தன் நண்பி ஸ்வேதாவிடம் வாங்கி வந்த புத்தகம் தான் அது. பஸ் புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கிறது. சரி புத்தகத்தை புரட்டுவோம் என தொடங்கியவள் ஆரம்பத்திலேயே அதிர்ந்து போனாள்.

உலக மகா பயந்தாங்கோலி அவள் , ஏதோ தைரியசாலி போல் “இதில் என்ன தான் இருக்க போகிறது ” என்று துணிவை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்தாள்.

“ பேய்கள்…. உங்கள் அருகேயே இருக்கும். யாரேனும் இறந்தவரை மனதில் நிறுத்தி உங்கள் பக்கத்தில் திரும்பி பாருங்கள். அவர் அங்கு அமர்ந்திருப்பார்……”
தொப் என்று புத்தகத்தை மூடினாள். நெற்றியில் வியர்வை வழிய , எச்சிலை வினாடிக்கு பல முறை விழுங்கினாள். இதயம் துடிப்பது காதுகளில் கேட்டது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஏதோ தெய்வப்பாடலை வாயில் சொல்லிக்கொண்டு பக்கத்தில் மெது மெதுவாக திரும்பினாள்.
பெரும் மூச்சு
“அப்பாடா…. எதுவும் இல்ல”
ஆனால் பக்கத்தில் துணைக்கும் யாருமில்லை. பின் சீட் வேறு. எப்படி தனியா போக போறமோ…
‘யாராச்சும் ஏறி பின்னாடி வந்து இருந்தாங்கன்னா நல்லா இருக்கும் ‘ என்ற அவளது எதிர்பார்ப்பு நிறைவேறாமலே போய்விட்டது. பஸ் புறப்பட்டது.
முன்னே எட்டிப் பார்த்தாள் . எண்ணி பன்னிரண்டு பேர் ஆங்காங்கே இருந்தார்கள்.

“ இப்ப முன்னாடி போனா பயந்தாங்கோலினு தானே நினைப்பாங்க…..
வேண்டாம் கீதா இதிலேயே உட்காரு ”
இதில் தன்மான பிரச்சினை வேறு அவளுக்கு.

இரவு நேரம். ஜன்னல் ஓரம். ஜில்லென்ற காற்று. பஸ் மிகவும் வேகமாக வளியைக் கிழித்துக் கொண்டு முன்னேறுகிறது. கீதாவின் பயத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் செயற்பாட்டை க்ளீனர் செய்தார்.ஒரு
பேய்ப் படம் ஒளிபரப்பப்படுகிறது. ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு குளிர்க்காய்ச்சலே வந்து விடும் போல…

ஹெட்போனை எடுத்து காதில் மாட்டிக்கொண்டவள் பாடல்களை கேட்டு தன் மன எண்ணங்களை திசை திருப்பினாள். கொஞ்ச நேரத்தில் கண்ணயர்ந்து தூக்கத்தில் வியாபித்தாள்.

சில மணிநேரத்தின் பின்
திடீர் ப்றேக் ….
கார் ஒன்று குறுக்கே போனதால் டிரைவர் போட்ட திடீர் தடுப்பு அது. பஸ்ஸில் உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் அடித்து எழுப்பியது போல் திடுக்கிட்டு எழுந்தனர். சிலர் டிரைவரை திட்டவும் செய்தார்கள். சில நிமிடங்களின் பின் மயான அமைதி. திரைப்படமும் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ் “குய்” என்று முன்னேறும் சத்தம் மட்டும் கேட்கிறது.

ப்ரேக்கோடு எழுந்த கீதாவுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு, மடியில் இருந்த அந்தப் புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கம் காற்றிற்கு தன் பாட்டிலேயே திறந்து நின்றது. அப் பக்கத்தை தன்னை அறியாமலேயே வாசிக்க ஆரம்பித்தாள்.

“ இறந்து போன ஒருவர், முன்பு உங்கள் பொருள் ஒன்றின் மீது ஆசை கொண்டிருந்தால் அதை வாங்கிவிட உங்களை ஆவியாக தொடர்வர்”
ஐயோ! வேண்டாம் சாமி….
புத்தகத்தை மூடி தன் பயணப்பையுள் போட்டு விட்டு முன்னே சென்று ஒரு அம்மாவின் அருகே அமர்ந்து கொண்டாள்.

இப்போது நேரம் இரவு மூன்றரை மணி. பஸ் கீதா இறங்க வேண்டிய இடத்தை அடைந்தது. மீண்டும் யுனிவர்சிட்டி வாழ்கை, ட்ராகிங் என்ற விரக்தி ஒருபுறம் இதில் பேய்ப் பயம் வேறு. பயத்தை போக்க சினிமா பாடல்களை விசில் அடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக ரூமை வந்தடைந்தாள்.

அது ஒரு சின்ன அறை அவளுடையது. கூடவே ஒரு பாத்ரூம். வெக்கை போக்க ஒரு மின்விசிறி. அதோ ஒரு மூலையில் சமைத்து சாப்பிட ஒரு குக்கர் மற்றும் சில பாத்திரங்கள். ரூமிற்கு வந்தவள் கதவைச் சாத்திவிட்டு பயணப்பையை கட்டிலில் போட்டு விட்டு தானும் அமர்ந்து பெரும் மூச்சு எறிந்தாள். பத்து நிமிட ஓய்வின் பின் எழுத்தவள் டவலை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள். பதினைந்து நிமிடக் குளியல். பஸ்ஸில் நடந்தவை கனவென உணர்ந்தவள் போல் ரூமிற்குள் பிரவேசித்தாள் மீண்டும்.

கட்டிலில் இருந்த பயணப் பையை திறந்தாள். மேலே கிடந்தது அந்தப் புத்தகம். புத்தகம் உட்பட அனைத்தையும் கட்டிலில் எடுத்து போட்டாள் தன் ஊதா நிற நைட் ட்றெஸ்ஸை தேடி…..

“எங்க காணல…. எடுத்து வச்சனே”
சந்தேகத்துடன் கட்டிலில் வீசிய அனைத்து பொருட்களையும் கண்களால் நோட்டம் விட்டாள். அந்தப் புத்தகம் ஏதோ ஒரு பக்கத்தை காட்டும் படி விரிந்தது. உற்று நோக்கினாள்…
அதே பக்கம்……

“ இறந்து போன ஒருவர், முன்பு உங்கள் பொருள் ஒன்றின் மீது ஆசை கொண்டிருந்தால் அதை வாங்கிவிட உங்களை ஆவியாக தொடர்வர்”

அப்போது தான் ஏதோ ஞாபகம் வந்தவள் போல்…..
கண்களை பெரிதாக விழித்துக் கொண்டாள். உதடுகள் நடுங்குகிறது.
“அட்…ஷி…”
அட்ஷி , கீதாவுடைய பாடசாலை நண்பி. இருவரும் நகமும் சதையும் போல அப்படி ஒரு ஸ்நேகம்.
அவளுக்குத் தான் அந்த ஊதா நிற நைட் ட்ரெஸ் என்றால் கொள்ளைப்ரியம். கீதா கடையிலிருந்து வாங்கி வந்த போதே தனக்கு கொடு என்று கேட்டவள்.. எப்போதெல்லாம் கீதா அந்த ட்ரெஸ்ஸைப் போட்டாலும் அது பற்றி பேசாமல் இருப்பதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் காதல் தோல்வியால் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அட்ஷி. அவளது இழப்பு ஒரு பெரும் இழப்பு கீதாவுக்கு.

“ ஒரு வேளை அவள் தான் வந்திருப்பாளோ??” பதறினாள் கீதா. என்ன தான் நண்பியாக இருந்தாலும் பேயாக அவளை காண்பதில் கீதாவுக்கு உடன்பாடு இல்லை. தனிமை வேறு….

நா வறண்டு போனது. உடலெல்லாம் வியர்வை வழிகிறது. இதயம் , இயற்கைக்கு மாறாக பட பட வென்று அடிக்கிறது. பிரமை பிடித்தவள் போல் முழித்துக்கொண்டு கட்டிலில் இருந்தாள். அறையில் பூட்டியிருந்த மின்குமிழ் இருதடவை மின்னி மின்னி ஒளி இழந்தது. ஆம் பவர் கட் . அறை முழுவதும் பெரும் கும்மிருட்டு.
கீதாவுக்கு பயம் இன்னும் தலை தூக்கியது. மின்விசிறி நின்றதால் வியர்வை இன்னும் ஆறாய் பிரவகித்தது. நடுங்குகிறது கைகள், கால்கள்…
இல்லை
ஒட்டுமொத்த உடலே நடுங்குகிறது.
தேடுகிறாள் தன் மொபைல் போனை டார்ச்லைட் ஒன் செய்ய.

மூலையில் இருந்த மேசையில் ஒளிபரப்பிய படி ஒரு அதிர்வு. திடுக்கிட்டு போனாள் கீதா. அங்கே “தான் இருக்கிறது மொபைல் போன் .
யாரோ கால் பண்றாங்க”
எழுந்து மெல்ல மெல்ல போனை நோக்கி நகர்ந்தாள்.


நடுங்கிக் கொண்டே போனை எடுத்தவள் இன்னும் அதிர்ந்து போனாள்.
“ அட்ஷி காலிங்….”
இதயம் இன்னும் படபட வென்று அடிக்க ஆரம்பித்தது.
“ கடவுளே ஏன் எனக்கு இந்த சோதனை…” திக்கற்று நின்றாள் கீதா.
ஆன்சர் பட்டனை தட்டி பதறலுடன் காதில் வைத்தாள் போனை.
“ஹலோ போய்ச் சேந்திட்டியாடி?
ஒரு மெசேஜ் போட்டிருக்கலாமே…”
போனை காதில் இருந்து எடுத்து மீண்டும் திரையை பார்த்தாள்.
ம்….
அரண்டவன் அண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றது உண்மை தான்.
அது அக்கா காலிங்….
அட்ஷி அல்ல.
“ ஆஹ்… இப்ப தான் வந்தன் கா”

“ம்… சரி. படுத்து தூங்கு . அப்றம் கால் பண்ணு”

“ம்… சரி (அக்)கா…” பதிலளித்தாள் கீதா. கண்களில் நீர் குளமென பெருகியது . ஆனால் அக்காவிடம் காட்டிக் கொள்ளவில்லை.

“ ஏய் உன்னோட நைட் ட்ரெஸ்ஸ இங்க விட்டுட்டு போய்ட்ட பாரேன்….”
கூறினாள் அக்கா.

“பா… அது அங்கேயா இருக்கு. நா இங்க தேடீற்று இருக்கேன்..
சரி அடுத்த தடவை வரும்போது கொண்டு வா”

“ஹா… சரி டீ போய்தூங்கு… பாய்” அக்கா பேசி முடித்ததும் கொஞ்சம் சமாதானம்.
ஆனால் தனிமையில் இருட்டறையில் பயம் விட்டு போகவில்லை கீதாவுக்கு.
போன் டார்ச்சை ஒளிரச் செய்து தேடினாள் அந்தப் புத்தகத்தை.
“ இதனால் தான் இவ்வளவும் ” என்று அதை ஜன்னலால் எறிய ஆயத்தமானாள். ஜன்னல் ஓரமாய் சென்றவள் அட்டைப்படத்தை ஒருதடவை பார்த்தாள். புத்தகத்தை எழுதியவர் பெயர் “ஆர். அட்ஷி”
அறையில் மீண்டும் மின்விளக்கு எரியத் தொடங்கியது…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
6 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Devanandam Gobikanth
Devanandam Gobikanth
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice

Kasthury Sothinathan
Kasthury Sothinathan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிகவும் சுவாரஸ்யமான கதை.
அருமை அருமை
வாழ்த்துக்கள்

ஸ்ரீகர்ஷன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான படைப்பு நண்பா…..
சுவாரஷ்யம் சற்றும் குறையாமல் கதை நகரும் பாங்கு சிறப்பு….. தொடர்ந்தும் எழுதுங்கள்….. வாழ்த்துக்கள்……..