தரணியெல்லாம் எங்கள் தாயகமே!

0
1010

மரபுப்பா ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

உறவுக்குள் பணபலத்தால் பகைவ ளர்த்து
உணவுக்குள் கலப்படத்தால் உயிர ழித்து
அறம்தன்னை விட்டொழித்து ஆசை கொண்டு
அயலானை ஆதரிக்கத் தினம்ம றந்து
மறம்பேசி மனிதத்தை மாய்த்த ழித்து
மடிநிறைத்த பணத்தாலே மாசி ழைத்து
புறம்பேசிப் புல்லரெனப் பிறர்ம னத்தைப்
புண்ணாக்கும் பேர்க்கின்று புகட்டும் பாடம்

பழமையைப் புறந்தள்ளிப் புதுமை யென்று
படைத்தவனை மறந்துவிட்டுப் பாதை சென்று
வழமைக்கும் மாறாக வாழ்வை மாற்றி
வையகத்தை ஆண்டிருந்த வஞ்ச கர்க்கு
பழமைகளும் வழமைகளும் பாட மென்றே
பார்வாழும் மக்களுக்குப் புகட்டு தற்கே
உலகமெல்லாம் ஒருகிருமி ஒன்றா லிங்கே
உணரவைத்தான் தெய்வமது ஒன்றுன் டெண்று

மாடிகளும் கோடிகளும் அதிர வைத்தே
மரணம்தான் முடிவென்று மதியு ரைத்து
வீடிருந்தே உறவுகளின் விழிகள் பார்த்து
விலகாமல் அன்புடனே இருக்க வைத்து
கூடிநின்ற உறவெல்லாம் குலைய வைத்து
குக்கலென்று இருமலென்று விலக வைத்து
ஆடவைத்தே அகிலமெல்லாம் அறிவு தந்தான்
அன்பொன்றே மதமென்று அறிய வைத்து

கூடிருக்கும் ஆவியிங்கே ஓடி விட்டால்
கூடவரும் பொருளெதுவும் இங்கு இல்லை
கூடியுறவாய் வாழ்ந்திங்கோர் குலமாய் நாமும்
கொல்லாமை தீண்டாமை கொன்று வாழ்வில்
ஆடியடங்கும் வாழ்க்கையிலே அன்பு கொண்டு
ஆனசாதி மதபேதம் அனைத்தும் விட்டு
நாடெல்லாம் நம்தாய கமேயென் றெண்ணி
நாமிருந்தால் நமனுந்தான் நமக்கு நட்பு

தாழ்வென்று முயர்வென்றும் தரம்பி ரித்து
தரணியதில் வாழுகின்ற நிலையை விட்டு
வாழ்ந்திருக்கு முலகமெங்க ளன்னை யென்று
வாழ்ந்திருப்போர் ஒருதாயின் பிள்ளை யென்றும்
வீழ்ந்திடாத பாசமதன் வேர்கி ளைக்க
வாழ்ந்திருந்தால் வைரசெல்லாம் தூசா மிங்கே
ஆழ்ந்திதனைச் சிந்திக்கும் அறிவு பெற்றால்
ஆண்டவனே பெரிதென்று புரிய வைக்கும்

பாடுபட்டு நாமுழைத்துப் பண்பு கொண்டு
பாசத்தால் உறவுக்கும் பகிர்ந்து உண்டு
நாடெல்லாம் நமதென்றும் நம்தா யென்றும்
நாமிருந்தால் நமக்குள்ளே பேத மெங்கே
தேடுபொருள் மிகையெனின் ஏழைக் கிட்டு
தேசமெல்லாம் வாழ்வோரெம் சொந்த மென்றே
கூடியுறவாய் வாழ்ந்திருக்கும் கொள்கை நின்றால்
குவலயமோ நாம்கூடும் ஒருதாய் வீடே

வல்லமையை யாயுதத்தால் வெல்வோ மென்ற
வல்லரசை வீழ்த்திடவே வந்த திங்கே
கொல்லுமுயிர் வைரசொன்று “கொவிட்” என்று
கொடுமைக்கு முற்றுப்புள் ளிவைத்தே எங்கும்
வல்லோனை நினைந்திங்கு வாழ்ந்து மக்கள்
வையமெல்லாம் நெறிமுறையில் வாழ வைத்து
பொல்லார்க்கும்; புத்திதனைப் புகட்டி மண்ணில்
புவிமக்கள் யாவருமே ஒன்றாய் வாழ

இனத்தாலே மத்த்தாலே மொழிதன் னாலே
எம்மிடையே பேதங்கள் இழிவென் றெண்ணி
மனத்தாலே நாமெல்லாம் மனித ரென்றே
மதிக்கின்ற மாண்பிருந்தால் மாந்த ரெல்லாம்
அனைத்துமிங்கு அன்புக்குள் அடக்க மென்றே
அனைவருமே அகிலமிதை ஆண்டு ஒன்றாய்
இனத்தோடு பண்பாட்டை ஏற்று வாழ்ந்தால்
இத்தரணி யாவுமெங்கள் இன்ப வீடே!

உயிரழிக்கு மாயுதத்தின் ஆக்கம் விட்டு
உயிருக்கு உணவழிக்கும் ஊக்கம் பெற்று
பயிர்நிலங்கள் செழித்திங்கே பசுமை பெற்று
பஞ்சத்தை யோட்டுதற்கே பாடு பட்டு
அயல்நாட்டை அடிமைசெய் கொள்கை விட்டு
அனைத்துலகும் தாயகமே என்று வாழ்ந்தால்
துயரமெல்லாம் தூரநின்று எட்டிப் பார்க்கும்
தூண்டிவிட்ட விளக்காக அமைதி பூக்கும்

முடிவுறுமெம் வளங்களினை முறையாய்ப் பேணி
முழுவுலகும் வாழுதற்கோர் முறைவ குத்து
மிடிமையிலே வாழ்வோரை மீட்டெ டுத்து
முன்னேற்றம் கண்டிடவே முயன்று ழைத்து
விடிவொன்றைக் காணுதற்கே விழைந்து நின்று
வீண்சண்டை வேரறுந்து புதைய விட்டால்
அடிமையெனும் சொல்லுக்கே அர்த்த மற்று
அனைத்துலகும் அன்னைநிலம் ஆகு மிங்கே

பகுத்தறிவை இழந்துவிட்ட மனிதம் கண்டு
பரவியதே பாடமாகப் பாரி லெங்கும்
புகுந்துலகை ஆட்டுவிக்கும் புதுநோ யொன்று
புரிந்துணர்வாய் மக்களிங்கு வாழ்வ தற்கு
வகுத்தவனின் வழிநின்று வாழ்ந்து விட்டால்
வகுப்புக்களின் பேதமிங்கே வலுவி ழக்கும்
அகத்துள்ளே ஒளிபிறந்து ஆன்மீ கத்தால்
அனைவருமே ஒருதாயின் பிள்ளை யாவோம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments