திருமண வீடு..! முதல் நாள்..! சில எண்ணங்கள்…!

0
1181
மணப்பெண்ணின் எண்ணம்,
காதல் கணவனின் கற்பனையில் மூழ்க
கணநேரத் தனிமையாக இருக்கலாம்..!
 
முதல் கூடல் பொழுது பற்றிய
முடிவுறாத சந்தேகங்களாக இருக்கலாம்..!
 
கணவனின் மார்பில் சாய்ந்து,
நிரம்பிய கண்களுடன், கைகளை இருகப்பற்றி,
காதலுக்கான போராட்டங்களை ந‌ினைவு கூறுதலாக இருக்கலாம்..!
 
தான் சென்ற பிறகு நட்டு வைத்த ரோஜாவுக்கு
தண்ணீர் ஊற்றுவது யார் என்ற கவலையாக இருக்கலாம்..!
 
அல்லது
 
கைகூடாத காதலனின் கைபற்றி கால்தொட்டு
கனத்த மனதுடன் வாங்கும்
கடைசி நிமிஷ ஆசிர்வாதமாக இருக்கலாம்…!
 
கடைசி நிமிஷத்தில் எல்லாம் மாறி
கல்யாணம் அவனுடன் நடக்காதா என்ற ஏக்கமாக இருக்கலாம்..!
 
உடைந்தழுது உயிர் வலிக்க விடை சொன்ன
கடைசி சந்திப்பாக இருக்கலாம்…!
 
கடைசி நாள் அவன் கற்பனையை நெஞ்சில் சுமக்க
கணநேர அவகாசமாக இருக்கலாம்..!
மணப்பெண்ணின் தாயின் எண்ணம்,
தொலைதுாரம் அவளை அனுப்பி விட்டு
வீட்டின் வெறுமையை எப்படி நிறைப்பது என்ற எண்ணமாக இருக்கலாம்..!
 
மணப்பெண்ணின் அண்ணனின் எண்ணம்,
‌தருவதாகச் சொன்ன ந‌கைகளில் இன்னும் செய்யப்படாத
எஞ்சிய சவரன்களுக்கு யாரிடம் கடன்வாங்குவது என்பதாக இருக்கலாம்…!
 
தங்கையின் எண்ணம்,
இனிமேல் தனது காதலை வீட்டில் எப்படி சொல்வது என்ற
தயாரிப்பாக இருக்கலாம்..!
 
ஒன்று விட்ட முதிர் கன்னி அக்காவின் எண்ணம்,
தனது கல்யாணம் பற்றிய ஊமைக்கனவுகளாக இருக்கலாம்..!
 
மாமியாரின் எண்ணம்
அவள் கொண்டு வரும் நகைகளின் மீது இருக்கலாம்..!
 
அவனின் எண்ணம்,
விடியாத இரவொன்றின் விண்ணப்பமாக இருக்கலாம்..!
 
ஆனால்,
எல்லோருக்கும் கட்டளையிட்டுக் கொண்டு,
அங்குமிங்கும் ஓடி பிஸியாகக் காண்பித்துக் கொண்டிருந்த
அப்பாவின் எண்ணம்,
மகளின் பிரிவை எண்ணி அடிக்கடி மிதக்கும் கண்ணீரை
அடுத்தவர் கண்டு பிடித்து விடக் கூடாது
என்பதில் இருந்தது.
 
எழுதியவர் 
-இன்ஷிராஹ் இக்பால்
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments