இந்த பூமிப் பெருவெளியில்
பெருந்துயரோடு,
வலிகளின் விளிம்பில்
உள்ளவனும் நம்மை கடப்பான்.
அதே வலிகளில் விரக்தியுற்று,
அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான்.
உள்ளே வலிகளின் ரத்தத்தில்
நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி,
பரிதாபமாக வாடுபவனும்
நம்மை கடப்பான்.
மானத்தை காத்துக் கொள்ள
சாதுரியமாக வலிகளை மறைத்து,
உன்னை கடப்பவன் ஒருவன்
சில போது,
வாடாத புன்னகையை கூட உதிர்ப்பான்.
உயிரை மாய்த்துக் கொண்டால் என்னவென்று எண்ணி,
வலிகளின் பள்ளத்தாக்கில் சிக்குண்டு மூச்சித் திணருபவனும் நடப்பான்.
வாழ்க்கைச் சாலை
அப்படி யாரிலிருந்தும்
வலிகளை ஒதுக்கி,
இன்பத்தை மட்டும் நுகர
வழி விடுவதில்லை.
நீ கடக்க வேண்டிய
மொத்த நாட்களின் பாதியையே
விழுங்கித் திண்ணும் அளவுக்கான வலிகளை பெற்றிருந்த போதும்,
அதையும் சுமந்து கொண்டேனும்
நீ நடந்தே தான் தீர வேண்டும்
என்பதுவே வாழ்வின் கட்டளை.
இங்கே நம்மை கடப்பவனுக்கும்
நாம் கடப்பவனுக்கும், நமக்கும்
தேவை ஒன்று தான்.
அப்பிக் கிடக்கும் வலிகளை
உளரிக் கொட்டி விடவும்,
கொட்டித் தீர்த்து விடவும்,
சொல்லிக் கதறி அழவேனும்
ஓர் தயவான, கனிவான
ஆத்மார்த்தமான நேசம் ஒன்று தான்.
வலிகளை பகிர்ந்து கொள்ள
யாரும் இல்லாத போது,
உண்டாகும் வலிகளைப் போன்ற
ஓர் உயிர் கொள்ளும்
அசுர வேதனை வேறேதும் இல்லை.
வலி பெற்றதே…
ஓர் மனிதன் மூலம் தான் என்றாலும்,
அதை இறக்கி வைத்து
தேற்றிக் கொள்ள தேவைப்படுவதும், இன்னோர் மனிதனின் தோள்கள் தான் என்பதே இவ்வாழ்வின் அழகிய விதி.