தேக்கு

2
2200

உலகின் மதிப்பு வாய்ந்த வன்மர இனங்களில் (Hardwood) ஒன்றான “வெர்பினேசியே”  (Verbinaceae)  குடும்பத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” (Tectona grandis ). கிரேக்க மொழியில் ‘டெக்டன்’ என்றால் தச்சருக்கு தொடர்புள்ள. “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது,   “தச்சர்களுக்கு உகந்த அருமையான மரம்” என்ற பொருளில் இப்பெயரிடப்பட்டுள்ளது

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரிய இம்மரம், இயற்கையாகவே இந்தியா, பர்மா, லாவோஸ், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவலாக காணப்படுகின்றது. தேக்கு என்ற  தமிழ்ச்சொல்லில் இருந்தே இதன் ஆங்கில பெயரான டீக் வுட்-TEAK WOOD வந்தது

இலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்த தேக்கு 30லிருந்து 40மீ உயரம் வரை வளரும். நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது. மேலும் இம்மரம் நல்ல சூரிய ஒளி இருக்குமிடங்களில்  செழித்து வரும். தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15மீ உயரமும் 90செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீட்டர் உயரமும், 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.

 15-30செமீ அகலமுள்ள, சொரசொரப்பான எதிரடுக்கு இலைகளையும், கொத்தான வெள்ளைப்பூக்கள் மற்றும் 4 விதைகளுடன் இளமஞ்சள்  நிறக்காய்களையும் கொண்டிருக்கும்..

தேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் ஜுன்-செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பழங்கள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும். சதைபற்றுள்ள ஒற்றை விதையுள்ள பழங்கள் உருண்டையாக இருக்கும். 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களிலிருந்து சேகரித்த    விதைகள் மூலமும், நாற்றுக்குச்சிகள்  மூலமும் இனப்பெருக்கம் நடைபெறும்.

40-80 வருடங்களான கரையான் அரிக்காத தன்மையுடைய தேக்கு மரம் மரச்சாமான்கள் , சன்னல், கதவுகள் , கட்டில்கள், கப்பல் கட்டுமானம் ஆகியவற்றை செய்ய பயன்படுகின்றது .

தேக்கின் இலை, பூ, காய், மரப்பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படும். இலைகளிலிருந்து சிவப்பு வர்ணம் எடுக்கப்படுகின்றது

உலகின் மொத்த தேக்கு உற்பத்தியில் 1 பங்கு மியான்மரில் இருந்து பெறப்படுகின்றது. தன்னிரகற்ற உறுதி,  லேசான எடை, நீடித்த உழைப்பு பளபளப்பு  ஆகிய சிறப்பு குணங்களுடைய தேக்கு, கனஅடி ரூ2000 முதல் 3000 வரை  மதிப்புடையது . தேக்கு மரத்தின் மையப்பகுதி (heart wood)   1.4%  சிலிகாவும் இயற்கை எண்ணைகளும் இருப்பதால் , நல்ல மணத்துடன், அடர்ந்த காவி நிறத்திலும், வெளிவட்டப்பகுதி ( sap wood )  வெளிறியும் , ஆண்டு வளையங்கள் தெளிவாகவும் காணப்படும்  

இந்திய அரசு 1994ல் ‘மகாவிருக்ஷம்’ என்ற விருதைத்தந்து கௌரவித்த  பரம்பிக்குளம் சரணாலயத்திலுள்ள    47.5 மீ உயரமும், 6.8மீ அகலமும் உள்ள  450 வயதான ’’கன்னிமரா’’ தேக்கு மரமே உலகின் மிகப்பெரிய தேக்காக இருந்தது. தற்போது 2017ல் மியான்மரில் உள்ள ’ஹோமியோமாலிம்’ எனப்பெயரிடப்பட்ட 34மீ உயரமும் 8.4மீ சுற்றளவும்  உள்ள தேக்கு மரம்  உலகின் மிகப்பெரிய தேக்காக அறிவிக்கப்பட்டது.     

தேக்கு வளர்ப்பு,  ஆய்வு, விற்பனை மற்றும் பயன்பாடுகள்,குறித்த  பன்னாட்டு தேக்கு தகவல் வலைத்தளம் The International Teak Information Network (Teaknet) கேரளாவை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு  வருகின்றது. 

பொதுவாக தேக்கு மரம் நட்டு வளர்க்க நினைக்கும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலின் வரப்போரங்களில் நட்டு வைக்கும்போது கூடுதல் பலன்பெறமுடியும்! இதன் கிளைகள் அடர்ந்து பரவாது என்பதால் பயிர்களுக்கான சூரிய வெளிச்சத்தில் தடை ஏற்படாது.

வாழை இலையைப் போலவே தேக்கு இலைகள் நன்றாக அகன்று விரிந்து இருப்பதால் நாம் தேக்கு இலைகளில்  உணவருந்தலாம். தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும். தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு  கூந்தல் தைலம் தயாரிக்கப்படுகின்றது

5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Francis Almeda
Francis Almeda
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

good

Magethran Suruthikka
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

super