தோல்வி?

0
1115
IMG_20210308_230028-2f6f7c21

வாழ்க்கையில் அதிகம் நம்மை வருத்துவதுதான் இந்தத் தோல்வி.அன்று தொட்டு இன்று வரை அனைவராலும் சொல்லப்படும் வாசகமொன்றுதான் ‘தோல்வி என்பது வெற்றியின் முதல் படி’ இருந்தாலும்  அத்தனை சுலபமாக வெற்றியின் படியைத் தொட்டுவிட்டவர்கள் இங்கே யார்?

நீ வாழ்க்கையில் தோற்க வேண்டும்.உன் முகவரி தொலைவதற்காக அல்ல.நீயே தேடப்படும் முகவரியாக  மாறுவதற்காக.ஏனெனில் எப்போது நீ தோற்கின்றாயோ  உனக்குள் ஒரு  பணிவு வரும்.பணிவு என்பது வெற்றியின் ஒரு இரகசியம்.சாதாரண வெற்றிகளை வெடில் கொளுத்திக் கொண்டாடுபவர்களைத் தாண்டி சலனமே இல்லாமல் சிம்மாசனத்தில் அமர்பவர்கள்தான் வெற்றியாளர்கள்.பணிவு வந்துவிட்டால் மற்றவர்களைத் தாழ்த்திப் பார்ப்பதை விட்டு நீ இன்னும் முன்னேற வேண்டியதன் அவசியத்தை உணர்கின்றாய்.எனவே உன்னால் இலகுவாக அடுத்த கட்டத்தினுள் நுழையலாம்.

நீ தோற்கும் போதுதான் உனக்குரிய உண்மையான வாய்ப்புகள் எவை என்பதையும் உனக்குள் உள்ள உண்மையான ஆற்றல் எது என்பதையும் உணர்வாய்.திடீரென வந்த ஒரு ஆர்வக்கோளாறு வெற்றியில் முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.அந்த முயற்சி தோற்கும் போது தான் என்னால் உண்மையாகவே முடிந்தது என்ன என்பதை சிந்திப்பதற்கான சிறந்த வாய்ப்புக் கிடைக்கின்றது.

அத்தோடு அந்த தோல்விதான் புதுப்புது ஆரோக்கியமான மாற்று சிந்தனைகளையும் உண்டாக்கும்.இதனூடாக ஒரு விடயத்தைப் பல வழிகளிலும் அடைவதற்குரிய படிமுறைகளைக் கண்டறிய முடியும்.எனில் புதிய புதிய சிந்தனைகளுக்கு தோல்வியும் அவசியம்தானே.?

அத்துடன் தோல்விகள் ஏற்படும் போது
தான் சவால்களை எவ்வாறு முகம்கொடுப்பது என்ற வாழ்க்கைப்பாடம் சொல்லித்தரப்படுகின்றது.அவற்றைப் பாடமாக படித்து வாழ்க்கைப் பரீட்சையை வெற்றிகரமாக முகங்கொடுப்பதும் அல்லது அழுது புலம்பி மற்றார்க்குப் பாரமாக மாறுவதும் உன் கையில்தான்.

அவற்றுக்கும் மேலாக நாம் தோல்வி ஒன்றை சந்திக்கும் போது நமது உள்ளுணர்வு மனப்பாங்கானது தோல்வியை விட முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.ஏனெனில் அந்த நிலையில் உன் மனப்பாங்கு நேர் எண்ணங்களை விதைத்தால் தான் மீண்டும் பல முயற்சிகளை உன்னால் தொடர  முடியும்.எனவே இங்கு உன் மனப்பான்மையானது வெற்றியை மட்டுமே இலக்காக வைத்திருக்க வேண்டும்.

அதற்காக உனக்குப் பொறுமை அவசியப்படுகிறது.ஒரு தோல்வியை சந்தித்துவிட்டால் உடனடியாக அடுத்த வெற்றி கிடைக்கும் என்பதில்லை.சற்றுப் பொறுமையுடன் முயற்சி செய்ய வேண்டும்.பொறுமை என்பது வாயால் சொல்வது போல் இலகுவான காரியமல்ல.ஆனால் அதன் விளைவோ அற்புதமானது.

உனது உண்மையான அடைவு எதுவாக இருக்க வேண்டும் என்பதை முற்கூட்டியே தீர்மானம் செய்துகொள்.அதாவது இலக்கு என்பது நேற்றைய நாள் தோன்றிய ஒரு சிந்தனையை அடைவதல்ல.மாறாக உன் இதயத்தில் ஆழமாக வளர்க்கப்பட்டுள்ள விருட்சகம்.அதாவது சிறு வயதிலிருந்தே உன்னுள் தோன்றிய ஒன்றை அடைவதற்குரிய பேரார்வமாகும்.அதனை நோக்கிய முறையான பயணம் உன் அடுத்த தோல்வியைத் தடுக்கும் என்பதை உணர்ந்துகொள்.

நீ ஒரு வித்தியாசமானதும் அழகானதுமான இறை படைப்பு. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஒரு தோல்வியினால் துடைத்தெறிந்துவிடாதே.உன் திறமைகள் மீது உனக்குள் தைரியத்தை வளர்த்துக்கொள்.உன்னை உயரத்திற்கு கொண்டு செல்லும் சக்தி திடமான மன பலத்தை விட வேறு எதற்கும் இல்லை.

உனக்குரிய மனப்பலம் வந்துவிட்டால் நீ வெற்றியின் பாதிப்பங்கை அடைந்துவிட்டாய்.அடுத்த கட்டம் தான் உன்னை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல அவசியப்படுகிறது.அதுதான் திட்டமிடலாகிறது.தோல்வியின் பின்னரான திட்டமிடல் அனுபவத்துடன் நிறைந்தது.முன்னர் விட்ட பிழைகளிலிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இங்கு கிடைக்கின்றது.இந்த இடத்தில் சரியாகத் திட்டமிட வேண்டும்.

எந்த நேரத்தில் எதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்.அனுபவமிக்கவர்களின் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.
அதனைவிட முக்கியம் சமூகத்தில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்களிடம் இருந்து எப்போதும் விலகி இருப்பதாகும்.ஏனென்றால் அவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையையே வெற்றிகரமாக கொண்டு செல்வதில் பிழைத்தவர்களே.

தோல்வி என்பது கோழைகளின் வாழ்க்கைப் புத்தகத்தின் இறுதிப் பக்கம்.உன் வாழ்வில் அது எந்தப்பக்கம் இருக்க வேண்டும் என்பதை இப்போது முடிவு செய்.!
துவண்டுவிட்டால் மண்ணும் மிஞ்சாது.அஞ்சுபவனுக்கு ஆகாயமெல்லாம் பேய்தானே?அடைந்துவிட நினைத்தால் அரும்புகளும் ஆயுதமாகிவிடும்.

✍Binth Fauzar

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments