நடுநிசி வேட்டை – அத்தியாயம் 01

0
687

 

 

 

 

இரவுகள் எப்பொழுதும் நாம் எதிர்பார்ப்பது போல் நிசப்தமானவையாகவும் அமைதியானவையாகவும் இருப்பதில்லை. இரவுகள் எனப்படும் பொழுதுகள் எப்பொழுதும் பயங்கரமானவை மட்டுமல்ல சில சமயங்களில் அமானுஷ்யமானவையும் கூட. இருள் என்பதே கொடியது எனும் போது அந்த இருளையே சிருஷ்டிக்கும் இரவுகள் வேறு எப்படி இருக்கும். பயங்கரமானவையாகத் தானே இருக்கும்.

அந்த அமாவாசையின் கொடும் இருளின் பயங்கரத்தை மேலும் பயங்கரமாக மாற்றுவது போலவே கோட்டான்களும் ஆந்தைகளும் தங்கள் பயங்கரமான ஓசைகளை எழுப்பி கிலி பரப்பிக்கொண்டிருந்தன. தூரத்தில் எங்கோ சில நாய்களும் நரிகளும் ஊளையிடும் சப்தங்களும் அத்துடன் இணைந்து அந்த இரவை மென்மேலும் பயங்கரமாக அடித்துக்கொண்டிருந்தன. அவ்வாறான இருளில் ஒரு மனிதன் கறுப்பு நிறத்தில் நீளமான மழைஅங்கியை உடல் முழுவதும் மறையும் வகையில் அணிந்து கொண்டு எவ்வித கலக்கமும் இன்றி தரையில் இருந்த கல் ஒன்றில் அமர்ந்திருந்தான். அவனின் கையில் இருந்த கத்தி தரையைக் குத்தி பிராண்டிக்கொண்டிருந்தது. அவன் முகத்தில் ஏதோ ஒரு வெறி மண்டிக்கிடந்தது. அவன் கையில் இருந்த அந்தக் கத்தி முழுவதும் இரத்தம் படிந்திருந்தது. அந்த இரத்தம் சில நிமிடங்களுக்கு முன்பு தான் அந்த கத்தியை நனைத்திருக்க வேண்டும். அவனின் ஆடையிலும் ஆங்காங்கே இரத்தம் சிகப்பு கோலங்களை இட்டிருந்ததுடன், அவன் முகத்திலும் செந்நிறக்குருதி தெறித்திருந்தது. அவனின் கண்களில் ஏதோ ஒன்றை சாதித்து விட்ட வெறி பயங்கரமாய்த் தெரிந்தது.

 

 

 

 

அவன் தனது இடது கையால் முகத்தில் தெறித்திருந்த இரத்தத்தைத் துடைத்தான். அந்த இடத்தில் இருந்து எழுந்து அங்குமிங்கும் இருமுறை வேகமாக நடந்தான். சடுதியாக அசைவற்று நின்றான். தனது வலது கையில் வைத்திருந்த கத்தியை கீழே போட்டு விட்டு தன் கைகளை முன்னால் நீட்டி ஒன்று சேர வைத்து உள்ளங்கைகளில் படிந்திருந்த இரத்தக்கறையைப் பார்த்தான். முகத்தின் அருகில் இரண்டு கைகளையும் கொண்டு வந்து கண்களை மூடிக் கைகளில் படிந்திருந்த குருதியை மூக்கால் உறிஞ்சி அதன் வாடையை சுவைத்தான். அந்த இரத்தவாடையை அவன் மிகவும் இரசித்திருக்க வேண்டும். அவன் முகத்தில் பரிபூரண திருப்தி தெரிந்தது. வாயில் இருக்கும் அத்தனை பற்களும் முகத்தை நிறைக்குமாப்போல் பயங்கரமாய் சிரித்தான். கண்களைப் படார் என்று திறந்தான். அவனின் கண்களில் இருந்த அந்தப் பயங்கர வெறி அப்படியே இருந்தது.

அங்கிருந்து மெல்ல வலது புறம் திரும்பி எதையோ கைகளால் தடவி தரையில் தேடினான். அவன் தேடிய அந்தப் பொருள் அவனின் கைகளில் கிடைத்திருக்க வேண்டும். தேடலை நிறுத்தி கீழே கிடந்த அந்த நீளமான இரும்புக்கடப்பாரையை எடுத்துக்கொண்டு சற்று முன்னே நகர்ந்து வந்தான். தரையில் ஒரு இடத்தை தெரிவு செய்து மெல்ல இருமுறை கடப்பாரையால் தட்டினான். அந்த இடத்தில் குழி பறிக்க ஆரம்பித்தான். அதே நேரம் வானின் ஒரு பகுதியில் வெடித்த மின்னல் வான் முழுதும் படர்ந்து மறைய, வானமே கிழிய பயங்கரமாய் ஒரு பேரிடி தோன்றி மறைய, வானை பிழந்து மழை மெல்ல தூறல் விட ஆரம்பித்திருந்தது. அவன் அதை சற்றும் பொருட்படுத்தாமல் தன் வேலையில் கவனமாக இருந்தான். ஒவ்வொரு முறை கடப்பாரை தரையை தொடும் போதும் அவனின் உதடுகள், “நீங்க தான் ஆரம்பிச்சீங்க. நான் முடிச்சு வைப்பேன். நான் இதை ஆரம்பிக்கிறேன் இந்த ‘சங்கர்’ல இருந்து.” என்று மீண்டும் மீண்டும் இடைவிடாது சொல்லிக் கொண்டேயிருந்தன.

 

 

 

 

குழி ஆழமாய் வெட்டப்பட்டதும், அங்கிருந்து திரும்பி சிறிது தூரம் நடந்தான். அங்கிருந்த உயர்ந்த மரம் ஒன்றின் அடியில் நின்று தன் சட்டைப்பையில் தடவி ஒரு சிகரெட் பாக்கெட்டை வெளியில் எடுத்தான். அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி வாயில் வைத்து, லைட்டரை உரோஞ்சி நெருப்பை உண்டாக்கி அந்த சிகரெட்டின் முனையை பற்றவைத்து, கண்களை மூடி சிகரெட்டின் புகையை பலமாக உறிஞ்சி நெஞ்சை நிரப்பி பின் வெளியே ஊதினான். சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்து விட்டு அந்த மரத்தை சுற்றி பின்புறம் வந்து கீழே குனிந்து எதையோ ஒன்றை பிடித்து தரையில் சரசரவென இழுந்து வந்து குழிக்கு அருகில் போட்டான். தரையில் கால்களால் தடவி அலைந்து ஏதோ ஒன்றை வெறித்தனமாகத் தேடினான். அவனின் கால்கள் நின்ற இடத்தில் சுழன்றன. உடலில் ஏதோ ஒரு வேகம். அவன் தலை தரையை சோதனையிட வேண்டி பயங்கர வேகத்துடன் அங்குமிங்கும் அசைந்து திரும்பிக்கொண்டிருந்தது. தரையில் கிடந்த அந்த கத்தி காலில் பட்டதும், அதே வேகத்துடன் கீழே குனிந்து அந்த கத்தியை எடுத்துக்கொண்டு குழிக்கு அருகில் வந்தான். தன் கையில் இருந்த அந்த கத்தியால் வெறிபிடித்தவன் போல் தாறுமாறாக குத்தினான். இரத்தம் மீண்டும் தெறித்து அவனின் முகத்தை நனைத்தது. அவன் முகத்தில் இருந்த வெறி மேலும் பயங்கரமாய் மாறியது. தூறலாக ஆரம்பித்த மழை “சோ”வென்று பலமாக பொழிய ஆரம்பித்தது. இம்முறை அவனின் முகத்தில் தெறித்த குருதியை மழையே கழுவி அகற்றிக் கொண்டிருந்தது. குழிக்கருகில் தான் கொண்டுவந்து போட்ட அந்த மனித உடலை உதைத்து குழிக்குள் தள்ளினான். பயங்கரமான குரலில் மிக அழுத்தமாகவே, “இந்த வேட்டை..” என்று ஆரம்பித்த அவனின் குரலினுடைய அழுத்தம் குறைந்து மெல்லியதாக ஆனால் பயமுறுத்தும் தொனியில், மரணத்திற்கு ஒரு குரல் இருந்தால் அது எப்படி இருக்குமோ அப்படியாக காற்றுப்போல் வெளிவந்தது. “இதோட முடியப்போறதில்ல!!”

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments