நடுநிசி வேட்டை – அத்தியாயம் 03

0
775

 

 

 

 

வக்கீல் சங்கர் வீடு, முதல் நாள் மாலை பிணம் கண்டுபிடித்து எடுக்கப்பட்டு மறுநாள் காலை செய்தித்தாள்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார் வக்கீல் சங்கர். எங்கும் காக்கிகளும் கேமராக்களும் சூழ்ந்திருந்தன. வீட்டின் வெளிக் கேட்டிலேயே கேமராக்காரர்கள் கான்ஸ்டபிள்களால் தடுக்கப்பட்டிருந்தார்கள் வீட்டின் வெளிப்பகுதியில் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார் சங்கருடைய மாமா வேதாச்சலம். வயது ஐம்பது இருக்கலாம்.

“ஸார் உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?” வழக்கமான போலீஸ் விசாரணையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் இன்ஸ்பெக்டர் விஜய்மில்டன்.

“பொதுவா லாயர்னாலே எதிரிங்க அதிகம் தானே ஸார். அதுவும் சிட்டில பேமஸ் லாயர். எந்தப் படுபாவி இப்படி பண்ணானோ” என்று சோகமாய் புலம்பினார் வேதாச்சலம். “பர்டிக்குலரா யார் மேலேயாவது” என்று இழுத்தார் மில்டன்.

“பர்டிக்குலரான்னா.. சங்கரோட பொண்டாண்டியோட பேமிலி மேல எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார். அதுவும் அவளோட அண்ணன்.”

“சங்கரோட மனைவியா அவங்க எங்க?” “அவ இங்க இல்ல ஸார்.”

“அப்படினா”

“அஞ்சு மாசம் முன்னாடி இரண்டு பேரும் டைவர்ஸ் வாங்கிக்கிட்டாங்க. இப்போ அவ அவங்க வீட்டில இருக்கா.”

“இரண்டு பேருக்கும் என்ன ப்ராப்லம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“ம்ம் தாராளமா ஸார். நான் சங்கரோட தாய் மாமன் ஸார். அவ சரியில்லை ஸார். அவளுக்கு நிறைய பசங்கக் கூட…. அது எனக்கு தெரிஞ்சதும். அவ என் மேலேயே தன்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணதா பழி போட்டா ஸார். சங்கர் அவளை நம்பல. திருப்ப திருப்ப என் மேல பழி போட்டா. அப்புறம் அவ சந்தோசத்துக்கு குறுக்க நாங்க தான் இருக்கோம்னு, அவளே டைவர்ஸ் வேணும், எனக்கு இவர் கூடலாம் வாழ முடியாதுனு சொல்லீட்டுப் போயிட்டா ஸார். நானும் அவ சரியில்லைடானு சங்கர்க்கு எடுத்து சொல்லி டைவர்ஸ் கொடுக்க வைச்சேன். அதுக்கு அப்புறம் ஒரு நாள் அவளோட அண்ணன் வந்து என்னையும் சங்கரையும் கொண்ணிடுவேன்னு மிரட்டிட்டுப் போனான் ஸார்.”

 

 

 

 

“இஸ் இட். அவங்க பேரு என்ன?”

“மீனாக்ஷி ஸார்”

“ம்ம் ஐ சீ… சரி சம்பவம் நடந்த அன்னைக்கு சங்கர் தனியா தான் இருந்தாரா?”

“ஆமா ஸார்”

“நீங்க எங்கே போயிருந்தீங்க”

“மூணு நாள் முன்னாடியே நான் ஒரு பிஸினஸ் விசயமா வெளியூர் போயிருந்தேன்”

“ஓகே எப்போ திருப்ப வந்தீங்க?”

“நேத்து காலையில”

“இங்க என்ன பாத்தீங்க?”

“காலை எட்டு மணிக்குலாம் இங்க வந்திட்டேன் ஸார். கதவு வெளிப்பக்கமாப் பூட்டியிருந்தீச்சு. சங்கர் கோர்ட்டுக்கு கிளம்பிட்டான்னு நினைச்சுக்கிட்டே உள்ள வந்தேன். யாரோ எதையோ இரத்தம் சொட்ட இழுத்திட்டுப் போனமாதிரி வாசல் பூரா ரத்தம் கோடு மாதிரிப் பாதையா நீண்டிருந்தீச்சு. பயத்தில ‘சங்கர் சங்கர்’னு கூப்பிட்டேன், உள்ளே யாரும் இல்ல. ரொம்ப பயமா இருந்தீச்சு உடனே போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணீட்டேன் ஸார்.

“வேற எதாவது வித்தியாசமாப் பாத்தீங்களா?”

“நோ ஸார்”

“ம்ம் ஓகே மிஸ்டர் வேதாச்சலம். எப்போ கூப்பிட்டாலும் ஸ்டேஷனுக்கு வரணும். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரணும் புரியுதா”

“கண்டிப்பா ஸார். நான் சட்டத்தை மதிக்கிறவன். அது என் கடமை.”

போரன்சிக் ஆட்கள் வீட்டை சல்லடை போட்டு ஏதோ பொடிகளைத் தூவி ஊதா நிற அல்ட்ரா வைலட் கதிர்களை படர விட்டு கைரேகைகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் இரத்த குறிகளையும் வேறு சிலவற்றையும் ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த அவர்களின் பக்கம் திரும்பிய மில்டன்,

 

 

 

 

“ஏதாச்சும் எவிடென்ஸ் கிடைச்சுதா?” என்றார்.

“நோ ஸார். கைரேகை இந்த மாதிரி எந்த எவிடென்ஸ் உம் கிடைக்கல. அவன் பூட்ஸ் போட்டிருந்திருக்கான். காலடித்தடம் ரத்தத்தில தெளிவாப் பதிஞ்சிருக்கு. கால்களுக்கு இடையில இடைவெளியை வைச்சு பாக்கும் போது உயரம் அஞ்சு புள்ளி ஏழு இருக்கலாம். நல்ல பலசாலியா இருக்கணும், அவன் பாடியை இழுத்துட்டு போன லைன்ல இருந்தே அது தெரியுது.”

“ம்ம் ஓகே. பாடி போடப்பட்டிருந்த இடத்தில கிடைச்ச சிகரெட்ல இருந்து ஏதாவது தெரிஞ்சுதா?”

“நோ ஸார்! நார்மலா யூஸ் பண்ற சிகரெட் தான். நத்திங்க் ஸ்பெஷல்.” அந்த ஆபிசரின் முகத்தில் கவலைக்குறி தெரிந்தது.

“ம்ம் ஓகே யூ கேரியான்” என்ற மில்டன் வாயிலை நோக்கி திரும்பி சிந்தனையுடன் வெளியே வந்தார்.

பாக்கெட்டில் இருந்த மொபைல் ஃபோன் வெளியில் வரத் துடித்துக் கதறியது. அதை எடுத்து காதில் வைத்து.

“ஹலோ இன்ஸ்பெக்டர் மில்டன் ஹியர்”

“ஸார் நான் டாக்டர் மாணிக்கம் பேசுறேன்”

“சொல்லுங்க டாக்டர் பி.எம் ரிப்போர்ட் ரெடியா?”

“ஆ.. அதை பத்தி பேச தான் கால் பண்ணேன்”

“சொல்லுங்க டாக்டர்”

“அந்தாளை இரண்டு நாட்களா வைச்சு சித்திரவதை பண்ணி கொண்ணிருக்கான் ஸார். கொலை பண்ணவன் கண்டிப்பா பழிவாங்குற நோக்கத்தில தான் இதை பண்ணியிருக்கணும்.”

“எப்படி சொல்றீங்க?”

“உயிர் போனதுக்கு அப்புறம் கூட பல தடவை கத்தியால ஆழமாக் குத்தியிருக்கான் ஸார். மனசுக்குள்ள ஒரு வெறி இல்லாம இப்படி புரூட்டலா ஒரு மர்டர் யாராலயும் பண்ண முடியாது. மே பி அவன் ஒரு சைக்கோவா கூட இருக்கலாம்னு தோணுது”

“ஏன் அப்படி சொல்றீங்க”

“உயிரோட இருக்கும் போது அந்தாளை ரொம்பக் கொடுமையா சித்திரவதை பண்ணியிருக்கான். அதுக்கான தழும்புகள் உடம்பு முழுக்க இருக்கு ஸார்”

“ஹூம் டாக்டர் நான் நேர்ல வர்ரேன். இதை பத்தி நிறைய பேசணும்.”

“ஷூர் இன்ஸ்பெக்டர் நேர்லேயே வாங்க”

“தேங்க்யூ டாக்டர்” என்று சிகப்பு வட்டத்தை தொட்டு, காலை கட் செய்து, மொபைலை பாக்கெட்டினுள் திணித்தார் மில்ட்டன்.

 

 

 

 

வெளியில் நின்ற காக்கிகளில் எஸ்.ஐ யூனிபார்ம் அணிந்திருந்தவரை நோக்கிய மில்டன்

“மிஸ்டர்.ராகவன்”

“எஸ் ஸார்”

“அக்கம் பக்கத்தில இருக்கிறவங்களை கொஞ்சம் விசாரியுங்க. இந்த இரண்டு மூணு நாளுக்குள்ள இந்தப்பக்கம் சந்தேகப்படுற மாதிரி ஏதாவது வெஹிகிள்ஸ் கண்ணில பட்டிச்சான்னு முழுமையா விசாரியுங்க.. முக்கியமா இரண்டு நாளைக்கு முன்னாடி இரவு நேரம் சந்தேகப்படுற மாதிரி ஏதாவது வெஹிகிள் இந்த ஏரியால எங்கேயாவது பாத்தாங்களானு விசாரியுங்க.”

“ஓகே ஸார்”

“நான் ஜி.ஹெச் வரை போயிட்டு வர்ரேன் பாத்துக்குங்க. அப்புறம் அந்த சங்கரோட மாமாக்கிட்ட சங்கரோட மனைவியோட வீட்டு அட்ரெஸை கேட்டு வாங்கிக்கங்க.” என்று விறைப்பாகக் கூறி விட்டு இந்த கேமராக்காரர்களை எப்படி சமாளிப்பது என்று மனதில் எண்ணிக்கொண்டே வெளியில் வர முற்படவும். வீட்டின் உள்ளிருந்து ஒரு குரல்,

“ஸார் இங்க பாருங்க”. அது கான்ஸ்டபள் ராஜேந்தரின் குரல்.

“என்னாச்சு” பதற்றத்துடன் உள் நோக்கித் திரும்பினார் மில்டன்.

“இந்த லெட்டர் உள்ள கப்பேர்ட்ல கிடைச்சுது. இரத்தத்தாலேயே எழுதியிருக்கான் ஸார்.” அந்த கடிதத்தை கைகளில் வாங்கி அதில் எழுதியிருந்ததை மனதிற்குள் படித்தார் மில்டன்,

“கொலைகள் தொடரும்!” என்று எழுதப்பட்டு கீழே சற்று இடைவெளி விட்டு பெரிய எழுத்துக்களில் இரத்தத்தாலேயே தீட்டப்பட்டிருந்தது,

“இதோட முடியப்போறதில்ல!!”

நடுநிசி வேட்டை தொடரும்…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments