கே.கே யின் வீட்டிலிருந்து சற்றுத் தூரமாக ஒரு மரத்தடியில் வளையம் வளையமாக புகையை ஊதிக்கொண்டிருந்தான் சத்யா. இடையிடையே கடிகாரத்தைப் பார்த்தான். முட்கள் இரண்டும் தம்மிடையே நூற்றைம்பது பாகை கோணம் அமைக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. நேரம் சரியாக ஆறு ஐம்பத்தைந்து. பத்ரி காரினுள் இருந்தபடியே அந்த வீட்டை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.
“அட போங்க பாஸ் அந்தாளு ஒன்பது மணிக்குக் கடைக்கு வருவார்னா, நாம எட்டரை மணிக்கு இந்த இடத்துக்கு வந்தா போதாதா? இவ்வளவு காலைல வரணுமா?”
“இல்ல சத்யா அவரு கடைக்கு வந்து சேர்ரது ஒன்பது மணி. ஆனா அவரோட மனைவி கொடுத்த டீடெயில்ஸ் படி காலைல வீட்டிலயிருந்து கடைக்குக் கிளம்புறது ஏழு மணி”
“ஆமா பாஸ் அதை மறந்துட்டேன். அது எப்படி பாஸ் இரண்டு மணி நேரமா காரை தள்ளிக்கிட்டுப் போவாரா?”
“அதை தான் பாக்க போறமேடா அப்புறம் என்ன?” சத்யா கடிகாரத்தை பார்த்தான் முட்கள் இரண்டும் சேர்ந்து தம்மிடையே நூற்றைம்பது பாகை அகக்கோணத்தை அமைத்திருந்தன. வீட்டு வாசலை சலிப்புடன் எட்டிப் பார்த்தான். பெருமூச்செறிந்தான்.
“பாஸ் இன்னைக்கு நியூஸ் கேள்விப்பட்டீங்களா?”
“என்ன நியூஸ் எனி திங் ஸ்பெஷல்?”
“நேத்து மிட் நைட் டாக்டர் தவமணிதாசன் கார் ஆக்ஸிடன்ட். ஆள் மிஸ்ஸிங்.”
“அப்படியா உனக்கு யார்ரா சொன்னது?”
“காவல்துறையின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவல் பாஸ்.”
“அது யாருடா நெருங்கியவட்டாரம்?”
“ராகவன்னு எஸ்.ஐ ஆ இருக்கான் பாஸ். என் பிரண்டு தான்”
“போலீஸ் டிப்பார்ட்மென்ட்லயே ஸ்பை வைச்சிருக்க பெரிய ஆளு தான்”
“ஸ்பைலாம் இல்ல பாஸ். இன்னிக்கு அவனுக்கு பர்த்டே ட்ரீட் கேக்கலாம்னு விடிய காலைல கால் பண்ணினேன். அவசரமான வேலை அப்புறம் பண்றேன்னான். அப்படி என்னடா தலை போற காரியம்னேன். அப்போ தான் விஷயத்தை சொன்னான்.”
“ஓஹோ”
“டாக்டர் ரொம்ப நல்ல மனுசன் பாஸ்”
“இஸ் இட்? உனக்கு அவரைத் தெரியுமா?”
யாருக்கு பாஸ் தெரியும். சும்மா ஒரு ஃபார்மாலிட்டி. யாராவது காணாம போனா செத்து போனா இப்படி சொல்லணும். அது தான் பாஸ் உலக நியதி.”
“அது சரி மூடிட்டு வீட்டைக் கவனி”
“அட போங்க பாஸ் நானும் இந்த மாதிரி வீட்டில வாழ வேண்டியவன் தான் ஜஸ்ட்டு மிஸ்ஸு”
“என்னடா சொல்ற?” வீட்டு வாசலை நோட்டமிட்டபடியே கேட்டான் பத்ரி.
“பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஜீவிதானு ஒரு பொண்ணு. அவ அப்பன் கூட ஜுவல்லரி வைச்சிருந்தான். எப்படியாவது கரக்ட் பண்ணிடலாம்னு ட்ரை பண்ணேன்”
“அப்புறம் என்னாச்சு”
“கோபாலுனு ஒருத்தன் கரக்ட் பண்ணீட்டு போயிட்டான் பாஸ். அதுக்கப்புறம் அவ சதீஸ்ன்னு ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவங்க இரண்டு பேத்துக்கும் பிறந்த பையனுக்கு கோபால்னு பேர் வைச்சுக்கிட்டா.”
“ரொம்ப கேவலமான பிளாஷ்பேக்டா. உன் பெயரை கூட வைக்கல பாத்தியா?”
“ரைட்டு விடுங்க பாஸ்.”
“சரி சரி வேலையை கவனி” கேட் இலேசாக திறந்தது.
“பாஸ் பாஸ் ரெடி” கூவினான் சத்யா.
கோபாலக்கிருஷ்ணனின் கார் கேட் வழியாக வெளியே வந்து வீதிக்கு வந்தது. சத்யா ஒரே தாவாக பத்ரியின் காரிற்குள் தாவினான். கோபாலகிருஷ்ணனின் கார் வீதியில் புறப்பட்டது. சற்று நேரம் தாமதித்து அந்த காரை நேர்த்தியான இடைவெளியில் சந்தேகம் வராத வகையில் தொடர்ந்தான் பத்ரி.
கார்கள் இரண்டும் மெயின்ரோட்டின் நடுவில் வாகன வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தன. அத்தனை வாகனங்களும் டிராபிக்கில் சிக்கியிருந்தாலும், ஏதோ முன்னால் நிற்கும் வாகனம் தமக்கு ஓரவஞ்சனை செய்வதாகவே நினைப்பது போல் பின்னால் நிற்கும் வாகன சாரதிகள் ஹார்னை தம் இஷ்டத்துக்கு அழுத்திக் கொண்டிருந்தார்கள். பரபரப்பான அந்த காலை வேளை சாலை முழுவதையும், கீழே விழுந்த சாக்லெட் துண்டை எறும்புகள் மொய்ப்பது போல் நெரிசலான வாகனங்கள் மொய்த்து விட்டிருந்தன. மெல்ல மெல்ல ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்த கே.கேயின் சிகப்பு நிற ஆடிக்காரை தொடர்ந்து பத்ரியின் கார் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
“பாஸ் ஒன்பது மணிக்குக் கடைக்கு வர்ரதுக்கு, ஏன் இந்தாளு ஏழு மணிக்கே கிளம்பினார்னு சந்தேகப்பட்டேன். இப்போ தான் மேட்டர் தெளிவாப் புரியுது.”
“என்ன புரியுது?”
“இந்த டிராஃபிக்ல எங்கேருந்து அரை மணி நேரத்தில போறது. இரண்டு மணி நேரம் இங்கேயே உருட்ட வேண்டியது தான்.”
சத்யாவின் ஊகம் பொய்த்து விட்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் டிராஃபிக் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு வாகனங்கள் இயல்பு வேகத்துக்குத் திரும்பியிருந்தன.
“என்ன சத்யா அரை மணி நேரத்தில போக முடியாதா?”
“இன்னைக்கு சீக்கிரம் போறாரோ என்னமோ”
அடுத்து இரண்டு சிக்னல்கள் தாண்டி கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த சிகப்புக் காரை கண்ணால் சிறை செய்து அதை தொடர்ந்து தன் காரை செலுத்தினான் பத்ரி. கார்களுக்கு இடையே தோராயமாக மாறாத இடைவெளி பேணப்பட்டிருந்தது. சிகப்பு கார் திடீரென வலதுபக்கத் திருப்பம். பத்ரியின் கார் சறுக் என்றது. கார் நின்றுவிட்டிருந்தது. பிரேக்கை அழுத்தியிருந்தான்.
“இதென்ன பாஸ் ஸ்க்ரிப்ட்லயே இல்ல”
“சத்யா கேகே ஜுவல்லரிக்கு இந்த வழியாக் கூட போகலாமாடா?”
“பாஸ் அடுத்த நூறு மீட்டர் நேராப் போனா கடை பாஸ். இந்த வழியாலாம் போகணும்னு அவசியம் இல்லை”
“அப்படினா?”
“பாஸ் அந்தாளு வண்டியை ஃபாலோ பண்ணுங்க எங்க போறார்னு பார்த்திடலாம்.”
“நோ சத்யா! அந்த வழியில வாகனப் போக்கு அதிகமா இல்ல. நம்ம மேல சந்தேகம் வர வாய்ப்பிருக்கு. ஒரு வேளை சந்தேகப்பட்டு கூட நம்ம பாலோ பண்றமானு கண்டுபிடிக்க இப்படி பண்ணியிருப்பாரோ என்னமோ”
“இப்போ என்ன பாஸ் பண்றது?”
“நேரா ஜுவல்லரி போயிடலாம். வண்டியை மறைவாப் பார்க் பண்ணீட்டு வெயிட் பண்ணலாம். சரியான டயம்க்கு வரலனா இந்த வழி பத்தி அப்புறம் ஆராய்ச்சி பண்ணிக்கலாம்.”
“ஓகே பாஸ் வேற வழி”
சத்யா கடிகாரத்தை பார்த்தான் ஒன்பது மணிக்கு பத்து நிமிடங்கள் இருந்தன.
“என்ன பாஸ் இவ்வளவு நேரமா எங்க போயிருப்பாரு? ஒரு வேளை உண்மையிலேயே காரை உருட்டிக்கிட்டு வர்ராரா?”
பத்ரி மௌனமாக ஏதோ சிந்தனையில் இருந்தான். அடுத்த சில நிமிடங்களில் அந்த சிகப்புநிற கார் கேகே ஜுவல்லரியின் முன்னால் வந்து நின்றது. உள்ளேயிருந்து சாதாரணமாக இறங்கி கடைக்குள் நுழைந்தார் கோபாலகிருஷ்ணன்.
“பாஸ் நேரா அரை மணிநேரத்தில வரவேண்டிய கடைக்கு எதுக்கு பாஸ் ஒண்ணரை மணி நேரம் சுத்தணும். பெட்ரோல் விக்கிற விலைக்கு.. இந்தாளைலாம் காலரை புடிச்சு நாக்கை புடுங்கிக்கிற மாதிரி கேக்கணும் பாஸ். பணம் மிஞ்சிக்கிடக்குங்குற எகத்தாளம்.”
“சத்யா இதில ஏதோ மிஸ்ட்ரி இருக்கணும்.”
“பெட்ரோல் விலை ஏறினதிலயா பாஸ். அதில அமேரிக்காவோட பங்கும் இருக்குனு..”
“சத்யா பீ ஸீரியஸ். நேரா வர வேண்டிய கடைக்கு தேவையே இல்லாம எங்கேயோ போயி சுத்தி வர்ரார்னா சம் திங்க் ராங்”
“ஒரு வேளை கேகேயோட மனைவி சொன்ன அந்த பொண்ணோட வீடு அங்க இருக்குமா பாஸ்?”
“மே பி.. இருக்கலாம்”
“ஆனா அங்க நைட்டு போனா ஓகே காலங்காலத்தால எதுக்கு பாஸ் போகணும்.”
“சத்யா”
“ஸாரி பாஸ்”
“சத்யா உனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒண்ணு இங்க ஒர்க் பண்றதா சொன்னல்ல அவளை நான் மீட் பண்ணணும். முடியுமானு பாரு.”
“ஓகே கால் பண்ணி கேக்கிறேன் பாஸ். அட்ரஸ் கூட இருக்கு”
“உம் எதையாவது பண்ணு”
போஸ்ட் கம்பத்தில் மோதி அடிபட்டுக் கிடந்த காரை சுற்றி சுற்றி கான்ஸ்டபிள் ஒருவர் காமரா பிளாஷ் மூலம் அடித்துக்கொண்டிருந்தார். மில்டன் பலமான சிந்தனையுடன் காரை ஆராய்ந்து கொண்டிருந்தார். காரின் முன்பக்கத்து வலது டயர் பஞ்சராகிக் கிடந்தது. உடனடியாக பார்வையை சாலை மீது திருப்பினார். சாலையை ஆராய்ந்து எதுவுமே கிடைக்காமல் சாலை ஓரத்தை ஆராய்ந்தார். வீதி ஓரமாகக் கிடந்த அந்த முட்கம்பி மில்டனின் கண்களில் பட்டது.
“ராகவன் இது என்னனு பாருங்க”
என்று அந்த முட்கம்பியை சுட்டி கட்டளையிட்டு விட்டு இலேசாக பின்னால் திரும்பவும் அது அவரின் கண்களை உறுத்தியது. காரின் டிக்கியில் இருந்து வெளியே ஒரு பேப்பர் நீட்டிக்கிடந்தது. இலேசாக காரின் டிக்கியைத் தூக்கினார். லாக் செய்யப்படவில்லை இறப்பர் ஒன்றை வைத்து லாக் ஆகாமல் தடுக்கப்பட்டிருந்தது. உள்ளே ஒரு துண்டு பேப்பரில் இரத்தத்தால் அதே வாசகங்கள். இன்ஸ்பெக்டருக்கு சப்தநாடியும் ஒரு கணம் அடங்கித் தூக்கி வாரிப்போட்டது. கொலைகள் தொடரும் என்று எழுதப்பட்டு இறுதியில்,
“இதோட முடியப்போறதில்ல!!”