செடிகளை வளர்க்க மண் அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் மண் இல்லாமலே செடிகளை வளர்க்கும் முறைக்குப் பெயர்தான் ‘நீரியல் வளர்ப்பு’ (Hydroponics – ஹைட்ரோபோனிக்ஸ்). இது மண்ணில்லா வேளாண்மையின் (Soilless Cultivation – சாய்ல்லெஸ் கல்டிவேஷன்) ஒரு வகை ஆகும்.
ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியலாளர்களான ‘ஜூலியஸ் வொன் சாக்ஸ்’ (Julius Von Sachs) மற்றும் ‘வில்ஹெம் நோப்’ (Wilhelm Knop) ஆகியோர் 1859 – 65இல் மண்ணில்லா வளர்ப்பு முறையைக் கண்டறிந்தனர்.
கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ‘வில்லியம் ஃப்ரெடரிக் ஜெரிக்’ (William Frederick Gericke) 1929இல், 25 அடி உயரமான தக்காளிச் செடிகளை மண்ணில்லாத கரைசலில் வளர்த்து இம்முறையை அறிமுகப்படுத்தினார். ‘மண்ணைப் பண்படுத்தும் அறிவியல்’ என்ற பொருள்தரும் ‘ஜியோபோனிக்ஸ்’ (Geoponics) என்ற வார்த்தையிலிருந்து 1937இல் ‘நீரியல் வளர்ப்பு’ என்ற பொருள் தரக்கூடிய ‘நீரியல் வளர்ப்பு’ (Hydroponics) வார்த்தையை ‘ஜெரிக்’ உருவாக்கினார்.
தாவரங்கள் மண்ணை உறிஞ்சி எடுத்துக்கொண்டு வளர்வதில்லை. மாறாக, மண்ணின் சத்துகளை கரைசலாகவே வேர் மூலம் உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன. உறிஞ்சிப் பயன்படுத்தக்கூடிய நிலையில் ஊட்டச்சத்துகளை மாற்றிப் பேணுவதே மண்ணின் செயற்பாடு ஆகும். ஆகவே, நீரில் கரைந்த நிலையில் நேரடியாகத் தாவரத்தால் உறிஞ்சிப் பயன்படுத்தக்கூடிய நிலையிலான ஊடகத்தை வழங்கும்போது, மண் அவசியமில்லை என்ற சிந்தனையின் அடிப்படையில் வளர்ந்ததே இந்த நீரியல் வளர்ப்புமுறை.
நீரியல் வளர்ப்பு இரண்டு முக்கிய வகைகளாகக் காணப்படும். அவை, கரைசல் வளர்ப்பு மற்றும் ஊடக வளர்ப்பு.
கரைசல் வளர்ப்பில் வேர்த் தொகுதியைத் தாங்குவதற்கு ஊடகம் இருக்காது. செடிகளின் வேர்கள் மட்டுமே கனிம ஊட்டச்சத்துள்ள ஊடகத்தில் இருக்கும். ஊடக வளர்ப்பு முறையில் தாவரங்களைத் தாங்கிக்கொள்ள திண்ம ஊடகத்தாலான தாங்கும் ஊடகம் வேர்த்தொகுதிக்கு வழங்கப்படும். மண்ணிற்குப் பதிலாக பளிங்கு உருள்மணிகள் (Perlite – பெர்லைட்) அல்லது கூழாங்கற்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, வேர்களுக்குப் பிடிப்புத்தன்மை அளிக்கப்படுகிறது.
மண்ணில்லா விவசாயத்திற்கான ஊட்டச்சத்துக்களாக, மீன் கழிவுகள், வாத்துக் கழிவுகள் அல்லது சாதாரண உரம் போன்றவை தண்ணீரில் கலந்து பயன்படுத்தப்படுகின்றன. நீரியல் வளர்ப்பு முறை மிக மிக எளிதானது. பாரம்பரிய பயிர் வளர்ப்பிலிருந்து மாறுபட்டிருந்தாலும், பல நன்மைகளைக் கொண்டது. முதலில் விதைகளை மண்ணில் வளர்க்க வேண்டும். அவை வேர் விட்டுச் செடியாக மாறியதும் எடுத்து, துளைகளிடப்பட்ட தண்ணீர் நிரப்பப்பட்ட நீளமான பைப்புகளில் வைத்து வளர்க்க வேண்டும். வளர்ப்பு ஊடகமான நீரின் அமில, காரத்தன்மையை (pH) கவனமாகப் பரிசோதிப்பது மிக முக்கியம்.
நீரில்லா விவசாயத்தில், களைச்செடிகள் வளரும் வாய்ப்பு இல்லை. மேலும், செடிகளுக்குத் தினசரி தண்ணீர் பாய்ச்சவும் வேண்டியதில்லை. இம்முறையில் 90 சதவீத நீரைச் சேமிக்க முடியும். ஏனென்றால், மூடப்பட்ட பைப்பில் இருக்கும் துளைகள் வழியே செடிகள் வளர்வதால் தண்ணீர் ஆவியாவதில்லை. எவ்விதப் பூச்சித் தாக்குதலும், மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை, பூமியில் வளர்க்கப்படும் செடிகளைவிட மிக வேகமாக இவை வளரும். கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை இப்படி வளர்க்கலாம்.
தற்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க இந்த முறையிலான விவசாயம் மிகவும் உதவியாக இருக்கும். செயற்கை ஒளி மற்றும் வெப்பமூட்டிகளைப் பயன்படுத்தி, இம்முறையில் தாவரங்களை பசுமைகுடிலுக்குள்ளும் வளர்க்கலாம். இதன் பலன்கள் மிக அதிகமென்பதால், இன்று பயிராக்கவியலில் நீரியல் வளர்ப்பு முக்கியத்துவமுடையதாக உள்ளது.