நேசப் பெருவெளி

0
1181

நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்..

அவர் உன்னிடம்
அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;
நீயோ அவருக்கு
பேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்..

ஒரு துளி கருணைக்காகத்தான் 
வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;
நீயோ அவர்மேல்
கருணையை பெரும் மழையென கொட்டித்தீர்த்து விடுகிறாய்..

நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
ஒரு விருந்தினராக
சற்றுநேரம் 
உன் வரவேற்பறையில் அமர்ந்து செல்லவே வருகிறார்கள்;
நீதான் 
அத்தனை ஆனந்தத்துடன்
உன் வீட்டுச்சாவியையே 
அவர்களிடத்தே ஒப்படைத்து விடுகிறாய்..

சகி..
நேசத்தின் பெயரால் 
உன் வாழ்வில் ஒருவர் உள்நுழையும் போது..
நீ ஏன் இத்தனை அவசரப்படுகிறாய்..?
நீ ஏன் இத்தனை அமைதியிழக்கிறாய்..?

நேசத்தின் பெயரால் உள்நுழைந்தவர்கள்
ஒருநாள்
ஏதும் சொல்லாமல் திடீரென உன்னிலிருந்து தொலைவாகிப்போய் விடுகிறார்கள்..

அப்போது உனை பற்றிக்கொள்கிறது;
நீங்கவே நீங்காத ஒரு வருத்தம்..
அப்போது உனை சூழ்ந்துக்கொள்கிறது;
விலகவே விலகாத ஒரு இருட்டு..

இன்னும்
நேசத்தின் பெயரால்
உள்நுழைபவர்கள் எவரும்
வந்த வழியே திரும்பிச்செல்வதே இல்லை..

அவர்கள்
வெளியேறுகிறார்கள்;
உன் கண்ணீரின் வழியே..
உன் உடைந்த நம்பிக்கைகளின் வழியே..
உன் சிதைந்த கனவுகளின் வழியே..!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments