பசு மாடு

0
6358
மாடு அல்லது பசு (பசு என்பது மாட்டின் பெண்ணினத்திற்கு வழங்கும் பொதுவான பெயர்).

வீட்டு விலங்குகளில் மிகவும் பயன் தரும் விலங்கு பசு ஆகும். வைக்கோல், புல் ,புண்ணாக்கு போன்றவற்றை  உண்ணுகிறது. கழனிநீரை விரும்பிக் குடிக்கிறது. பசு மாடு கன்று போட்டு பால் தரும் இனத்தைச் சேர்ந்தது. பசு மாடு நமக்குப் பால் தருகிறது. தாயிடம் பால் அருந்த முடியாத குழந்தைகளுக்கு பசும் பால் உணவாகிறது. இவ்வாறு பல உயிர்களைக் காப்பதினால்தான் பசுமாட்டை “கோமாதா” என்று அழைக்கிறோம்.(கோ- என்றால் பசு, மாதா- என்றால் அம்மா).

இந்துக்கள் பசு மாட்டைத் தெய்வமாக மதித்து வழிபடுகின்றனர். பெண்கள் பசு மாட்டிற்கு பூஜை செய்வது உண்டு. பசுவின் சிறு நீர் “கோமயம்” என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல கிருமி நாசினி என்றும் இதனை வீட்டில் தெளித்தால் வீட்டில் உள்ள கிருமிகள் இறந்து போகும் என்றும் நம்புகின்றனர். பசுவின் சாணத்தைக் கொண்டு வீட்டின் தரையை மெழுகுவார்கள். பசுஞ்சாணமும் நல்ல கிருமி நாசினி ஆகும். பசு மாட்டின் சாணம், சிறுநீர் போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப் படும் “பஞ்ச கவ்யம்” பயிர்களுக்கு சிறந்த உரமாக ஆகிறது.

மாடுகளின் வகைகள்

காங்கேயம் காளை : காங்கேயம் தாலூக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவை.

உம்பளச்சேரி மாடு : தஞ்சை டெல்டா பகுதிகளில் வாழ்கிறது.

பர்கூர் மலை மாடு : அந்தியூர் பகுதியில் வாழ்கிறது.

புளியகுளம் பட்டி மாடு : பழைய மதுரை பகுதியில் வாழ்கிறது.

தேனி மலை மாடு : தேனி பகுதிகளில் காணப்படுபவை.

  • பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். மனிதன் இம்மாடுகளின் இறைச்சியையும் உணவாகப் பயன்படுத்துகிறான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது.
  • புராணங்களின்படி காமதேனுவும், நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். இந்தியாவில் மட்டும் அண்ணளவாக 300 மில்லியன் மாடுகள் உள்ளன. கோ என்றால் அரசன் பசு என்று இரண்டு பொருள் தரும். ஆடு மேய்த்தவன் அரசன் ஆனான் மாடு மேய்த்தவன் மன்னன் ஆனான் என்று இந்திய வரலாறு கூறுகிறது.
cow

இனங்கள்:  புராணங்களின்படி காமதேனுவும் (புனிதத்தின் சின்னம்) , நந்தினியும் தேவலோகப் பசுக்கள் ஆகும். புதுமனை புகுதல் நிகழ்விற்கு முதல் நாளில் இந்துக்கள் தம் வீடு புனிதமடைவதற்காக வெள்ளைப் பசுவை வீட்டில் கட்டிவிடும் மரபைக் கொண்டுள்ளனர்.

குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக 26 வகை மாடினங்கள் காணப்படுகின்றன. கறவை மாடுகளில் சில பிரதான வகைகளை பற்றிய குறிப்புகளை பின்வரும் பகுதியில் காணலாம். பசுக்கள் நீண்ட நாட்களுக்கு பால் கொடுக்கும் திறன் உடையவை. திடமான உடலமைப்பும் வலிமையான கால்களும் கொண்டவை. அவற்றில் சில இனங்களை கீழே காணலாம்.

கிர்
  • கிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது.
  • குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது.
  • இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு நிறமாகவும் காணப்படும்.
  • கொம்புகள் வளைந்து, அரை வட்ட நிலா போன்று இருக்கும்.
  • இவ்வின மாட்டினங்களின் பால் உற்பத்தி 1200-1800 கிலோவாகும்.
  • முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 45-54 மாதங்களாகவும், கன்றுகள் ஈனுவதற்கான இடைவெளி சராசரியாக 515-600 நாட்களாக இருக்கும்
சிவப்பு சிந்தி
  • இவ்வினம் சிவப்பு கராச்சி மற்றும் சிந்தி என்றும் அறியப்படுகிறது.
  • பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் இம்மாட்டினங்கள் அதிகம் காணப்படுகின்றன.
  • இவை சிவப்பு நிறமாகக் காணப்படும். இவற்றின் உடல் அடர்ந்த சிவப்பு நிறம் முதல் வெளிறிய சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்படும்.
  • இவ்வின மாடுகளின் பால் உற்பத்தி சராசரியாக 1100-2600 கிலோ வரை இருக்கும்.
  • சிந்தி மாட்டினங்கள் வெவ்வேறு இனங்களுடன் கலப்பினம் செய்வதற்கு பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
  • முதல் முறை கன்று ஈனும் வயது சராசரியாக 39-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி சராசரியாக 425-540 நாட்களாக இருக்கும்.
சாஹிவால்
  • சாஹிவால் மாட்டினம் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள மான்டிகோமெரி மாவட்டத்தில் இருந்து தோன்றியது.
  • இந்த மாட்டினம் லோலா (தளர்ந்த தோல்), லம்பி பார், மான்டிகோமெரி, முல்தானி, டெலி என்றும் அறியப்படுகிறது.
  • இவற்றின் தோல் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்துடன் அல்லது வெளிறிய சிவப்பு நிறத்துடன் சில சமயங்களில் வெள்ளைத் திட்டுகளுடன் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் சராசரி பால் உற்பத்தி 2725-3175 கிலோவாகவும், பால் கறவைக்காலம் 300 நாட்களாகவும் இருக்கும்.
ஹலிக்கார்
  • தற்பொழுது கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ள விஜய நகரம் எனும் பகுதியிலிருந்து இவ்வினம் தோன்றியது.
  • இம்மாட்டினத்தில் நிறம் சாம்பல் நிறமாக இருக்கும்.
  • சரியான வடிவத்துடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் நடுத்தர அளவில் இருக்கும்.
  • இம்மாட்டினங்கள் இவற்றின் வேலை செய்யும் திறனுக்கு, குறிப்பாக இவற்றின் வண்டி இழுக்கும் திறனுக்கு பெயர் பெற்றவை.
அம்ரிட்மஹால்
  • இம்மாட்டினங்கள், கர்நாடகாவிலுள்ள ஹாசன், சிக்மகளூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலிருந்து தோன்றியவை.
  • அம்ரிட்மஹால் மாடுகள் சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும், பெரும்பாலும் இவற்றின் தோல் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும்.
  • இவற்றின் கொம்புகள் நீண்டு, கூரான கருப்பு நிற முனைகளைக் கொண்டிருக்கும்.
கிலாரி
  • இம்மாட்டினங்கள் மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் மற்றும் சிதாபூர் மாவட்டங்களிலிருந்து தோன்றியவை.
  • சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
  • இவற்றின் நடை வேகமாக இருக்கும்.
காங்கேயம்
  • இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்பத்தூர் மாவட்டங்களிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோபிச்செட்டிபாளையம் வட்டங்களின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியவை.
  • திரு.நல்லதம்பி சர்க்கார் மன்றாடியார் மற்றும் பாளையகோட்டையின் தெய்வத்திரு.பட்டோகர்,  போன்றோரின் முயற்சியால் இம்மாட்டினங்கள் தனித்துவம் பெற்றவை.
  • பிறக்கும்போது இம்மாட்டினங்களின் தோல் சிவப்பு நிறமாக இருந்து பின் ஆறு மாத வயதில் சாம்பல் நிறமாக மாறிவிடும்.
  • காளை மாடுகள் சாம்பல் நிறத்துடன் கூடிய முதுகுப்பகுதியையும், முன், பின் கால்களையும் கொண்டவை.
  • வண்டியிலுக்கும் காளைகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
  • பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். ஆனால் இவ்வினத்தினைச் சேர்ந்த சில மாடுகள் சிவப்பு, கருப்பு, பழுப்பு மற்றும் பல நிறங்கள் கலந்த கலவையுடன் கூடிய தோலைக் கொண்டிருக்கும்.
  • இவற்றின் கண்கள்  அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும்.
பர்கூர்
  • ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் இம்மாட்டினம் காணப்படுகிறது.
  • பர்கூர் மாட்டினங்களின் தோல்  பழுப்பு நிறத்தில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும். சில சமயங்களில் வெள்ளை மற்றும் அடர்த்தியான பழுப்பு நிறங்களிலும் இம்மாட்டினங்கள் காணப்படும்.
  • நன்கு அமைந்த உடற்கட்டுடன், நடுத்தர அளவில் இம்மாட்டினங்கள் காணப்படும்.
உம்பலாச்சேரி
  • இம்மாட்டினங்கள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்றும் அழைக்கப்படுகின்றன.
  • இவை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் காணப்படுகின்றன.
  • உம்பாலச்சேரி இனத்தினைச் சேர்ந்த கன்றுகள் பிறக்கும் போது பொதுவாக சிவப்பு அல்லது பழுப்பு  நிறத்துடன் இருப்பதுடன்  அவற்றின் முகம்,  வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.
  • வண்டி மாடுகளுக்கு கொம்பு தீய்ப்பது பொதுவாக உம்பலாச்சேரி இன மாடுகளில் பின்பற்றப்படுகிறது.
புலிக்குளம்/ஆலம்பாடி
  • இம்மாட்டினங்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர் மாவட்டத்திலும் காணப்படுகின்றன.
  • புலிக்குளம்/ஆலம்பாடி காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன், கருப்பு நிறமாக காணப்படுகின்றன. பசு மாடுகள் சாம்பல் நிறத்துடனோ அல்லது வெள்ளை நிறத்துடனோ காணப்படும்.
  • மைசூர் பகுதி மாடுகளைப் போன்றே இம்மாடுகளும் பின்புறம் வளைந்த கொம்புகளைக் கொண்டிருக்கும்.
  • இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுகின்றன. ஆனால் வண்டிகளை வேகமாக இழுக்காது.
தார்பார்க்கர்
  • தென்கிழக்கு பாகிஸ்தானிலுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தில் இம்மாட்டினங்கள் தோன்றியவை.
  • இவை வெள்ளை சிந்தி, சாம்பல் சிந்தி, தாரி என்றும் அறியப்படுகின்றன.
  • இம்மாட்டினங்களின் தோல் வெள்ளை மற்றும் வெளிறிய சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் காளைகள் வண்டி இழுப்பதற்கும்,  உழுவதற்கும் பயன்படுகின்றன. பசு மாட்டினங்கள் அதிக பால் உற்பத்திக்கு பெயர் பெற்றவை (1800-2600 கிலோ).
  • முதல் கன்று ஈனும் வயது 38-42 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 430-460 நாட்களாக இருக்கும்.
ஹரியானா
  • ஹரியானா மாநிலத்தின் ரோடக், ஹிசார், ஜின்த் மற்றும் குவார்கன் மாவட்டங்களிலிருந்து இம்மாட்டினம் தோன்றியது.
  • இவற்றின் கொம்புகள் சிறியதாக இருக்கும்.
  • காளை மாடுகள் வேலை செய்யும் திறனுக்கு பெயர் பெற்றவை.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசு மாடுகளின் பால் கொடுக்கும் திறன் அதிகம். நாள் ஒன்றுக்கு ஒரு மாடு சராசரியாக  1.5 கிலோ பால் உற்பத்தி செய்யும். கறவை காலம் 300 நாட்கள்.
  • ஒரு கறவை காலத்தில் 600-800 கிலோ பால் உற்பத்தி செய்யக்கூடியவை. முதல் கன்று ஈனும் வயது சராசரியாக 40-60 மாதங்கள்.
காங்ரெஜ்
  • இவ்வின மாடுகள் வாட்தாத் அல்லது வேஜ்ட் அல்லது வாட்தியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றன.
  • குஜராத் மாநிலத்தின் வடகிழக்கு கட்ச் வளைகுடா பகுதியிலும் அதன் அருகிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மற்றும் ஜோட்பூர் மாவட்டங்களிலிருந்தும் இம்மாட்டினங்கள் தோன்றின.
  • இம்மாட்டினங்கள் வெள்ளை கலந்த சாம்பல் நிறம் அல்லது அடர்ந்த கருப்பு நிறத்துடன் காணப்படும்.
  • காங்ரெஜ் மாட்டினங்கள் வேகமான, அதிக திறனுடைய வேலைகளுக்கு பெயர் பெற்றவை. உழவிற்கும் வண்டி இழுப்பதற்கும் பயன்படுகின்றன.
  • இம்மாட்டினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி 1360 கிலோவாகும்.
ஓங்கோல்
  • இம்மாட்டினங்கள் நெல்லூர் என்றும் அறியப்படுகின்றன.
  • இவற்றின் தாயகம் ஆந்திரபிரதேசத்தின் ஓங்கோல் வட்டம் மற்றும் குண்டூர் மாவட்டமாகும்.
  • இவற்றின் சராசரி பால் உற்பத்தி 1000 கிலோ. முதல் கன்று ஈனும் வயது 38-45 மாதங்கள். கன்று ஈனும் இடைவெளி 470 நாட்களாகும்.
கிருஷ்ணா பள்ளத்தாக்கு
  • கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றின் வடிகால் பகுதியிலுள்ள கரிசல் மண் பகுதிகளிலிருந்து இவ்வினம் தோன்றியது.
  • இம்மாடுகள் பெரிய உடலமைப்புடன், நன்கு அமைந்த தசைப்பிடிப்புகளுடன் இருக்கும்.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த மாடுகளின் வால் தரையினை தொடும் அளவு வளர்ந்திருக்கும்.
  • பொதுவாக இவ்வின மாடுகள் சாம்பல் நிறத்தில் காணப்படுவதோடு, இவற்றின் முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால் பகுதிகளில் அடர்ந்த சாம்பல் நிறம் காணப்படும். வளர்ந்த பசு மாடுகள் வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
  • இம்மாட்டினங்களின் காளை மாடுகள் நல்ல வேலைத்திறன் மிக்கவையாதலால் உழவிற்கும், இதர விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இவ்வினத்தினைச் சேர்ந்த பசுக்களின் பால் உற்பத்தி சுமாராக இருக்கும். இவற்றின் சராசரி பால் கொடுக்கும் அளவு 916 கிலோவாகும்.
டியோனி
  • இந்த மாட்டினங்கள் டோங்கார்பட்டி, டோங்காரி, வான்னெரா, வாக்ட், பலன்க்யா, சிவேரா என்ற பல பெயர்களால் அறியப்படுகின்றன.
  • இம்மாட்டினம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாரத்வாடா பகுதியிலிருந்தும், அருகிலுள்ள கர்நாடகா மற்றும் மேற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்திலிருந்தும் தோன்றியது.
  • இவற்றின் தோல் புள்ளிகளுடன் கூடிய கருப்பு அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும்.
  • முதல் கன்று ஈனும் வயது 894-1540 நாட்களாகவும் சராசரியாக 940 நாட்களாக இருக்கும்.
  • இம்மாட்டினங்களின் பால் உற்பத்தி 636-1230 கிலோவாகவும், சராசரியாக 940 கிலோவாக இருக்கும்.
  • கன்று ஈனும் இடைவெளி 447 நாட்களாக இருக்கும்.

எருமை மாட்டினங்கள்

முர்ரா
  • மிகவும் முக்கியம் வாய்ந்த இந்த இன எருமை மாட்டினம் ஹரியானா மாநிலத்தின் ரோட்டக், ஹிசார் மற்றும் ஜின்த் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் நபா, பாட்டியாலா மாவட்டங்களிலிருந்தும், தில்லி மாநிலத்தின் தெற்கு பகுதியிலிருந்தும் தோன்றியவை.
  • இவை தில்லி, குந்தி, காலி என்றும் அறியப்படுகின்றன.
  • இவற்றின் உடல் அடர்ந்த கருப்பு நிறமாகக் காணப்படும். வாலிலும், முகத்திலும், சில சமயங்களில் கால்களிலும் வெள்ளை நிறம் காணப்படும்.
  • இவற்றின் கொம்புகள் நன்கு வளைந்திருப்பதே இந்த இன எருமைகளின் முக்கியமான பண்பாகும்.
  • இவ்வின எருமைகள் அதிக பால் உற்பத்திக்கும், பாலில் உள்ள அதிக கொழுப்புச்சத்திற்கும் இந்தியாவில் பெயர் பெற்றவை.
  • முர்ரா இன எருமைகளின் பாலில் 7 சதவிகித கொழுப்புச்சத்து இருக்கும். இவற்றின் சராசரி பால் உற்பத்தி அளவு 1500-2500 கிலோவாகும். மேலும்  இவற்றின் ஒரு நாள் சராசரி பால் உற்பத்தி 6.8 கிலோ.
  • குறைந்த உற்பத்தி கொண்ட நாட்டு எருமையினங்களை கலப்பினம் செய்வதற்கும் இவ்வின எருமைகள் பயன்படுகின்றன.
சுர்தி
  • இம்மாட்டினங்களின் தாயகம் குஜராத் மாநிலத்தின் கெய்ரா மற்றும் பரோடா மாவட்டங்களாகும்.
  • இவற்றின் தோலிலுள்ள முடி பழுப்பு நிறம் முதல் சாம்பல் நிறம் வரை வேறுபடும். தோல் கருப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
  • இவற்றின் கொம்புகள் அரிவாள் போன்று வளைந்து, நீண்டு தட்டையாகக் காணப்படும்.
  • தாடையைச் சுற்றியும், இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள நெஞ்சுப்பகுதியிலும் வெள்ளை நிறம் காணப்படுவது இவ்வின எருமைகளின் தனியான குணநலனாகும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 900-1300 கிலோவாகும்.
  • இவ்வின எருமைகளின் பால் அதிக கொழுப்புச் சத்துக்கு பெயர் பெற்றது (8-12%).
ஜஃப்ராபாடி
  • இவ்வின எருமைகளின் தாயகம், குஜராத் மாநிலத்தின் கிர் காடுகள், கட்ச், ஜாம் நகர் மாவட்டங்களாகும்.
  • இவற்றின் கொம்புகள் திடமாக வளர்ந்து, கழுத்து வரை சாய்ந்து பின் நேராக வளைந்து கூர்மையாக இருக்கும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 100-200 கிலோக்களாகும்.
  • இவ்வின காளைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதால் உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இந்த எருமையினங்கள் பொதுவாக நாடோடி மக்களான மல்தாரிகள் என்பவர்களால் வளர்க்கப்படுகின்றன.
பாதாவாரி
  • இவ்வின எருமைகளின் தாயகம் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா மற்றும் எட்டாவா மாவட்டங்களும், மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டமுமாகும்.
  • இவற்றின் உடல் செம்பு நிறத்தில் காணப்படுவது இவற்றின் தனிச்சிறப்பாகும். இவற்றின் கண் இமைகள் பொதுவாக செம்பு நிறத்திலோ அல்லது வெளிறிய பழுப்பு நிறத்திலோ காணப்படும்.
  • இவற்றின் கழுத்தின் அடிப்பகுதியில் இரண்டு வெள்ளை நிறக்கோடுகள்  காணப்படும்.
  • இவற்றின் சராசரி பால் உற்பத்தி 800-1000 கிலோவாகும்.
  • இந்த எருமையினக் காளைகள் வேலைத்திறனுக்கும் அதிக வெப்பத்தினைத் தாங்குவதற்கும் பெயர் பெற்றவை.
  • இந்த எருமையினங்களின் பாலில் கொழுப்புச்சத்து 6-12.5சதவிகிதம் காணப்படும். இந்த எருமையினங்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த தீவனத்தை அதிக கொழுப்புச்சத்து மிகுந்த பாலாக மாற்றும் திறனுடையவை.
நிலிராவி
  • இந்த எருமையினம் பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் சட்லெஜ் நதி கரையிலும், பாகிஸ்தானின் சாகிவால் மாவட்டத்திலும்(ராவி ஆற்றின் கரை) தோன்றியது.
  • இந்த எருமையினங்களின் தனிச்சிறப்பு இவற்றின் கண்களாகும்.
  • இவ்வின எருமைகளின் பால் உற்பத்தி ஒரு கறவை காலத்தில்  1500-1850 கிலோவாகும்.
  • கன்று ஈனும் இடைவெளி 500-550 நாட்களாகவும், முதல் கன்று ஈனும் வயது 50 மாதங்களாகவும் இருக்கும்.
மேசானா
  • மேசானா இன எருமைகள் பால் உற்பத்திக்காக குஜராத்தின் மேசானா நகரிலும், அருகிலுள்ள மகாராஷ்ட்டிரா மாநிலத்திலும் வளர்க்கப்படுகின்றன.
  • மேசானா இன எருமைகள் சுர்தி மற்றும் முர்ரா எருமைகளை கலப்பினம் செய்ததால் தோன்றிய எருமையினமாகும்.
  • இவற்றின் பால் உற்பத்தி 1200-1500 கிலோவாகும்.
  • கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.
நாக்பூரி
  • மகாராஷ்டிராவின் நாக்பூர், அகோலா மற்றும் அம்ராவாடி மாவட்டங்கள் இந்த எருமையினங்களின் பூர்வீகமாகும்.
  • இவை கருப்பு நிறத்துடன், கால்கள், முகம் மற்றும் வாலில் வெள்ளை நிறத்திட்டுகளுடன் காணப்படும்.
  • இந்த எருமையினங்கள் எலிட்ச்புரி அல்லது பார்பாரி என்றும் அறியப்படுகின்றன.
  • இந்த எருமையினங்களின் முதல் கன்று ஈனும் வயது 45-50 மாதங்களாகவும், கன்று ஈனும் இடைவெளி 450-550 நாட்களாகும்.
தோடா
  • தோடா இன எருமைகள் தென்னிந்தியாவின் நீலகிரி மலைப்பகுதியிலுள்ள தோடா என்ற பழங்குடிகள் பெயரைக் கொண்டவை.
  • இவை பெரும்பாலும் பழுப்பு நிறத்துடன் அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும்.
  • நீலகிரியிலிருந்து தோன்றியதால் இந்த எருமையினங்கள் மற்ற எருமையினங்களிலிருந்து வேறுபட்டவை.
  • இவற்றின் உடலில் அடர்த்தியாக ரோமங்கள் காணப்படும்.
  • இவை எப்பொழுதும் அலைந்து கொண்டே இருக்கும் தன்மையுடையவை.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments