படித்ததை பகிர்வோம்

0
1290

வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள கடமைகளைச் செய்தாலும் பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும்.

பலன் கருதி வேலை செய்பவன்தான் தனக்கென்று வாய்த்த கடமையைப்பற்றிக் குறைப்பட்டுக் கொள்வான். ஆனால் பலனில் பற்றில்லாதவர்களுக்கு எல்லா வேலைகளுமே ஒரேபோல் நல்லவைதான். சுயநலத்தையும் புலனின்ப நாட்டத்தையும் அழித்து ஆன்ம சுதந்திரம் பெறுவதற்குத் தகுந்த கருவிகளாக்கிக் கொள்வதுதான்.

நாம் எல்லோருமே நம்மைப்பற்றி மிகப் பெரிதாக எண்ணிக் கொள்கிறோம். நமது விருப்பத்தைவிட, தகுதிக்கு ஏற்பவே நமக்குக் கடமைகள் வந்து சேர்கின்றன. இதை புரிந்துகொள்ளாமல் போட்டியிடுவது பொறாமையை எழுப்புகிறது, இரக்கத்தை அழித்து விடுகிறது.

முணுமுணுப்பவர்களுக்கு எல்லா கடமைகளுக்குத் திருப்தி தராது. அவர்களின் வாழ்க்கையே தோல்விதான். நமக்கென வாய்க்கின்ற கடமைகளை எப்போதும் தாயாரான முழுமனத்துடன் செய்து கொண்டே போவோம். அப்போது நிச்சயம் ஒளியைக் காண்போம்.

அணுவிலிருந்து மனிதர் வரையில், உயிரற்ற ஜடப் பொருளிலிருந்து உலகின் மிகச் சிறிந்த உணர்வுப் பொருளான மானிட ஆன்மாவரையில் எல்லாமே சுதந்திரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் பிரபஞ்சம் முழுவதுமே சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தின் விளைவுதான்.

எந்தச் சேர்க்கைப் பொருளை எடுத்துக்கொண்டாலும் அதன் ஒவ்வோர் அணுவும் தன் சொந்த நிலையிலிருந்து விலகி செல்லவே முயல்கின்றன. அவை அவ்வாறு விலகிச் செல்லாமல் மற்ற அணுக்கள் அவற்றைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பூமி சூரியனிலிருந்து பறந்தோட முயல்கிறது. சந்திரன் பூமியிலிருந்து விலகிச் செல்லத் துடிக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்தின் அடிப்படையும் சுந்திரத்திற்கான ஒரு போராட்டமே. இந்த இயல்பின் உந்துவேகத்தால்தான் மகான் பிரார்த்திக்கிறார். திருடன் கொள்ளையடிக்கிறான்.

செயலின் பாதை சரியான திசையில் இல்லை என்றால், அதை நாம் தீமை என்கிறோம். இதே உந்துவேகம் சரியான உயர்ந்த வழியில் வெளிப்படுமானால் அதை நன்மை என்று கூறுகிறோம். ஆனால் இரண்டிலும் உந்துவேகம் ஒன்றுதான். சுதந்திரத்திற்கான போராட்டம்தான்.

தான் கட்டுண்ட நிலையில் இருப்பதை அறிந்து மகான் வேதனை கொள்கிறார். அதிலிருந்து விடுபட விரும்புகிறார். அதற்காக இறைவனை வணங்குகிறார். குறிப்பிட்ட சில பொருட்கள் தன்னிடம் இல்லையென்பதால் வேதனை கொள்கிறான் திருடன். அந்தத் தேவையைப் பூர்த்தி செய்து, அதிலிருந்து விடுபட விரும்புகிறான், அதனால் திருடுகிறான்.

உணர்வுள்ளதாகட்டும், உணர்வற்றதாகட்டும் இயற்கை அனைத்தின் ஒரே லட்சியம் சுதந்திரம் தான். அறிந்தோ அறியாமலோ ஒவ்வொன்றும் அந்தச் சுதந்திரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மகான் தேடுகின்ற சுதந்திரம், திருடன் தேடுகின்ற சுதந்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மகான் நாடுகின்ற சுதந்திரம் அவரை எல்லையற்ற இன்பத்திற்கு, விவரிக்க முடியாத ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்கிறது. திருடன் நேசிக்கின்ற ஒன்றோ அவனது ஆன்மாவை மேலும் மேலும் பல்வேறு சங்கிலிகளால் கட்டிக் சிறையிடுகிறது.

சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தின் வெளிப்பாட்டை ஒவ்வொரு மதத்திலும் காண முடியும். எல்லா நன்னெறிகளுக்கும் சுயநலமின்மைக்கும், அதாவது “ சிறிய உடம்பே தாங்கள்” என்று மனிதர்கள் எண்ணுவதிலிருந்து விடுபடுவதற்கும் அதுதான் அடிப்படையாக உள்ளது.

நல்லது செய்கிறான் என்றால் பிறருக்கு உதவுகிறான் என்றால் நான், எனது என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவனால் அடங்கிக் கிடக்க முடியவில்லை என்பதே பொருள். இந்தச் சுயநலத்தை எவ்வளவு விடலாம் என்பதற்கான எல்லைகள் எதுவும் இல்லை. முழுமையான சுயநலமின்மையே லட்சியம் என்றுதான் மிகச் சிறந்த நன்னெறிக் கோட்பாடுகள் எல்லாமே போதிக்கின்றன.

முழுமையான சுயநலமின்மையை ஒருவன் அடைந்தால் அவன் என்ன ஆவான்? அவன் அதன்பிறகு ஒரு சிறியவனாக, திரு. இன்னார் ஆக இருக்க மாட்டான். எல்லையற்ற விரிவைப் பெற்று விடுவான். முன்பு அவனுக்கிருந்த சிறியதான தனி மனிதத்துவம் என்றென்றைக்குமாக அவனிடமிருந்து போய்விடும். அவன் எல்லையற்றவனாகி விடுவான்.

சுவாமி விவேகானந்தரின் கர்மயோகம் சொற்பொழிலிருந்து.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments