பாம்பு

0
4512

பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவையெனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தக்கூடியவை.

பாம்புகளில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு.நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் உணவுக்காகவும் எதிரி விலங்குளையும் இரைகளையும் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து வெளியேறி கடிபடும் விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

பாம்பின் பிழையன்று தீண்டிப் போதல்!

அவன் மடிமேல் வலந்தது பாம்பு;

பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;

பாம்பு பூண்; பாம்பு தலைமேலது;

– பரிபாடல் 4 – திருமால்.

இந்தியாவிலே 230 வகையான பாம்பினங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 50 இனங்களே நச்சுடையவை. ஒருவகையான நச்சுப்பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்குகின்றது. இவ்வகையில் சேர்ந்ததே நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. வேறு சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து குருதி உறைவதையும் நிறுத்தவல்லது. கண்ணாடி 

விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்தது. இலங்கையில் சுமாராக 216 வகைப் பாம்பு இனங்கள் உள்ளன.

  • ராஜநாகம்
  • நாகப்பாம்பு (நல்ல பாம்பு)
  • கட்டுவிரியன்
  • கண்ணாடி விரியன்
  • சுருட்டைப் பாம்பு
  • பவளப் பாம்பு
  • வாளைக்கடியன்
  • கடற்பாம்புகள்
  • புடையன்
  • விரைந்தோடும் ஆப்பிரிக்க கருப்பு மாம்பா

சங்க இலக்கியங்களில் பெரிதும் பாடப்பட்டுள்ளது பாம்பு. சோதிடக்கலையிலும் ராகு அல்லது கேதுவை பாம்பென்றே கருதி வந்துள்ளனர்.

 

Snake

ராஜநாகம்: குறைந்தபட்சம் எட்டு முதல் 20 அடி நீளம் வரை இருக்கும். ராஜநாகத்தின்  தாயகம் தென்கிழக்கு ஆசியா.மற்ற வகை பாம்புகள் முட்டை,ஏலி  என சாப்பிட்டாலும், “ராஜநாகம்” பாம்பை மட்டுமே உணவாக உட்கொள்ளும். அதிலும், சாரை பாம்புகளையே பெரும்பாலும் உணவாக சாப்பிடும். இவ்வகை பாம்புகள் இனப்பெருக்க காலத்தின்போது, 30 முட்டைகள் வரை இடும். இதன் விஷம் ஒரே நேரத்தில் பலரை கொல்லும் தன்மை கொண்டது. முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிப் பாம்பு கூட மரணத்தை விளைவிக்கும் ஆற்றலுடன் தான் பிறக்கின்றது.

தமிழர் மட்டுமன்றி உலக மக்கள் வாழ்வில் பெரும்பங்கு வகிப்பவை பாம்புகள். ஆயினும் பாம்புகள் குறித்த தவறான கருத்துக்கள், மூட நம்பிக்கைகள் நமது சமூகத்தின் வேர்களினூடே விரவிக் கிடக்கின்றன. இந்து வழிபாட்டு முறைகளில் பாம்புக்கு பெரியதோர் இடமுண்டு. நாக கன்னி, அரவான், உலுப்பி, சங்கன், புற்றீசர் என்று பலவகைகளில் நம் மக்கள் பாம்புகளை வழிபட்டு வந்துள்ளனர். இந்து மதம் மட்டுமன்றி பௌத்த மதத்திலும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட நாக வழிபாடு காணப் படுகிறது.

காட்டுயிர்களில் பிரதானமான ஓரிடம் பாம்புகளுக்கு உண்டு. இருவகைப்பட்ட (நச்சு மற்றும் நச்சற்ற) பாம்புகளும் தற்போதைய சூழலியல் அமைப்பில் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இடைநிலை கொன்றுண்ணிகளாய் பாம்புகள் நமக்கு ஆற்றி வரும் பங்கை விளக்குதல் எளிதன்று.

Snake

பாம்புக்கடி: பாம்புகள் தேவையின்றி யாரையும் கடிப்பதில்லை. தனது உயிருக்கு ஒரு ஆபத்து என்று அது கருதினால் ஒழிய அது உங்களை தீண்ட முயற்சிக்காது.

அது வெளியேற ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டால், அது தான் போக்கில் போய் விடும். மேலும் பல நேரங்களில் பாம்புகள் கடித்தாலும் நஞ்சை உள்செலுத்துவதில்லை.

நஞ்சை செலுத்துதல் ஒரு இச்சைச்செயலாகும். அது அனிச்சை செயல் அல்ல. எனினும் நஞ்சு உள்ளே சென்றிருக்கிறதா என்பதை பாம்பு மட்டுமே அறியும் என்பதால் அனைத்து பாம்புக்கடிகளும் wet bite ஆகவே கருதப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

சிகிச்சை: பாம்பின் கடிக்கு சிகிச்சை மிகவும் அவசியம். கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினால் கடி பட்டவரை காப்பாற்றலாம்.

  • அமைதி காக்க வேண்டும். கடி பட்டவரை பதற்றம் அடைய செய்ய கூடாது.
  • சாதாரண மாத்திரை ஒன்று கொடுக்கலாம். அது கடிபட்டவருக்கு ஆறுதல் அளிக்கவே.
  • கடிபட்ட இடத்தில் கட்டு எதுவும் போடக்கூடாது. மேலும் கத்தியால் கீறி விட்டு ரத்தத்தை உறிவதும் தவறான அணுகுமுறையாகும்.
  • உடனே கடிபட்டவரை நச்சுமுறி மருந்து உள்ள ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எந்த சிகிச்சையும் அளிக்கத்தேவையில்லை.

நாட்டு மருந்துகள், மந்திரம் ஓதுதல், லெக்சின் (Lexin), திரியாக் (Thiriyaq) போன்ற பதிவு பெற்ற மருந்துகள், போன்ற வழிமுறைகளை தவிர்க்க வேண்டும்.

இருளர் சமுதாயம் பாம்புகளின் மூலமே வாழ்வாதாரத்தை பெறுவதால் காலங்காலமாய் செய்த வேலையின் மூலம் சில நச்சுமுறி மூலிகைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மூலிகைகளில் இருக்கும் மூலப்பொருள் பற்றி எந்தவித ஆராய்ச்சியும் இதுவரை நடந்ததில்லை.

ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பாம்பு நம் வீட்டிற்குள் வருவதில்லை. நாம் தான் அதன் இருப்பிடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகிறோம். அடுத்த முறை பாம்பு ஒன்று வீட்டினுள் நுழைந்தால் அதை அடிக்க கட்டையை தேடாமல் உங்கள் அருகில் இருக்கும் தீயணைப்புத் துறைக்கு அல்லது வனத்துறை அலுவலகத்துக்கோ தொடர்பு கொண்டு தகவல் சொல்லுங்கள். அவர்கள் அந்த பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் விட்டு விடுவார்கள்.

பாம்பும் அவை சார்ந்த மூடநம்பிக்கைகளும்

கல்வியறிவு நிறைந்த இந்த சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

கொம்பேறி மூக்கன்: இந்த பாம்பு ஒருவரை தீண்டிவிட்டால் மரத்தின் உச்சியில் ஏறி நின்று அவர் எரிக்கப்பாடுகிறாரா என்று பார்க்குமாம். உண்மை என்னவென்றால், கொம்பேறி மூக்கன் நச்சற்ற பாம்பு.  இதை நான் கையில் வைத்து ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.

பாம்புக்கொலை

ஒரு பாம்பை கொன்றுவிட்டால் அந்த இணை கொன்றவரை தேடிச் சென்று பழிதீர்க்கும். உண்மை என்னவென்றால் ஒரு பாம்பு கொள்ளப்படும் போது அது மஸ்க் என்ற ஒரு திரவத்தை வெளியேற்றும். இனச்சேர்க்கைக்கு உதவும் அந்த மஸ்க்கால் ஈர்க்கப்பட்டு பிற பாம்புகள் அங்கு வரும்.

இசைக்கேற்ப நடனமாடும்

காற்றில் வரும் ஒலி அலைகளை முழுவதும் கிரகிக்கும் தன்மை பாம்புகளுக்கு கிடையாது. அவை நிலவழி அதிர்வுகளின் மூலமே தன்னை சுற்றி நடப்பவற்றை அறிந்து கொள்கின்றன. வாசனைகளின் மூலம் அறிந்து கொள்ளும் திறனும் பாம்புகளுக்கு வாய்த்திருக்கிறது. நாக்கை நீட்டி நீட்டி பாம்பு பார்ப்பது தீண்டுவதற்கு அன்று. நாக்கை உள்ளிழுத்த பின் மேலண்ணத்தில் இருக்கும் ஜேக்கப்சன் உறுப்பை நாக்கால் தொடும். இந்த ஜேக்கப்சன் உறுப்பே வாசனைகளை பிரித்தறிய உதவுகிறது. பாம்புகளுக்கு செவிப்பறைகள் கிடையாது. மகுடிக்கு பாம்புகள் ஆடுவதுண்டு. ஆனால் இசைக்கு அல்ல. அந்த மகுடிக்கு பதில் நீங்கள் ஒரு வெள்ளைத்துணியை ஆட்டினால் கூட அதற்கேற்ப பாம்பு அசையும்.

பாம்பு நடனம்

நாகமும் சாரையும் இணையும் என்று நம்புகிறார்கள். உண்மையில் இரு பாம்புகள் பின்னிப் பிணைவது ஒரு இனப்பெருக்க நிகழ்வே. உற்று நோக்கினால் இரண்டுமே சாரைப்பாம்புகள் என்று அறியலாம்.

நஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள்

பாம்புகளின் நஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மருத்துவத்துறையில் பல்வேறு சிகிச்சைகளுக்கு உதவுகின்றன. அதில் முக்கியமானவை நச்சுமுறி மருந்து தயாரிப்பு மற்றும் இருதய நோய்க்கான மருந்துகள். பாம்புக்கடிக்கான நச்சுமுறி மருந்து பாம்பும் நஞ்சில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. மேலும், மாரடைப்பு வந்தவர்கள் உட்கொள்ளும் எப்டிபிபடைட் (Eptifibatide) மற்றும் டிரோபிபான் (Tirofiban) போன்றவையும் குருதி உறையாமல் தடுக்கும் ரஸ்ஸல்ஸ் வைப்பர் வேனோம் போன்றவையும் மருத்துவத்துறைக்கு அத்தியாவசியமாய் இருக்கின்றன. சமீபகாலமாய், சில பாம்புகளின் நஞ்சில் இருந்து புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உடைய புரதங்களை எடுக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். மரத்துப் போகும் தன்மை கொண்ட நச்சுக்களில் இருந்து நரம்பியல் வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments