பிரச்சினை என்பது எமது உடன்பிறப்பு. எமக்கு எது இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இல்லாத நாள் இல்லை. இல்லவேயில்லை. ஒட்டுண்ணிபோல் எப்படியோ பிரச்சினைகள் எம்மோடு சேர்ந்துகொண்டு எமது ஆற்றலின் சாரத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. வாழ்வின் அமைதியான போக்கினை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மாற்றுவதில் பிரச்சினைகள் தமது அளப்பரிய பங்கினைச் செலுத்துகின்றன. அதாவது ‘மாற்றம்’ ஏற்படுத்தும் ஒரு காரணியாகவே பிரச்சினை உள்ளது. பிரச்சினை ஒன்றினால் வாழ்க்கை நெறிதவறிப் போகாமல் இருக்க, அப்பிரச்சினையைச் சமாளித்துக் கடந்து இயல்பாகவே வழிநடத்தும் திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டிய அவசியம் பற்றியே இக்கட்டுரை எடுத்துக்கூறும்.
பிரச்சினை ஒன்றை நாம் சந்திக்கும்போது தடுமாற்றம், பயம்,கோபம், பதற்றம் போன்ற உணர்ச்சிகள் எழுவதை ஒவ்வொருவரும் அனுபவத்தில் கண்டிருப்போம். மனிதன் நாகரிகத்தில் எவ்வளவோ முன்னேறிவிட்டான் எனக்கூறப்பட்டிருந்தாலும் அவனுக்கு இன்னும் உடல், உளரீதியான பிரச்சினைகள் இருந்துகொண்டேயிருக்கின்றன. பசி,தாகம்,நோய், பாதுகாப்பு என்பவை உடல்ரீதியான பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. இவைகளைச் சமாளிப்பதில் உலகில் வாழும் அரைப்பங்கினர் வெற்றிகண்டிருந்தபோதும் ஏனையோருக்கு இவைகள் பிரச்சினைகளாகவே இருக்கின்றன. இப்பிரச்சினைகளைப் பூண்டோடு இல்லாமற்செய்ய எவராலும் எக்காலத்திலும் முடியாது. உடம்பு நிரந்தரமான ஒன்றல்ல. அது தொடர்ச்சியாக மாற்றத்திற்கு உட்படும் ஒரு வஸ்துவாக உள்ளமையால் இப்பிரச்சினைகள் எவ்வாறோ இருந்தே தீரும். விஞ்ஞானத்தின் அளப்பரிய முன்னேற்றம் உடல் ரீதியான பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து தீர்வுகள் கண்டுள்ளபோதிலும் அத்தீர்வுகளால் நிரந்தரமாக அப்பிரச்சினையைத் தீர்த்துவிட இயலாமல்தான் உள்ளது. உள ரீதியான பிரச்சினையோ அதைவிட ஆழமாகவும், நீளமாகவும் உள்ளது. மனோ தத்துவ நிபுணர்கள், உளரீதியான பிரச்சினைகளுக்கு எவ்வாறு பரிகாரம் காணலாம் என்பதையே தங்கள் பிரச்சினையாகக்கொண்டு ஆராய்கிறார்கள். அந்த ஆராய்ச்சி முடிவின்றித் தொடர்கதையாகவே போய்க்கொண்டிருக்கின்றது. உள்ளம் என்பது ஆழம் கண்டுபிடிக்க முடியாத ஒரு நுண்பொருள் என்பதனால்தான் முடிவில்லாத ஒரு ஆராய்ச்சியாக உளவியல் உள்ளது. உள்ளத்தில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே சமயங்கள், தத்துவங்கள், கோட்பாடுகள் என்பன முயன்று வருகின்றன. இந்த முயற்சி மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை இடையிடின்றித்தொடர்ந்து கொண்டே வருகின்றது. ஆனால் ‘ஒன்றை நீக்கின் அது ஒழிந்திட்டொன்றாம்’ என்பதுபோல புதிய புதிய பிரச்சினைகள் தோன்றி உள்ளத்தைக் குடைந்து வாட்டி எடுக்கின்றன. சோதிடம், மாந்திரீகம், அருள் வாக்குக்கேட்டல் என்பவை மூலமும் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் துடிப்பதைக் காணலாம். ஆனால் அவற்றினால் பரிகாரம் தற்காலிகமானதே! பிரச்சினைகள் சிரஞ்சீவியாகவே உள்ளமையால் பிரச்சினைகளை வைத்தே பணம் சேர்ப்போர் எங்கும் உள்ளனர். பிரச்சினை உள்ளவர்கள் அநேகராக எப்போதும் இருந்து தங்கள் பணப்பெட்டியை நிரப்பிக்கொள்ள வழிசெய்யவேண்டும் என்பதே அவர்களுக்குள்ள பிரச்சினையாகும்.
ஒரு காலத்தில் சில முனிவர்கள், ரிஷிகள் என்போர், தங்களுக்கு உலக மக்களின் பிரச்சினைகள் தடையாக உள்ளன எனக்கருதிக்கொண்டு அவர்களின் தொடர்பினை அறுத்துக்கொண்டு காடுகளிலும், மலைக்குகைகளிலும் சென்று தங்கித் தனியாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்போதும்கூடச் சிலர் இவ்வாறு இருப்பதாக அறியப்படுகிறது. எனினும் மக்களின் பிரச்சினையை மக்கள் நடுவில் இருந்து தீர்க்கவல்ல மாதவயோகிகளே மாமனிதர்களே எமக்கு இன்று தேவைப்படுகின்றனர். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அதன் மூலவேர் எதுவரை ஓடியிருக்கிறது என்பதை அறியவேண்டியது அவசியம். அதைச் சரியாக அறிய முடியுமானால் மாத்திரமே தீர்வுக்கு ஒரு வழி காணலாம். மூலவேரை விட்டுப் பக்கவேர்களை மட்டும் கண்டுவிட்டு பிரச்சினையைத் தீர்க்கப் புறப்பட்டால் இருக்கிற பிரச்சினையை இன்னும் பெருப்பித்துவிட்டுச் சிக்கலாக்குவதே அதன் பலனாக இருக்கும்.
பிரச்சினை ஏற்படுவதற்குச் சாதாரணமாக பிறரையே குற்றம் சாட்டுதல் இயல்பாக உள்ளது. நவீன உளவியல் ஆராய்ச்சியானது, பிரச்சினைகள் பிறரால் விளைவது இல்லை, தன்னால் தனக்கு ஏற்படுத்திக்கொள்ளப்படுகிறது என்றே கண்டுபிடித்திருக்கிறது. இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களை அறிந்தோ, அறியாமலோ பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வதால் அவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சமூகப்பிரச்சினையாக, இனப்பிரச்சினையாக, நாட்டுப்பிரச்சினையாக. தேசப்பிரச்சினையாக ஏன் உலகப்பிரச்சினையாகவோ பரிணமித்துவிடுகின்றன. இதைப்புரிந்து கொள்வது இலகுவானது அல்ல எனினும் எல்லா உண்மைகளையும் புரிந்துகொள்வது கடினமாக இருப்பது போலவே இதுவும் என்பது உண்மையாகும்.
ஒருவருடைய தனி வாழ்க்கையிலோ, குடும்ப வாழ்க்கையிலோ பிரச்சினை ஏற்படும்பொழுது ஒருபோதும் மனங்குழம்பிவிடக்கூடாது. குழப்பமில்லாத அமைதியான, நடுநிலை உணர்வுகொண்ட மனத்தினற்றான் பிரச்சினை ஒன்றின் ஆழ அகலத்தையும், ஆணிவேரையும் கண்டுபிடிக்க முடியும்.
ஓவ்வொரு செயலையும் செய்யும்போது அச்செயலை ஏன் செய்கின்றோம் என்று சிந்தித்துச் செய்யவேண்டும். நாம் செய்யும் செயலின் பின்விளைவுகள் எவை-அதனால் ஏற்படும் பிரச்சினைகள் எவை என்ற விழிப்புணர்வோடு நிதானமாக செயலில் இறங்கவேண்டும். தன்னம்பிக்கையையும், துணிவையும், தைரியத்தையும் மனதில் வளர்த்துக்கொண்டாற்றான் பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க முடியும். பிரச்சினைகளைக்கண்டு ஓடி ஒதுங்குவதோ நடுங்குவதோ ஆகாது. உணர்ச்சிக்கு மட்டுமே அடிமைப்பட்டு அறிவுக்கு இடங்கொடாதவர்க்குப் பிரச்சினையின் உட்சொரூபத்தைக் காண முடியாமல்போகும்.
ஓவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினையானது அவரவரின் குடும்பப் பின்னணி, சூழல், பிரச்சினை ஏற்பட்ட காலம், இடம், அவரவர் மனப்பாங்கு என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது. ஆகையால் ஒவ்வொருவருக்கும் பிரச்சினையின் பரிமாணம் வௌவேறு அளவினதாயிருக்கும். அதனாற்றான் ஒருவரின் பிரச்சினையை வேறு ஒருவர் முற்றிலும் தீர்த்து வைக்க முடியாதுள்ளது. விவேகமும், புத்திபூர்வமான தெளிவான சரியான அணுகுமுறையையும் தன் எல்லாச்செயல்களிலும் கடைப்பிடிக்கும் ஒருவருக்கே பிரச்சினையைத் திறமையாக எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் திறனிருக்கும்.
பிரச்சினைகளைத் தங்களுக்குள் தீர்த்து உடன்பாடு காண முடியாதவர்கள் நவீன சட்டங்களின் அடிப்படையில் அமைந்த நீதி மன்றங்களை நாடி வழக்காடி ஏதோ ஒரு வகையில் தீர்த்துக்கொள்வது வழமையாயினும், இரு தரப்பினரும் பெரும்பாலும் மீண்டும் ஒன்றுசேர்ந்து முன்போல இணக்கமாய் வாழ முடியாதபடியே தீர்ப்புக்கள் அமைந்துவிடுகின்றன. பிரச்சினை ஏற்பட்டபோது இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு அழியாமல் அப்படியே இருந்துவிடுகிறது. இதனால் எவ்வளவு சரியான நீதிமன்றத்தீர்ப்பே ஆயினும் அதனால் பிரச்சினை முற்றாகத் தீர்ந்துவிட்ட மனஅமைதி கிடைப்பதில்லை. எனவே நீதி மன்றங்களாலோ. தண்டனைகளாலோ பிரச்சினைகளை மேலோட்டமாகத் தீர்க்கலாமே தவிர அதனால் ஏற்பட்ட வடுக்களை ஒரு போதும் தீர்க்க முடியாது. அன்பு, கருணை, இரக்கம், மனிதாபிமானம் பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் ஆதியாம் மேலான பண்புகளைக் கடைப்பிடித்து நடப்பவர்க்குப் பிரச்சினைகள் வந்தாலும் அவை அவர்களது மனத்தின் நடுநிலையைப் பாதிக்கும் அளவுக்கு வலிமையுடையனவாய் இருக்காது. அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினையையே படிக்கலாலாகக் கொண்டு முன்னேறி வெற்றிகரமான தீர்வினை எட்டிவிடுவார்கள்.